Published:Updated:

லண்டனில் இம்ரான்கான் தூதர்கள் மீது ஷூ, முட்டை வீச்சு!-ஊர்வலத்தில் இருந்து தப்பி ஓட்டம்

எம்.குமரேசன்

`சுதந்திரமான காஷ்மீர்' என்ற பெயரில் லண்டனில் நடைபெற்ற ஊர்வலத்தில் ரகளை ஏற்பட்டது.

Protest
Protest

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால், இந்தியா மீது பாகிஸ்தான் கடும் கோபம் கொண்டுள்ளது. இந்தியாவுக்கு எதிராக உலக நாடுகளைத் திரளவைக்க பாகிஸ்தான் முயன்றாலும், ஆதரவு கிடைக்கவில்லை. இதற்கிடையே, லண்டனில் காஷ்மீர் மக்கள், பாகிஸ்தானியர்கள் மற்றும் காலீஸ்தான் ஆதரவு அமைப்பைச் சேர்ந்தவர்கள் `சுந்திரமான காஷ்மீர் ' என்ற பெயரில் 3-ம் தேதி நாடாளுமன்ற சதுக்கத்திலிருந்து இந்தியத் தூதரகம் வரை ஊர்வலம் சென்றனர்.

Rally
Rally

ஜம்மு - காஷ்மீர் மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்களும் இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். அதேவேளையில், பாகிஸ்தானைச் சேர்ந்த அரசியல்வாதிகள் ஊர்வலத்தில் பங்கேற்பதை ஏற்பாட்டாளர்கள் விரும்பவில்லை. ஆனால், ஏற்பாட்டாளர்கள் விருப்பத்துக்கு மாறாக பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்த தெக்ரிக் இ இன்ஷாஃப் கட்சித் தலைவர் சுல்தான் மக்முத் செளத்ரி உள்ளிட்ட மூவரை ஊர்வலத்தில் பங்கேற்க அனுப்பிவைத்தார்.

ஏற்கெனவே, `ஊர்வலத்தில் பாகிஸ்தான் ஆதரவு கோஷங்கள் எழுப்பக் கூடாது, பாகிஸ்தான் தேசியக் கொடியையும் பயன்படுத்தக் கூடாது' என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால், பாகிஸ்தான் தூதரகமோ இந்தியாவுக்கு எதிரான போராட்டமாக இதைச் சித்திரித்து காட்ட முயன்று கொண்டிருந்தது. இந்நிலையில், இம்ரான் கான் தூதர் சுல்தானும் ஊர்வலத்தில் பங்கேற்க வந்தது அங்கிருந்தவர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

protest
protest

சுல்தானைச் சுற்றி 35 பாதுகாவலர்கள் இருந்தனர். பாதுகாவலர்களை மீறியும் சுல்தான் மீது முட்டை எறியப்பட்டது. ஊர்வலத்தில் பங்கேற்க முயன்ற மற்றொரு பாகிஸ்தான் அரசியல்வாதி யாஷின் மீது ஷூ வீசப்பட்டது. பாகிஸ்தானைச் சேர்ந்த அரசியல்வாதிகள், ஊர்வலத்தில் சென்றவர்களிடையே மைக்கில் பேச முயன்றனர். அதற்கும் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. மக்கள் எதிர்ப்பால் பாகிஸ்தான் அரசியல்வாதிகள் ஊர்வலத்திலிருந்து வெளியேறினர். ஊர்வலத்தின் முடிவில், இந்தியத் தூதரகத்தின் மீது கல்வீச்சு நடத்தினர். இதில், கண்ணாடிகள் உடைந்தன. சம்பவம் குறித்து இந்தியத் தூதரகம் தரப்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.