Published:Updated:

நெருக்கும் கூட்டணிக்கட்சிகள்; மிரட்டும் அமைச்சர்கள்! - `எம்.பி சீட்'டால் கதிகலங்கும் அ.தி.மு.க

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

``நாங்கள் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு ஆதரவு அளித்ததால்தான் நீங்கள் ஆட்சியில் நீடிக்கிறீர்கள். அடுத்தடுத்து தேர்தல் வரப்போகிறது நாங்கள் உங்களோடு இருக்கணுமா வேண்டாமா முடிவு செய்துகொள்ளுங்கள்" - பிரேமலதா

ராஜ்ய சபா சீட் கேட்டு ஒரு பக்கம் பா.ஜ.க, தே.மு.திக உள்ளிட்ட கூட்டணிக்கட்சிகள் அ.தி.மு.க தலைமைக்கு நெருக்கடி கொடுத்துக்கொண்டிருக்கின்றன. மற்றொரு பக்கம் அ.தி.மு.க-வின் மூத்த நிர்வாகிகளான மைத்ரேயன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி என எடப்பாடிக்குக் குடைச்சல் மேல் குடைச்சல் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் ஒரு சில அமைச்சர்கள், ``எனக்கு சீட் கொடுக்கவில்லையென்றால் தி.மு.க-வுக்குச் சென்றுவிடுவேன்" என்று அ.தி.மு.க தலைமையைப் பகிரங்கமாக மிரட்டத் தொடங்கியிருக்கிறார்கள்.

ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி
ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி

இதனால் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் தாமதம் ஆவதாகச் சொல்கிறது கோட்டை வட்டாரம். அ.தி.மு.க-வில் தலைமைக்கு நெருக்கடி கொடுக்கும் விதம் ஆச்சர்யமாக இருக்கிறதே. எதற்காக இந்த நெருக்கடி. எடப்பாடியின் அடுத்த மூவ் என்ன என்று விசாரிக்கத் தொடங்கினோம். தமிழகத்தில் உள்ள 6 ராஜ்ய சபா உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதையடுத்து, மார்ச் 26-ம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அ.தி.மு.க, தி.மு.க சார்பில் தலா 3 மாநிலங்களவை எம்.பி-க்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலின்போது கூட்டணி பேச்சுவார்த்தையில் பா.ம.க-வுக்கு ஒரு சீட் வழங்கப்படும் என்று அ.தி.மு.க ஒப்பந்தம் செய்து இருந்தது. அதனடிப்படையில் கடந்த மாநிலங்களவை எம்.பி தேர்தலில் அ.தி.மு.க சார்பில் பா.ம.க-வுக்கு ஒரு சீட் வழங்கப்பட்டது. இந்த நிலையில் அப்போது நடந்த கூட்டணி பேச்சுவார்த்தையின்போது தே.மு.தி.க-வும், பா.ம.க-வுக்கு இணையாக சீட் எங்களுக்கு ஒரு சீட் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை அழுத்தம் திருத்தமாக வைத்தது. ஆனால், அப்போது அ.தி.மு.க கூடுதல் சீட் தரவில்லை. அதே நேரத்தில், தேர்தலுக்குப் பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்று அ.தி.மு.க உத்தரவாதம் அளித்தது.

ஏ.சி.சண்முகம்
ஏ.சி.சண்முகம்

அதன் பேரில் மாநிலங்களவை எம்.பி சீட் வேண்டும் என்று தே.மு.தி.க கேட்டு வருகிறது. இந்த நிலையில் பிரேமலதா, "நாங்கள் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளித்ததால்தான் இந்த ஆட்சி நீடிக்கிறது. எங்களால்தான் அ.தி.மு.க இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது. எனவே, அடுத்து அடுத்து வரக்கூடிய தேர்தலில் நாங்கள் உங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டுமென்றால், தே.மு.தி.க வுக்கு மாநிலங்களவை எம்.பி சீட் ஒதுக்க வேண்டும். சீட் வழங்காத பட்சத்தில் கடுமையான முடிவை நாங்கள் எடுக்க நேரிடும்" என்று எச்சரிக்கை விடும் விதத்தில் பேசியிருக்கிறார்.

அதே நேரத்தில் பா.ஜ.க-வும் சீட் கேட்க ஆரம்பித்துவிட்டது. காரணம், "எங்களது நிர்வாகிகளுக்கு ஒரு சீட் கொடுத்தால் கண்டிப்பாக உங்களது ஆட்சிக்கும் தமிழகத்திற்குத் தேவையானவற்றை மத்தியிலிருந்து கேட்டு பெறுவதற்கும் சுலபமாக இருக்கும் என்றதோடு மத்திய மாநில அரசுகளை இணைக்கும் ஒரு பாலமாக இது அமையும்" என விதத்தில் தமிழக அரசைக் கையாண்டு கொண்டிருக்கிறது பா.ஜ.க தலைமை.

எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம்
எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம்

அதே நேரத்தில் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி சீட் பெறுவதற்காக டெல்லி தலைமையை நாடிக்கொண்டிருப்பதோடு, எடப்பாடி கிரீன் சிக்னல் காட்ட வேண்டும் என்பதற்காகப் பல வழிகளில் தீவிரமாக முயற்சி செய்துகொண்டிருக்கிறார். பா.ஜ.க, தே.முதிக, த.மாகா ஒரு பக்கம் நெருக்கடி கொடுக்கும் நிலையில் அ.தி.மு.க-வில் உள்ள மூத்த நிர்வாகிகள் எம்.பி சீட் கேட்டு அ.தி.மு.க தலைமைக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

தம்பிதுரை, கே.பி.முனுசாமி, மைத்ரேயன், நத்தம் விஸ்வநாதன், கோகுல இந்திரா, என்.ஆர்.சிவபதி, ஏ.சி சண்முகம், சேலம் இளங்கோவன் உள்ளிட்ட நீண்ட பட்டியல் கொண்டு நிர்வாகிகள் சீட் கேட்க ஆரம்பித்துள்ளனர். ஆனால் அ.தி.மு.க தலைமை என்ன நினைத்துக்கொண்டிருக்கிறது என்றால் வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க ஆட்சியைப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் டெல்லியில் தங்களுக்கென்று விசுவாசமான ஒரு ஆள் இருக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி நினைக்கிறாராம். அந்த வகையில் எடப்பாடி தம்பிதுரையையும், ஓ.பி.எஸ் கே.பி.முனுசாமியையும் டெல்லிக்கு அனுப்ப வேண்டும் என்பதில் தீவிரமாகியிருக்கிறார்கள்.

பிரேமலதா
பிரேமலதா
என்.ஜி.மணிகண்டன்

இதனால் கொங்கு மண்டலம் மற்றும் தென் மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் அ.தி.மு.க தலைமை வேண்டுமென்றே எங்களது மாவட்டத்தைப் புறக்கணிப்பதாகவும் குமுறத் தொடங்கியிருக்கிறார்கள். எனவே, இந்த முறை தென் மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மாநிலங்களவை எம்.பி சீட் வழங்க வேண்டும் என்று தென்மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க மூத்த தலைவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால், யாருக்கு சீட் கொடுப்பது என்ற இடியாப்ப சிக்கலில் முதல்வர் எடப்பாடி இருப்பதாகச் சொல்கிறார்கள். அத்தோடு எங்களுக்கு சீட் கொடுக்கவில்லை என்றால் கண்டிப்பாக தி.மு.க-வில் சேரப்போவதாக முக்கிய அமைச்சர்கள் மிரட்டத்தொடங்கியிருக்கிறார்கள்.

 தம்பிதுரை
தம்பிதுரை

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறார் முதல்வர். அத்தோடு சீட் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக முக்கிய நிர்வாகிகளோடு ஆலோசனைக் கூட்டம் மறைமுகமாக நடத்த இருக்கிறார். யார் யார் சீட் கேட்கிறார்கள். அவர்களை பின்னணியிலிருந்து இயக்குவது யார், சீட் கிடைக்காத பட்சத்தில் அவர்களை எப்படி எதிர்கொள்வது என்று பல்வேறு கோணத்தில் பேச இருக்கிறார்கள். ராஜ்ய சபா வேட்பாளர்கள் பட்டியலை எடப்பாடி வெளியிட முடியாத அளவுக்கு நெருக்கடியில் இருப்பதாகவும் சொல்கிறார்கள் கோட்டை வட்டாரத்தினர்.

அடுத்த கட்டுரைக்கு