Published:Updated:

``வீரமணியின் பினாமி அல்ல நான்" - திமுக-வில் இணையும் அதிமுக புள்ளி!

ஏ.வி.சாரதி
ஏ.வி.சாரதி

ஆற்காடு தொகுதி அ.தி.மு.க-வின் ஒற்றை முகமாகப் பார்க்கப்பட்டுவந்த ஏ.வி.சாரதி தி.மு.க-வில் இணையவிருக்கிறார். அவருடன் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் அ.தி.மு.க-விலிருந்து விலக முடிவெடுத்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ராணிப்பேட்டை மாவட்ட அ.தி.மு.க-வின் வர்த்தக அணிச் செயலாளர் ஏ.வி.சாரதிக்கு நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஆற்காடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. தனிப்பட்ட செல்வாக்கு, கட்சியினரின் ஆதரவு, தன் சமூக வாக்குவங்கி போன்றவற்றால் எளிதில் வெற்றிபெற்றுவிட முடியும் என்று சாரதியின் ஆதரவாளர்கள் கணித்து வைத்திருந்தனர். எப்படியும் சீட் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில், தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்னர் இருந்தே தொகுதிக்குள் தீவிர களப்பணியிலும் ஈடுபட்டுவந்தனர். ஆனால், கூட்டணியிலுள்ள பா.ம.க-வுக்கு ஆற்காடு தொகுதி ஒதுக்கப்பட்டதால், ஏ.வி.சாரதி தரப்பு கடும் கோபமடைந்தது.

முன்னாள் அமைச்சர் வீரமணி
முன்னாள் அமைச்சர் வீரமணி

‘‘ராணிப்பேட்டை மாவட்டத்திலிருப்பதே நான்கு தொகுதிகள்தான். அவற்றில், சோளிங்கர் தொகுதி பா.ம.க-வுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் ஆற்காட்டையும் எதற்கு அவர்களுக்கே கொடுக்க வேண்டும். அ.தி.மு.க-வுக்குச் சாதகமான தொகுதி இது. அதிலும், சாரதியைத் தவிர அ.தி.மு.க-வில் வேறு யாரை நிறுத்தினாலும் வெற்றிபெற மாட்டோம். அப்படியிருக்க, கூட்டணியிலுள்ள பா.ம.க-வுக்கு ஆற்காட்டைக் கொடுத்திருப்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை’’ என்று அ.தி.மு.க-வினர் வெளிப்படையாகவே தலைமைக்குத் தபால் அனுப்பியிருந்தனர். அதற்கேற்ப, ஆற்காடு தொகுதியில் பா.ம.க தோல்வியடைந்தது. தி.மு.க சார்பில் களமிறங்கியிருந்த சிட்டிங் எம்.எல்.ஏ ஈஸ்வரப்பனே வெற்றி பெற்றார்.

இதனால், தேர்தல் சமயத்திலிருந்தே அ.தி.மு.க தலைமைமீது அதிருப்தியிலிருந்த ஏ.வி.சாரதி கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதையும் தவிர்த்துவந்தார். இந்தநிலையில், நாளை காலை 10 மணியளவில், முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் இணையவிருக்கிறார் சாரதி. அதற்கான அனுமதியும் ஸ்டாலின் தரப்பிலிருந்து சாரதிக்குக் கிடைத்திருக்கிறது. சிமென்ட் டிரேடிங், டிரான்ஸ்போர்ட் என பல்வேறு தொழில்களைச் செய்துவரும் சாரதிக்கு 45 வயது. 1994-ம் ஆண்டிலிருந்தே அ.தி.மு.க-வில் உறுப்பினராக இருக்கிறார். சாரதியின் தந்தையும் அ.தி.மு.க-வின் தீவிர விசுவாசிதான்.

ஏ.வி.சாரதி
ஏ.வி.சாரதி

ஆற்காடு தொகுதி அ.தி.மு.க-வின் ஒற்றை முகமாகவே பார்க்கப்படும் அளவுக்கு சாரதி மிகுந்த செல்வாக்குடையவராக அந்தத் தொகுதியில் வலம் வருகிறார். அவர் மாற்றுக் கட்சிக்குச் செல்வது, ராணிப்பேட்டை மாவட்ட அ.தி.மு.க-வில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருடன் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் அ.தி.மு.க-விலிருந்து விலக முடிவெடுத்துள்ளனர்.

இது குறித்து, ஏ.வி.சாரதியிடம் பேசினோம். ``அ.தி.மு.க-விலிருந்து நான் விலகுவதற்கு தேர்தலில் சீட் வழங்கப்படாதது மட்டுமே காரணமில்லை. தற்போது, அ.தி.மு.க-வில் சரியான தலைமையும் இல்லை. தொண்டர்களை அரவணைத்துப் போகிற தலைவர்களும் இல்லை. தி.மு.க-வில் இணையும் முடிவை தேர்தலின்போதே எடுத்துவிட்டேன். இப்போதுதான் தி.மு.க-வில் தன்னை இணைத்துக்கொள்வதற்கான நேரம் வந்திருக்கிறது. கொரோனா சூழல் காரணமாக பெரிய அளவிலான கூட்டத்தைக் கூட்ட வேண்டாமென்று நினைக்கிறேன். முன்னாள் அமைச்சர் வீரமணியின் ஆதரவாளராகவும், பினாமியாகவும் என்மீது சிலர் விமர்சனம் வைத்திருந்தனர். அதெல்லாம் பிம்பம் என்று உணர்த்துவதற்கான நேரமும் வந்துவிட்டது. மாவட்ட அமைச்சராக இருந்ததால் மற்ற நிர்வாகிகளைப்போல் நானும் அரசியல்ரீதியாக வீரமணியை ஆதரித்தேனே தவிர... தொழில் போன்றவற்றில் அவருடன் எனக்கு எந்த உறவுமுறையும் இல்லை’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு