Published:Updated:

`நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்ன ஆச்சு?' -7 பேர் விடுதலை குறித்து பேரவையில் தி.மு.க-அ.தி.மு.க விவாதம்

ஏழு பேர் விடுதலை விவகாரம்
ஏழு பேர் விடுதலை விவகாரம்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7பேர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதுதான் எல்லோருடைய ஆசை. ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பாகப் பல்வேறு அமைப்புகள் புலனாய்வு நடத்தி வருகின்றன.

`பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை குறித்து சட்டமன்றத்தில் தீர்மானமெல்லாம் நிறைவேற்றினீர்களே அது என்னானது? இரண்டு ஆண்டுகள் ஆகியும் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள்?” என தி.மு.க அ.தி.மு.கவினரிடையே காரசார விவாதம் சட்டமன்றத்தில் நடைபெற்றிருக்கிறது.

ஏழு பேர் விடுதலை விவகாரம்
ஏழு பேர் விடுதலை விவகாரம்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன், நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிக்க வேண்டும் என்று செப்டம்பர் 2018-ல் தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்குக் கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் ஆளுநர் இரண்டு ஆண்டுகளாகியும் பதிலளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகப் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சட்டத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று பேரவையில் நடைபெற்றது. அப்போது, 7 பேர் விடுதலை குறித்துத் தெளிவுபடுத்த வேண்டும் என்று தி.மு.க எம்.எல்.ஏ தாயகம் கவி கேள்வி எழுப்பினார். அதற்குப் பதில் அளித்த சட்டத்துறை அமைச்சர் சீ.வி சண்முகம், “ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதுதான் எல்லோருடைய ஆசை.

ஆளுநர்
ஆளுநர்

ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பாகப் பல்வேறு அமைப்புகள் புலனாய்வு நடத்தி வருகின்றன. அந்த அமைப்புகளைக் கண்காணிக்கும் அமைப்பு விசாரணை அறிக்கையைத் தந்தபின்னர், அதை வைத்துத்தான் விடுதலை பற்றி முடிவு செய்யமுடியும் என ஆளுநர் பதிலளித்திருக்கிறார்” என்றார். 2018 செப்டம்பர் 6-ம் தேதி வெளியான உச்சநீதிமன்றத் தீர்ப்பில், அரசியல் சாசனத்தின் 161வது பிரிவின் கீழ் ஏழு பேரின் விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுக்கலாம் என ரஞ்சன் கோகாய் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது.

பேரவையில் ஆளுநர் உரை
பேரவையில் ஆளுநர் உரை

அதையடுத்து, 2018 செப்டம்பர் 9-ம் தேதி தமிழகச் சட்டமன்றக் கூட்டம் நடத்தப்பட்டு, ஏழு பேரும் விடுவிக்கப்பட வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆளுநர் முடிவைத் தெரிவிக்கவேண்டும் எனக் கட்டாயப்படுத்த முடியாது என அ.தி.மு.க அமைச்சர்கள் தெரிவித்துவந்தனர். இந்நிலையில்தான் ஆளுநர் விசாரணை அறிக்கைக்காகக் காத்திருக்கிறார் என்ற தகவல் சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு தி.மு.க எம்.எல்.ஏ க்கள் எழுந்து, `ஏழுபேர் விடுதலைக்கு எதிரான கருத்துகளை அளித்தால் என்ன செய்வீர்கள்’ என்று கேள்வி எழுப்பியதற்கு, `சட்டத்தை நாடுவோம் மற்றதை முதல்வர் முடிவு எடுப்பார்’ போன்ற காரசாரமான விவாதங்கள் நடந்தேறியுள்ளன.

அடுத்த கட்டுரைக்கு