Published:Updated:

கடலோர கர்நாடகம்: ஆளும்கட்சியின் `லவ் ஜிகாத்’ ஸ்கெட்ச்... பாஜக கோட்டையில் காலூன்றுமா காங்கிரஸ்?!

பா.ஜ.க Vs காங்கிரஸ்.

பாஜக கடலோர கர்நாடகத்தை இந்துத்துவ ஆய்வகமாக மாற்றியிருக்கிறது. பாஜக-வால் இங்கு மதக்கலவரம், கொலைகள் அதிகம் நடக்கிறது என்பது போன்ற குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் முன்வைத்து வருகிறது.

Published:Updated:

கடலோர கர்நாடகம்: ஆளும்கட்சியின் `லவ் ஜிகாத்’ ஸ்கெட்ச்... பாஜக கோட்டையில் காலூன்றுமா காங்கிரஸ்?!

பாஜக கடலோர கர்நாடகத்தை இந்துத்துவ ஆய்வகமாக மாற்றியிருக்கிறது. பாஜக-வால் இங்கு மதக்கலவரம், கொலைகள் அதிகம் நடக்கிறது என்பது போன்ற குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் முன்வைத்து வருகிறது.

பா.ஜ.க Vs காங்கிரஸ்.

கர்நாடகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடக்கவிருப்பதால் காங்கிரஸ், பா.ஜ.க-வினர் வாக்குறுதிகளைக் கூறி ஓட்டு சேகரித்துவருகின்றனர். மொத்தமுள்ள 224 தொகுதிகளை, தலா ஏழு மாவட்டங்களைக் கொண்ட கல்யாண கர்நாடகம், கடலோர கர்நாடகம், வடக்கு மற்றும் தெற்கு கர்நாடகம், பெங்களூர் சுற்றுப்பகுதி என பிரித்து வாக்கு சேகரித்துவருகின்றனர்.

இதில் கடலோர கர்நாடகத்தில், தக்‌ஷின கன்னடா, உடுப்பி, உத்திர கன்னடா ஆகிய மூன்று மாவட்டங்கள் இருக்கின்றன. நாள்தோறும் சமூகரீதியான பிரச்னைகள், வன்முறைகள், சாதிரீதியிலான சண்டைகள், கொலைகள் அரங்கேறிவரும் கடலோர கர்நாடகம் குறித்தும், வரும் தேர்தலுக்கான பா.ஜ.க Vs காங்கிரஸ் கட்சியின் வியூகங்கள் குறித்தும் பார்ப்போம்...

கடலோர கர்நாடகம்!

தக்‌ஷின கன்னடாவில் 20.8 லட்சம் மக்கள் தொகையில், 2.4 லட்சம் பேர் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களாக இருக்கின்றனர். மொத்த மக்கள் தொகையில் 67 சதவிகிதம் இந்துக்கள், 24 சதவிகிதம் இஸ்லாமியர்கள் மற்றும் 8.2 சதவிகிதம் கிறிஸ்தவ சிறுபான்மை மக்கள் இருக்கின்றனர்.

உத்தர கன்னடாவிலுள்ள முர்தேஷ்வர் கோயில்.
உத்தர கன்னடாவிலுள்ள முர்தேஷ்வர் கோயில்.

உடுப்பி மாவட்டத்தில் 11.77 லட்சம் பேரில், 1.3 லட்சம் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் இருக்கின்றனர்; 85 சதவிகிதம் இந்துக்கள், 14 சதவிகித சிறுபான்மை மக்கள் இருக்கின்றனர். உத்தர கன்னடாவில் 14.5 லட்சம் மக்களில், 1.5 லட்சம் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் இருக்கின்றனர். மொத்த மக்கள் தொகையில் 82 சதவிகிதம் இந்துக்கள், 16 சதவிகிதம் சிறுபான்மை மக்கள் இருக்கின்றனர்.

பா.ஜ.க-வின் கோட்டை!

கடந்த முறை நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், தக்‌ஷின கன்னடத்தில் மொத்தமுள்ள எட்டு தொகுதியில், ஏழு இடங்களில் பா.ஜ.க., ஒரே ஓர் இடத்தில் காங்கிரஸ் வென்றது. உடுப்பியில் மொத்தமுள்ள ஐந்து தொகுதியும் பா.ஜ.க வசம் சென்றது. உத்தர கன்னடாவில் ஆறு தொகுதிகளில் நான்கு பா.ஜ.க-வும், இரண்டு காங்கிரஸும் வெற்றிபெற்றது. ஒரு காலத்தில் காங்கிரஸ் வசமிருந்த கடலோர கர்நாடகத்தை முழுமையாக தங்கள் கோட்டையாக மாற்றியிருக்கிறது பா.ஜ.க.

கடலோர கர்நாடக வரைபடம்.
கடலோர கர்நாடக வரைபடம்.

இந்த மூன்று மாவட்டங்களும் அரபிக்கடலோரம், கேரள மாநில எல்லைப்பகுதியில் இருக்கிறது. பண்ட் சமூகப் பிரிவுகளான ஷெட்டி, வர்மா, பண்ட் உள்ளிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் இருக்கின்றனர். மேலும், இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மக்கள் அதிகம் இருக்கின்றனர், கேரளா பகுதியிலிருந்து இஸ்லாமிய மக்கள் அதிகம் வந்து செல்கின்றனர். கர்நாடகத்தில் மற்ற மாவட்டங்களைக்காட்டிலும், நாள்தோறும் சமூக மற்றும் சாதிரீதியான பாகுபாடு, பிரச்னைகள், கலவரங்கள், கொலைகள் அரங்கேறுவது கடலோர கர்நாடகத்தில்தான் அதிகம். சமூகக் கலவரத்தால் மட்டுமே ஓராண்டில், எட்டு பேருக்கு மேல் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

கடலோர கர்நாடக இந்து அமைப்புகளின் பேரணி.
கடலோர கர்நாடக இந்து அமைப்புகளின் பேரணி.

லவ் ஜிஹாத் – இந்துத்துவம்!

தேர்தல் நெருங்குவதால், இந்துக்களின் ஓட்டுகளைக் கவர, இங்குள்ள பா.ஜ.க எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மட்டுமின்றி, இங்கு வரும் பா.ஜ.க தலைவர்கள், ‘இந்துத்துவம், இந்துக்கள் பாதுகாப்பு, மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு’ போன்றவற்றை மட்டுமே அதிகம் பேசி, வாக்குக்களைக் கவர முயன்றுவருகின்றனர். அதிலும் குறிப்பாக, லவ் ஜிஹாத்தைக் கையிலெடுத்திருக்கின்றனர் எனவும் அரசியல் விமர்சகர்கள் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

சமீபத்தில்கூட மங்களூரில் பா.ஜ.க மாநிலத்தலைவரும் எம்.பி-யுமான நளின் குமார் கட்டீல், ``கட்சித்தொண்டர்களே பொதுப்பிரச்னையில் கவனம் செலுத்த வேண்டாம், லவ் ஜிஹாத் பிரச்னையில் கவனம் செலுத்துங்கள்’’ எனப் பேசியது சர்ச்சையானது.

பா.ஜ.க எம்.பி நளின் குமார் கட்டீல்.
பா.ஜ.க எம்.பி நளின் குமார் கட்டீல்.

‘நெகடிவ் போலிங்’ – காங்கிரஸ் வியூகம்...

கடலோர கர்நாடகத்தைக் கைப்பற்ற இந்துத்துவத்தைக் கையெலெடுத்திருக்கிற பா.ஜ.க-வை வீழ்த்த, காங்கிரஸ் கட்சியினர், ‘‘பா.ஜ.க கடலோர கர்நாடகத்தை இந்துத்துவ ஆய்வகமாக மாற்றியிருக்கிறது, பா.ஜ.க-வால், இங்கு மதக்கலவரம், கொலைகள் அதிகம் நடக்கிறது’’ என்பது போன்ற, பல கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருக்கின்றனர்.

மேலும், முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநிலத் தலைவர் டி.கே சிவக்குமார் என, அனைத்துத் தலைவர்களும் வாரம் இருமுறையாவது கடலோர கர்நாடகத்துக்குச் சென்று, அனைத்துச் சமுதாயத் தலைவர்களைச் சந்தித்து, வாக்கு சேகரித்துவருகின்றனர்.

காங்கிரஸ் தலைவர் சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா
காங்கிரஸ் தலைவர் சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா

குறிப்பாக பா.ஜ.க-வுக்கு எதிரான மனநிலையிலுள்ள சிறுபான்மை மக்கள், பட்டியலின மற்றும் பழங்குடி மக்கள், மீனவர்களைக் கவர, கங்கணம் கட்டிக்கொண்டு சுழன்று வேலை செய்துவருகின்றனர்.

10 அம்ச வாக்குறுதி...

முக்கியமானதாக கடலோர கர்நாடகத்துக்காக 10 அம்ச பிரத்தியேக தேர்தல் வாக்குறுதியையும் வெளியிட்டிருக்கின்றனர். சிறுபான்மை மக்கள் நலனுக்கான பட்ஜெட் அதிகரிப்பு, மீனவர்களுக்கு 10 லட்சம் காப்பீடு, மீன்பிடி படகுக்கு ரூ.25 லட்சம் மானியம், மால்பே பகுதியில் புதிய துறைமுகம், கடலோர கர்நாடகத்தில் சுற்றுலா, தொழில், வேலைவாய்ப்பு, வளர்ச்சிக்கு, 2,500 கோடி ஒதுக்குதல், பெங்களூருக்கு அடுத்தபடியாக மங்களூரை ஐ.டி ஹப் ஆக மாற்றுதல் உள்பட 10 அம்ச வாக்குறுதியை வெளியிட்டிருக்கின்றனர்.

பா.ஜ.க-வின் கடலோர கர்நாடக கோட்டையைத் தகர்த்து, கடலோர கர்நாடகத்தில் காங்கிரஸ் காலுான்றுமா என்பதை, தேர்தல் முடிவுகள் தெரிவிக்கும்; பொறுத்திருந்து பார்ப்போம்..!