Published:Updated:

''காங்கிரஸில், கட்சி ரகசியம் என்று ஒன்றும் கிடையாது!'' - ஜோதிமணி ஓப்பன் டாக்

ஜோதிமணி

''ஜனநாயக அமைப்பில், மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக மக்களோடு சேர்ந்து நின்று அரசியல் செய்வதுதான் கட்சிப் பணி, கடமை! எனவே, அந்த மக்களுக்குத் தெரியாமல் என்ன ரகசியம் கட்சிக்குள் இருக்க முடியும்..?'' என்கிறார் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி.

''காங்கிரஸில், கட்சி ரகசியம் என்று ஒன்றும் கிடையாது!'' - ஜோதிமணி ஓப்பன் டாக்

''ஜனநாயக அமைப்பில், மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக மக்களோடு சேர்ந்து நின்று அரசியல் செய்வதுதான் கட்சிப் பணி, கடமை! எனவே, அந்த மக்களுக்குத் தெரியாமல் என்ன ரகசியம் கட்சிக்குள் இருக்க முடியும்..?'' என்கிறார் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி.

Published:Updated:
ஜோதிமணி

தேர்தலின்போது சீட் கிடைக்காத விரக்தியில், சுயேச்சை வேட்பாளராகக் களம் இறங்குவது, சொந்தக் கட்சி வேட்பாளரையே தோற்கடிக்க உள்ளடி வேலைகள் செய்வது என அரசியல் களம் அதீதமாகச் சூடுபறக்கும். தமிழக காங்கிரஸ் கட்சியிலும், வேட்பாளர் தேர்வின்போது இதே போன்ற கலாட்டாக்கள் அரங்கேறின.

இதில், காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினரான ஜோதிமணி, 'காங்கிரஸ் கட்சியில் பணம் உள்ளவர்களுக்கே சீட் வழங்கப்படுகிறது; உண்மையான தொண்டர்களுக்கு மதிப்பில்லை' என்று வெளிப்படையாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட... காங்கிரஸ் கட்சி மட்டுமல்லாமல் ஒட்டுமொத்தக் கூட்டணியுமே பதறிப்போயின.

உட்கட்சி விவகாரங்களை இது போன்று பொதுவெளியில் போட்டுடைப்பதுதான் 'உட்கட்சி ஜனநாயகமா...' என்ற கேள்வியோடு ஜோதிமணியை நேரில் சந்தித்துப் பேசினேன்...

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

''உட்கட்சி ஜனநாயகம் என்ற பெயரில், காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை பொதுவெளியில் நீங்கள் விமர்சிப்பதெல்லாம் சரிதானா?''

''அரசியல் கட்சி என்பது மக்களுக்கானதாகவோ, ஜனநாயகத் தன்மைகொண்டதாகவோ இந்திய அரசியலில்... ஏன் தமிழ்நாட்டுக் கட்சிகளிலும்கூட இல்லை. ஆனால், காங்கிரஸ் கட்சி மட்டும்தான் அடிப்படையான ஜனநாயக அமைப்பைக்கொண்டதாக இங்கே இருக்கிறது. மக்களுக்குத் தெரியாமல் இங்கே எந்த ரகசியமும் கிடையாது.

ஜனநாயக அமைப்பில், மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக மக்களோடு சேர்ந்து நின்று அரசியல் செய்வதுதான் கட்சிப் பணி, கடமை! எனவே, அந்த மக்களுக்குத் தெரியாமல் என்ன ரகசியம் கட்சிக்குள் இருக்க முடியும்... என்று நினைக்கிற கட்சி காங்கிரஸ். இதனடிப்படையில்தான் எல்லா விஷயங்களையும் பொதுவெளியிலேயேகூட இங்கே விவாதிக்க முடிகிறது.

முதிர்ந்த ஜனநாயக அமைப்பைக்கொண்ட நாடுகளில் கட்சியின் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பதைக்கூட மக்கள்தான் முடிவு செய்கிறார்கள். இந்திய ஜனநாயகத்தை நாம் எவ்வளவுதான் கொண்டாடினாலும் இங்கே பிரதிநிதித்துவ ஜனநாயகம்தான் நடைமுறையில் இருந்துவருகிறது. இன்னமும் வெகுமக்கள் ஜனநாயகமாக மாறவில்லை. இந்தச் சூழலில், காங்கிரஸ் கட்சி ஒன்றுதான், 'கட்சி ரகசியம் என்று ஒன்றும் கிடையாது' என அன்றையிலிருந்து இன்றுவரையிலும் செயல்பட்டுவருகிறது!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

''உங்களது நேர்மையை வெளிக்காட்டுவதற்காக சொந்தக் கட்சியையே இப்படி விமர்சிப்பதால், பொதுமக்களிடையே கட்சியின் மதிப்பு குறைத்துவிடாதா?''

''காங்கிரஸ் கட்சிக்கு எழுப்பப்படும் இது போன்ற ஜனநாயகக் குரல்களால் அதன் மீதான மக்களின் மதிப்பீடுகள் கூடுவதாகத்தான் நான் நினைக்கிறேன்.

அடித்தட்டு நிலையிலிருந்து இன்றைக்கு எம்.பி-யாக வந்திருக்கிறேன். இன்றைக்கும் விமானத்தில், பிஸினஸ் கிளாஸ் டிக்கெட்டில் பயணிக்க உரிமையிருந்தாலும்கூட எகனாமிக் கிளாஸ் டிக்கெட்டில்தான் பயணிக்கிறேன். கட்சியில் எனக்கு முக்கியப் பொறுப்புகள் பல நேரங்களிலும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும்கூட பெரிய தலைவர்கள் கலந்துகொள்கிற நிகழ்ச்சிகளில் நான் மேடையில்கூட அமர்ந்திருக்க மாட்டேன்.

'100 ரூபாய்க்கு திட்டங்களைச் செய்துவிட்டு, ஒரு லட்சம் ரூபாய்க்கு விளம்பரம் செய்யக் கூடாது' என்ற மனநிலையில் ஆட்சிசெய்தவர் காமராஜர். அதே மனநிலையில்தான் மன்மோகன் சிங்கும் ஆட்சி செய்தார். இது காங்கிரஸ் கட்சியின் இயல்பான பலவீனம்! ஆனால், `காங்கிரஸ் கட்சி பணக்காரர்களுக்கான கட்சி; வாரிசுக் கட்சி' என்றெல்லாம் வெளியிலிருந்து குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. காங்கிரஸ் கட்சியும் மறுக்காத குற்றச்சாட்டுகள்.''

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

''கட்சி குறித்து விமர்சிப்பவர்கள் மீது காங்கிரஸ் கட்சியும் நடவடிக்கை எடுப்பதில்லையே ஏன்..?''

''காந்தி, நேரு, இந்திரா, காமராஜர் உள்ளிட்ட கட்சித் தலைவர்களையும்கூட கேள்விக்குட்படுத்துவோம் என்பதுதான் எங்கள் கட்சியின் ஜனநாயகமே.

அதனால்தான், கட்சித் தலைமை குறித்து தலைவர்கள் 23 பேர் கடிதம் எழுதியிருந்த விவகாரம் குறித்துப் பேசிய ராகுல் காந்திகூட, 'இது கட்சியிலுள்ளவர்களின் மாற்றுக் கருத்து என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஆனால், இதே சூழல் மற்ற கட்சிகளில் ஏற்பட்டிருந்தால், 23 பேரும் கட்சியில் நீடித்திருக்க முடியுமா என்பதை யோசித்துப்பாருங்கள்' என்று கூறியிருந்தார். கடிதம் எழுதிய பிறகும்கூட இந்த 23 பேரில் பலர் கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.''

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

''காங்கிரஸ் கட்சி மட்டுமல்லாமல், எல்லாக் கட்சிகளிலுமே 'பணம் படைத்தவர்களுக்குத்தானே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு' வழங்கப்படுகிறது..?''

''பண வசதி இல்லாத எனக்கும் எம்.பி தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தவர் எங்கள் தலைவர் ராகுல் காந்தி. வெறும் 5,000 ரூபாயை மட்டும் கையில் வைத்துக்கொண்டுதான் நான் நாமினேஷனே தாக்கல் செய்தேன். என் கட்சி எனக்காகச் செலவு செய்தது. கூட்டணிக் கட்சியான தி.மு.க-வின் வலுவான கட்டமைப்பு என்னை தொகுதி முழுக்க கொண்டு சென்று சேர்த்தது. எனக்கான பிரசாரத்தை வெகுமக்கள் இயக்கமாக மக்களே முன்னெடுத்துச் சென்றனர். எனவே நான் வெற்றிபெற்றேன்.

ஆனால், இன்றைக்கு அரசியல் கட்சிகள் அனைத்துமே ஒன்று சேர்ந்து அரசியலைக் குத்தகைக்கு எடுத்து நடத்திவருகின்றன. உண்மையாகவே இந்த அரசியலை கன்ட்ரோல் செய்யக்கூடிய மக்கள் வெளியேதான் நின்றுகொண்டிருக்கிறார்கள். வாக்கு செலுத்துவதற்கு மட்டுமே அவர்களுக்கு உரிமையிருக்கிறது. கட்சியின் வேட்பாளர் யாரென்று அவர்களால் தேர்வு செய்ய முடியாது. வெற்றிபெற்று வந்த வேட்பாளர், பின்னர் வேறு ஒரு கட்சிக்கு மாறிச் செல்வதாக இருந்தால் அவரும் மக்களைக் கேட்டுச் செல்வதில்லை.

ஒரு கட்சியிலிருந்து தலைவர்களை விலைக்கு வாங்குகிற சூழலிலும்கூட, 'இப்படி விலைபோகிற தலைவர்களை ஏன் உங்கள் கட்சியில் வேட்பாளர்களாக நிறுத்துகிறீர்கள்' என்றுதான் இங்கே கேள்வி கேட்கிறார்களே தவிர... விலைக்கு வாங்குகிற கட்சிகளுக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என்ற கேள்வியை யாருமே கேட்பது இல்லை.''

நல்லகண்ணு
நல்லகண்ணு

''எந்தக் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாத இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை இந்தத் தேர்தல் களம் தோற்கடித்த வரலாறு இருக்கிறதுதானே...?''

''நல்லகண்ணு தாத்தாவின் தேர்தல் தோல்வி என்பது வெறுமனே பணத்தின் அடிப்படையினாலானது மட்டுமே என்று நான் சொல்ல மாட்டேன். மன்மோகன் சிங், காமராஜரும் இந்த தேசத்தில் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள். இதற்கான வருத்தமும் வேதனையும் உள்ளுக்குள் இருக்கிறதுதான்.

அதேநேரம் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களும் இருக்கிறார்கள்தானே... எனவே, ஒரு தேர்தல் என்பது பல்வேறு விஷயங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. நல்லகண்ணு தாத்தாவைப் பற்றிய புரிதல் இன்றைக்கும்கூட எவ்வளவு பேருக்கு இருக்கிறது என்று தெரியவில்லை. அரசியல்மயப்படுத்தப்படாதவர்களிடம் நல்லகண்ணு ஐயாவைக் கொண்டுபோய் சேர்க்காத தவறை... கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமல்லாமல் நாம் எல்லோரும் சேர்ந்தே செய்திருக்கிறோம்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism