Published:Updated:

`கொரோனா பேரிடர் காலத்தில் ஐபிஎல் திருவிழா தேவைதானா?' - வலுக்கும் விவாதங்கள்..!

ஐபிஎல் கிரிக்கெட்

விளையாட்டு வீரர்கள் கில்கிறிஸ்ட், அபினவ் பிந்த்ரா ஆகியோர் தற்போது ஐபிஎல் வேண்டுமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்கள். தமிழக வீரர் அஸ்வினும் கொரோனாவைக் காரணம் காட்டி ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார். இந்தச் சூழலில் ஐபிஎல் தேவைதானா?

`கொரோனா பேரிடர் காலத்தில் ஐபிஎல் திருவிழா தேவைதானா?' - வலுக்கும் விவாதங்கள்..!

விளையாட்டு வீரர்கள் கில்கிறிஸ்ட், அபினவ் பிந்த்ரா ஆகியோர் தற்போது ஐபிஎல் வேண்டுமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்கள். தமிழக வீரர் அஸ்வினும் கொரோனாவைக் காரணம் காட்டி ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார். இந்தச் சூழலில் ஐபிஎல் தேவைதானா?

Published:Updated:
ஐபிஎல் கிரிக்கெட்

இந்தியாவில் கொரோனா தொற்று ஒருபுறம் கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும் நிலையில், மற்றொரு புறம் ஐபிஎல் போட்டிகள் கோலாகலமாக நடந்துகொண்டிருக்கின்றன. நாள் ஒன்றுக்கு 3.5 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர், இரண்டாயிரத்துக்கும் அதிகமான இறப்புகள் ஏற்படுகின்றன. கொரோனா தொற்றால் தீவிரமாக பாதிக்கப்பட்டோர் ஆக்ஸிஜன் சிலிண்டருக்காக மருத்துவமனை வாசலில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலமும் அரங்கேறிக்கொண்டிருக்கிறது.

வட மாநிலங்களில் ஒரே நேரத்தில் பல நூறு பிணங்கள் எரிக்கப்படும் இது போன்ற துயரத்தை வரலாற்றில்கூட படித்திருக்க வாய்ப்பில்லை. இத்தகைய சூழலில் ``இந்தியாவில் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அச்சமூட்டும் வகையில் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இந்தநிலையில், அங்கு நடைபெறும் ஐபிஎல் தொடர் பொருத்தமற்றதாகத் தோன்றவில்லையா அல்லது மக்களைத் தொற்றிலிருந்து திசைதிருப்பவே இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றனவா? எதுவாக இருந்தாலும் இந்தியர்களுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்” என ட்வீட் செய்திருக்கிறார் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் கில்கிறிஸ்ட். மேலும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றுள்ள அபினவ் பிந்த்ரா-வும் இப்போதைய சூழலில் இந்த ஐபிஎல் கொண்டாட்டங்கள் தேவையா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

ஐபிஎல்
ஐபிஎல்

கொரோனா பெருந்தொற்றால் இந்திய மக்கள் கடும் இன்னல்களைச் சந்தித்துவருகிறார்கள். ``ரோம் நகரம் பற்றி எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்தான்’ என்று நாம் படித்திருப்போம். அப்படித்தான் இருக்கிறது தற்போதைய ஐபிஎல் கொண்டாட்டங்கள் எனப் பலதரப்பிலும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதற்கும் ஒருபடி மேலே சென்று தனியார் ஆங்கில நாளிதழ் இனி ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளை வெளியிடப்போவதில்லை என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நாடே கொரோனா எனும் பேரிடரில் சிக்கித் தவித்துவரும் சூழலில், உண்மையில் ஐபிஎல் திருவிழா தேவைதானா? சமூகச் செயற்பாட்டாளர் ஆழி செந்தில்நாதனிடம் பேசினோம். ``டெல்லி போன்ற நகரங்களில் மக்கள் அனைவரும் உயிருக்காக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இப்படியான சூழலில் ஐபிஎல் தேவையா இல்லையா என மற்றவர்கள் மூலமாகப் பெரிய விவாதமாக எழுவதற்கு முன் நிர்வாகமே முன்வந்து போட்டிகளை நிறுத்தியிருக்க வேண்டும். எவ்வளவோ காரணங்களுக்காக, இதைவிட மிக முக்கியமான எத்தனையோ போட்டிகளெல்லாம் நிறுத்தப்பட்டிருக்கின்றன. இது பொழுதுபோக்குவதற்கான நேரம் இல்லை. அதற்காக எல்லோரும் வந்து அழுதுகொண்டிருக்க வேண்டும் என்றோ அல்லது எப்போதுமே ஐபிஎல் வேண்டாம் என்றோ நான் சொல்லவில்லை. இப்போது வேண்டாம். தெருக்களில் சக மனிதன் இறப்புக்கான அழும் குரல் கேட்டிருக்கும் இந்தச் சூழலில் இது வேண்டாம் என்றுதான் நான் சொல்கிறேன். என்ன நிகழ்வு நடக்கிறதோ அதற்கு ஏற்றாற்போல முடிவு எடுங்கள் என்றுதான் சொல்கிறேன்.

ஆழி செந்தில்நாதன்
ஆழி செந்தில்நாதன்

துக்க விஷயங்களிலிருந்து மக்கள் தங்களை மடைமாற்றிக்கொள்ளத்தான் இது நடக்கிறது என்பதை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. அதற்குப் பல வழிகள் இருக்கின்றன. நாடு மிக மோசமான சூழலைக் கடந்துகொண்டிருக்கும்போது இந்த மாதிரியான கேளிக்கைகளைக் கொஞ்சம் தள்ளி வைக்கலாம் என்பது என்னுடைய எதிர்பார்ப்புதான். ஆனால், பொழுதுபோக்கில்லை பணம் சேர்ப்பதுதான் நோக்கமாக இருக்கும்போது என்னுடைய இந்த எதிர்பார்ப்பு நிச்சயம் நடக்காது என்பது நன்றாகத் தெரியும்” என்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கிரிக்கெட் விமர்சகர் சுமந்த் சி ராமனிடம் பேசினோம். ``கஷ்டமான இந்த காலகட்டத்தில் மக்களுக்கு ஒரு மூன்று மணி நேரம் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள ஐபிஎல் தற்போது ஒரு வாய்ப்பாக இருக்கிறது. மேலும், அரசு சார்பில் இதற்காக பெரிய அளவில் காவலர்கள், மருத்துவர்கள் என எந்த உதவியும் செய்யப்படவில்லை அல்லது மற்ற காலங்களைவிட மிகக் குறைந்த அளவிலேயே அரசுத் தரப்பிலிருந்து உதவிகள் வழங்கப்படுகின்றன. அதனால், அதை நடத்துவதில் எந்தக் குறையும் இல்லை. ஆனால், டெல்லி, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா போன்று கொரோனா தொற்று அதிகமான மாநிலங்களில் நடத்தக் கூடாது என்று நான் உறுதியாகச் சொல்வேன்.

அந்தந்த மாநிலங்களில் கொரோனா தொற்றுக்காக ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசுகள் செயல்படுத்தி வரும்போது ஐபிஎல் போட்டிகளுக்கு மட்டும் அனுமதி என்பது சட்டத்தை மீறுவதாகும். அதற்கு பதிலாக தர்மசாலா போன்று எவ்வளவோ இடங்களில் நடத்தலாமே... அங்கெல்லாம் கொரோனா தொற்று குறைவாகத்தானே இருக்கிறது? ஐபிஎல் போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு மட்டுமல்ல, அவர்களோடு தொடர்புடைய ஊழியர்கள், குடும்ப உறுப்பினர்கள் என மூன்று நாளுக்கு ஒரு முறை ஆயிரக்கணக்கில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அதற்கு பதிலாக ஐபிஎல் போட்டிகளை நிறுத்திவிட்டால் அவை எல்லாம் தேவைப்படும் மக்களுக்குப் போய்ச் சேரும்தானே. இதையும் கவனத்தில்கொள்ளலாம். டிசம்பர், ஜனவரியில் இங்கிலாந்தில் கொரோனா தொற்று கடுமையாகப் பரவியபோதுகூட இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் போட்டிகளை அந்த நாடு நடத்தியது. அதேபோல போட்டிகளைத் தொடர்ந்து நடத்துவதையெல்லாம் தவறாக நாம் பார்க்க முடியாது.

சுமந்த் சி. ராமன்
சுமந்த் சி. ராமன்

ஒரு சில வீரர்கள் தனிப்பட்ட முறையில் உதவி செய்கிறார்களே தவிர, ஐசிசி, ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் இந்தியாவின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்பதுதான் மிகவும் வேதனையானது. ஏனெனில், ஐபிஎல் போட்டி என்பது மிகப்பெரிய அளவில் பணப்புழக்கம் நடக்கும் இடம். நாள் முழுக்க கொரோனா தொற்றின் எண்ணிக்கை, மரணம் என அவலச் செய்திகளையே கேட்டுக்கொண்டிருக்கும் மக்களுக்கு ஒரு மருந்து மாதிரி இருக்கும் இந்த ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படுவதில் எந்தத் தவறும் இல்லை” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism