Published:Updated:

``அப்பா, அம்மா நான் கலெக்டராகணும்னு நினைக்கறாங்க” - விரக்தியில் ப்ளஸ் டூ மாணவி தற்கொலை

தற்கொலை ( சித்திரிப்புப் படம் )

படிக்க முடியவில்லை என்ற மன அழுத்தத்தில் இருந்த ப்ளஸ் டூ மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடலூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

``அப்பா, அம்மா நான் கலெக்டராகணும்னு நினைக்கறாங்க” - விரக்தியில் ப்ளஸ் டூ மாணவி தற்கொலை

படிக்க முடியவில்லை என்ற மன அழுத்தத்தில் இருந்த ப்ளஸ் டூ மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடலூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
தற்கொலை ( சித்திரிப்புப் படம் )

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ஆயியார் மடம் தெருவைச் சேர்ந்த மாணவி தீபிகா (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது), அதே பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் ப்ளஸ் டூ படித்துவந்தார். நேற்று முன்தினம் வேலைக்குச் சென்றிருந்த தீபிகாவின் பெற்றோர், வழக்கம்போல இரவு வீடு திரும்பியிருக்கின்றனர். அப்போது வீட்டின் அறையில் துணியில் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்த மகளைப் பார்த்து இருவரும் கதறித் துடித்திருக்கின்றனர். அவர்களின் அழுகுரலைக் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், தூக்கில் தொங்கிய தீபிகாவின் சடலத்தை இறக்கினார்கள். அதையடுத்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்காமல், தீபிகாவின் சடலத்தை அடக்கம் செய்ய முடிவெடுத்த பெற்றோரும் உறவினரும் இறுதி சடங்குக்கான வேலைகளைச் செய்தனர். ஆனால் அந்தத் தகவலைத் தெரிந்துகொண்ட விருத்தாசலம் போலீஸார், மாணவியின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வு சோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அதேபோல தற்கொலைக்கு முன்பு மாணவி தீபிகா எழுதிய கடிதத்தையும் கைப்பற்றினர். மாணவி எழுதிய அந்தக் கடிதத்தில், ``கணக்கு பரீட்சையை நான் சரியாக எழுதவில்லை. தமிழ் பரீட்சைக்கும் நான் சரியாகப் படிக்கவில்லை. அப்பா, அம்மா நான் கலெக்டராகணும்னு நினைக்கறாங்க. ஆனால் அந்த அளவுக்கு என்னால் படிக்க முடியவில்லை. அதனால் அப்பாவும் அம்மாவும் என்னிடம் சரியாகப் பேசுவதில்லை. என்னால் படிக்க முடியாததால் பொதுத்தேர்வில் என்னால் அதிக மதிப்பெண்கள் வாங்க முடியாது. அதனால் வீட்டில் என்னைக் கல்லூரிக்கு அனுப்பாமல் கல்யாணம் செய்து கொடுத்துவிடுவார்கள். நான் கடவுள்கிட்ட போறேன். அப்பா, அம்மா என்னை மன்னிக்கவும். என்னைப் பார்க்க என் நண்பர்கள் வந்தால் அவர்களை விடுங்கள். நான் ஏன் தற்கொலை செய்துகொண்டேன் என்று எல்லோரும் கேட்பார்கள் என்பதால்தான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

தற்கொலைக்கு எதிரான இலவச ஆலோசனை மையங்கள் :

தற்கொலைத் தடுப்பு மையம் - 104

சிநேகா தற்கொலைத் தடுப்பு மையம் - 044 - 24640050, 28352345.

பெண்களுக்கான தீர்வு மையம் - 1091

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!