Published:Updated:

மாயமாகும் கவுன்சிலர்கள்?! - களைகட்டும் கடலூர் மேயர் தேர்தல்... திமுக அமைச்சர்களுக்கு `செக்?!'

தி.மு.க மேயர் வேட்பாளர் சுந்தரி

கடலூர் மேயர் தேர்தலுக்கு திமுக தலைமை அறிவித்த மேயர் வேட்பாளருக்கு எதிர்ப்பு தெரிவித்து, கட்சியின் மற்றோர் அணியினர் கவுன்சிலர்களைக் கடத்தியிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மாயமாகும் கவுன்சிலர்கள்?! - களைகட்டும் கடலூர் மேயர் தேர்தல்... திமுக அமைச்சர்களுக்கு `செக்?!'

கடலூர் மேயர் தேர்தலுக்கு திமுக தலைமை அறிவித்த மேயர் வேட்பாளருக்கு எதிர்ப்பு தெரிவித்து, கட்சியின் மற்றோர் அணியினர் கவுன்சிலர்களைக் கடத்தியிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
தி.மு.க மேயர் வேட்பாளர் சுந்தரி

கடலூர் மாவட்டத்தில், கடலூர் மாநகராட்சி, 6 நகராட்சிகள் மற்றும் 14 பேரூராட்சிகளுக்கான தேர்தல் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. 45 வார்டுகளைக்கொண்ட இந்த மாநகராட்சித் தேர்தலில் தி.மு.க நேரடியாக 27 இடங்களையும், அ.தி.மு.க 6 இடங்களையும், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலா 3 இடங்களையும், பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் தலா ஓர் இடத்தையும், சுயேச்சைகள் 3 இடங்களையும் பிடித்தனர். தேர்தல் முடிவுகள் வெளியான அன்றே இரண்டு சுயேச்சைகளை வளைத்துப்போட்டது தி.மு.க. இதன் மூலம் தி.மு.க கூட்டணி கவுன்சிலர்களின் பலம் 36-ஆக அதிகரித்தது.

கடலூர் மாநகராட்சி மேயர் தேர்தல்
கடலூர் மாநகராட்சி மேயர் தேர்தல்

தொடர்ந்து புதிய மாநகராட்சியின் 45 கவுன்சிலர்களும் நேற்று முன்தினம் பதவியேற்றுக்கொண்டனர். பதவியேற்றுக்கொண்ட வார்டு கவுன்சிலர்கள் தங்களின் மேயர் மற்றும் துணை மேயர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் இன்று நடக்கவிருக்கிறது. போட்டிகள் இருந்தால் தேர்தலும், போட்டிகள் இல்லையென்றால் ஒருமனதாகவே மேயர் மற்றும் துணை மேயர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முதல் மாநகராட்சியின், முதல் மேயர் பதவியை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துவிட வேண்டுமென்று நினைத்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தனது தீவிர ஆதரவாளரான கடலூர் நகரச் செயலாளர் கே.எஸ்.ராஜாவின் மனைவி சுந்தரியைக் களமிறக்கினார். அதேபோல மாவட்டப் பொருளாளரான வி.எஸ்.எல்.குணசேகரன் தன் மனைவி கீதாவை மேயராக்கிவிட வேண்டுமென்று களமிறங்கினார். உள்ளாட்சித் தேர்தலில் கட்சித் தலைமை இவர்களின் பெயர்களை அதிகாரபூர்வமாக வெளியிடுவதற்கு முன்பாகவே, தி.மு.க கட்சித் துண்டுடன் சென்று வேட்புமனுவைத் தாக்கல் செய்தார் நகரச் செயலாளர் கே.எஸ்.ராஜாவின் மனைவி சுந்தரி.

கீதா குணசேகரன்
கீதா குணசேகரன்

``நகரச் செயலாளர் என்றால் கட்சியின் கட்டுப்பாட்டை மீறலாமா... கட்சித் தலைமை அறிவிக்கும் முன்பே தன்னிச்சையாக எப்படி வேட்புமனுவைத் தாக்கல் செய்யலாம்... வேட்பாளர் பட்டியலில் பெயர் இருப்பதை அவருக்குச் சொன்னது யார்?” என்று தலைமைக்கு போன் போட்டு புகார்க் கடிதம் வாசித்தனர் கட்சியின் மூத்த உறுப்பினர்கள். ஆனால், அந்தப் புகார்களை தவிடு பொடியாக்கிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தனது அதிகாரத்தால் கே.எஸ்.ராஜா மற்றும் அவருடைய மனைவி இருவருக்குமே சீட் வழங்க, நொந்துபோனார்கள் கட்சி நிர்வாகிகள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கீதா குணசேகரன், சுந்தரி ராஜா இருவரும் வெற்றிபெற்ற நிலையில், நகரச் செயலாளரான கே.எஸ்.ராஜா தனது சொந்த வார்டிலேயே தோல்வியடைந்தார். அதையடுத்து மேயர் பதவியைப் பிடிக்க கே.எஸ்.ராஜாவும், வி.எஸ்.எல் குணசேகரனும் காய்நகர்த்திவந்த நிலையில், கே.எஸ்.ராஜாவின் மனைவி சுந்தரியை மேயர் வேட்பாளராக அறிவித்தது கட்சித் தலைமை. அந்த அறிவிப்பின் பின்னணியில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தனது செல்வாக்கைச் செலுத்தினார் என்று தகவல் வெளியாக, உஷ்ணமானது வி.எஸ்.எல்.குணசேகரன் தரப்பு.

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

``இதுவரை கட்சி நமக்குப் பெரிதாக எதையும் செய்யவில்லை. இனிமேல் செய்யப்போவதும் இல்லை” என்று நினைத்த வி.எஸ்.எல் தரப்பு தனது சதுரங்க ஆட்டத்தைத் தொடங்கியது. அடுத்தடுத்த நிமிடங்களில் செல்போன்களை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு மாயமானார்கள் தி.மு.க-வின் கவுன்சிலர்கள். மாயமான அந்த கவுன்சிலர்கள் அனைவரும் தற்போது வி.எஸ்.எல்.குணசேகரன் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்களுடன் பா.ஜ.க மற்றும் பா.ம.க-வின் இரண்டு கவுன்சிலர்களும் ஐக்கியமாகிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்தக் காய்நகர்த்தலின் பின்னணியில் கடலூர் தொகுதியின் எம்.எல்.ஏ அய்யப்பன் இருப்பதாக அடித்துக் கூறுகிறது எதிர்த்தரப்பு.

மாயமான தி.மு.க கவுன்சிலர் ஒருவரிடம் பேசினோம். தனது அடையாளத்தை வெளியிடக் கூடாது என்ற நிபந்தனையுடன் நம்மிடம் பேச ஆரம்பித்தவர், ``எங்களை யாரும் கடத்தவில்லை. நாங்கள்தான் தலைமறைவாக இருக்கிறோம். நாங்கள் ஒவ்வொருவரும் பலமாகச் செலவு செய்து வெற்றிபெற்றிருக்கிறோம். அதை ஈடுகட்ட வேண்டும். தலைமை சொல்லிவிட்டதே என்று நாங்கள் போண்டியாக முடியாது” என்றார் ஆவேசமாக. கவுன்சிலர்கள் மாயமான விவகாரம் கடலூர் முழுவதும் பரவியதையடுத்து, அவர்களைச் சமாதானப்படுத்தும் தொடர் முயற்சியில் இறங்கியிருக்கிறாராம் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

அமைச்சர் சி.வி.கணேசன்
அமைச்சர் சி.வி.கணேசன்

இது ஒருபுறமிருக்க நெல்லிக்குப்பம் நகராட்சியிலும் தலைமைக்கு எதிராகக் கம்பு சுற்றுகின்றனர் தி.மு.க கவுன்சிலர்கள். நெல்லிக்குப்பம் நகராட்சியின் சேர்மன் பதவி பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. 30 வார்டுகளைக்கொண்ட இந்த நகராட்சியில் தி.மு.க நேரடியாக 13 இடங்களையும், காங்கிரஸ், முஸ்லிம் லீக், ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தலா ஓர் இடத்தையும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இரண்டு இடங்களையும் பிடித்தன. இவர்கள் தவிர 7 சுயேச்சைகள் வார்டுகளைக் கைப்பற்றியிருந்தனர். தி.மு.க தரப்பில் ஆர்.ஆர்.மெட்ரிக் பள்ளியின் உரிமையாளரும், தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் கௌரவச் செயலாளருமான ராதாகிருஷ்ணனின் மனைவி ஜெயந்தி ராதாகிருஷ்ணன்தான் சேர்மன் வேட்பாளர் என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் கூட்டணிக் கட்சியான வி.சி.க-வுக்கு அந்த சேர்மன் பதவி ஒதுக்கப்பட்டதால் கடும் அதிருப்தியடைந்த ராதாகிருஷ்ணன் தரப்பு, தி.மு.க-வின் 13 கவுன்சிலர்கள் மற்றும் 7 சுயேச்சை கவுன்சிலர்களை இரவோடு இரவாக ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்றதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. ``சேர்மன் பதவி உங்களுக்குத்தான் என்று அமைச்சர் சி.வெ.கணேசன் வாக்குறுதி கொடுத்ததால்தான் ராதாகிருஷ்ணன் வைட்டமின்களை தண்ணீர் மாதிரி கடன் வாங்கிச் செலவு செய்தார். கட்சி பணம் கொடுக்காத நிலையில், சேர்மன் வேட்பாளர் என்ற முறையில் மற்ற வேட்பாளர்களின் செலவையும் ராதாகிருஷ்ணன்தான் பார்த்தார்.

அப்படி இருக்கும்போது கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்குவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்... கடந்த நான்கு தேர்தல்களிலும் சேர்மன் பதவி தனிப்பிரிவினரிடம் இருந்ததால்தான் இந்தமுறை பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்படியிருக்கும்போது கூட்டணி என்ற பெயரில் மீண்டும் தனிப்பிரிவினருக்கே ஒதுக்குவது எப்படிச் சரியாக இருக்கும்... மக்கள் எப்படி அதை ஏற்றுக்கொள்வார்கள்... இதை முன்பே சொல்லியிருந்தால் நாங்கள் ஏன் கந்து வட்டிக்குக் கடன் வாங்கி இவ்வளவு செலவு செய்திருக்கப்போகிறோம்? எங்களை நம்பவைத்து ஏமாற்றிய கட்சி இனி எங்களுக்குத் தேவையில்லை. மறைமுகத் தேர்தலில் பார்த்துக்கொள்ளலாம்” என்று கொதிக்கிறது ராதாகிருஷ்ணன் தரப்பு.

தி.மு.க கவுன்சிலர்களின் இந்த ஆடுபுலி ஆட்டத்தால் செய்வதறியாமல் திகைத்து நிற்கின்றனர் மாவட்டத்தின் இரண்டு அமைச்சர்களும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism