Published:Updated:

வெற்றிவேல் வீரவேல்: `பா.ஜ.க பெயரில் அச்சிடப்பட்ட புத்தகம்!’ - கு.க.செல்வம் அலுவலகத்தில் விநியோகம்

கந்த சஷ்டி கவசம்
கந்த சஷ்டி கவசம்

டெல்லியில் தேசிய பா.ஜ.க தலைவரை கு.க.செல்வம் சந்திக்கும்போது தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகனும் உடனிருந்தார். தமிழகத்தில் அப்போது அதிர்வலைகளை ஏற்படுத்திய சர்ச்சைகள் தொடர்பாக இருவரும் விவாதித்ததாகக் கூறப்படுகிறது.

சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினராகவும், தி.மு.க-வின் தலைமை நிலையச் செயலாளராகவும் இருந்த கு.க.செல்வம், சமீபத்தில் டெல்லியில் பா.ஜ.க-வின் தேசிய தலைவர் நட்டாவைச் சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. பா.ஜ.க-வில் அவர் இணையப்போகிறார் என்று செய்திகள் உறுதியாக வந்த நிலையில், `இணைவதற்காக வரவில்லை. மோடியின் நல்லாட்சியை வாழ்த்தவே வந்தேன்’ என்று சொல்லிவிட்டு சென்னை திரும்பினார். மேலும், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு இரண்டு லிஃப்டுகள் வேண்டும் என்று கோரிக்கை வைப்பதற்காக பியூஷ் கோயலை சந்தித்ததாக கு.க.செல்வம் கூறினார்.

கு.க.செல்வம்
கு.க.செல்வம்
Photo: Srinivasulu / Vikatan

கு.க.செல்வம், தி.மு.க-வின் இரண்டாம் கட்டத் தலைவர்களில் முக்கியமானவர். கருணாநிதி குடும்பத்துக்கும் ஸ்டாலின் குடும்பத்துக்கும் நெருக்கமானவர். கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவர் அதிருப்தி காரணமாக மாற்றுக் கட்சியை நாடியது தி.மு.க-வுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. இந்த நிலையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. அதையொட்டி, சென்னையில் பா.ஜ.க-வின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கு.க.செல்வம், கமலாலயத்துக்குச் சென்றார். அவருக்கு காவி நிற சால்வை அணித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கு.க.செல்வம் தி.மு.க-வின் தலைமை நிலைய அலுவலகச் செயலாளர் மற்றும் தலைமைச் செயற்குழு உறுப்பினர் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்படுவதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். மேலும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ஏன் நீக்கக்கூடாது என அவருக்கு விளக்கம் கேட்டு கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில் எம்.எல்.ஏ. கு.க.செல்வம் தி.மு.க-வுக்கு பதில் கடிதம் எழுதி உள்ளார். அதில் இந்த சஸ்பெண்ட் இயற்கை நீதிக்கு விரோதமானது. சஸ்பெண்ட் செய்ததை வாபஸ் பெறுங்கள். பா.ஜ.க-வைச் சேர்ந்த பிரதமர் மோடி கலைஞரை நேரில் சந்தித்தது அனைவருக்கும் தெரியும். கட்சியின் மாண்பை நான் மீறியதாகக் கூறுவது சரியல்ல. நான் என்ன அவதூறு சொன்னேன் என நோட்டீஸில் குறிப்பிடவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

கு.க.செல்வம்
கு.க.செல்வம்
Photo: Srinivasulu / Vikatan

இதனிடையே டெல்லியில் பா.ஜ.க-வின் தேசிய தலைவரை கு.க.செல்வம் சந்திக்கும்போது தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகனும் உடனிருந்தார். தமிழகத்தில் அப்போது அதிர்வலைகளை ஏற்படுத்திய கந்த சஷ்டி விவகாரம் தொடர்பாக இருவரும் விவாதித்ததாகக் கூறப்படுகிறது. அதிகாரபூர்வமாக தான் பா.ஜ.க-வில் இணையப்போகிறேன் என்று இன்னமும் அறிவிக்காத நிலையில் அவரது எம்.எல்.ஏ அலுவலகத்தில் கந்த கஷ்டி கவசம் புத்தகமாக வழங்கப்படுகிறது. அதுவும் அவர் சார்பாக இல்லை. பா.ஜ.க நிர்வாகி ஒருவரால் பா.ஜ.க என்று கட்சி பெயருடன் அச்சிடப்பட்ட புத்தகத்தை விநியோகம் செய்கிறார்கள். `அவர் அறிவிக்கதான் இல்லை. மற்றபடி முழுமையான பா.ஜ.க ஆளாக மாறிவிட்டார். விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பும் வந்துவிடும்’ என்கிறார்கள் அலுவலகத்துக்கு நெருக்கமான சிலர்!

அடுத்த கட்டுரைக்கு