Published:Updated:

கடலூர்: சேற்றில் நெளிந்த மக்கள்! - தி.மு.க-வின் மக்கள் கிராமசபைக் கூட்டக் குளறுபடி

மக்கள் கிராமசபைக் கூட்டம்
மக்கள் கிராமசபைக் கூட்டம்

கடலூரில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்ட மக்கள் கிராமசபைக் கூட்டத்துக்காக, இரண்டு மணி நேரத்துக்கும் மேல் பொதுமக்களைச் சேற்றில் உழலவைத்த நிகழ்வு தொண்டர்களை முகம் சுளிக்கவைத்தது.

2021 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் `அ.தி.மு.க-வை நிராகரிக்கிறோம்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுக்க மக்கள் கிராமசபைக் கூட்டத்தை நடத்திவருகிறார். அதன்படி நேற்று (04.01.2020) கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில், தெற்கு ஒன்றியம் பாதிரிக்குப்பம் ஊராட்சிப் பகுதியில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

மக்கள் கிராமசபைக் கூட்டம்
மக்கள் கிராமசபைக் கூட்டம்

கூட்டத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட இடமே முதலில் தொண்டர்களை முகம் சுளிக்கவைத்தது. தரையில் கால் வைத்தால் அரை அடிக்கு உள்ளே செல்லுமளவுக்கு சேறும் சகதியும் இருந்த இடத்தில் சிவப்பு நிற தரை விரிப்பு போடப்பட்டிருந்தது. மாலை 4 மணிக்கு ஸ்டாலின் வருவதாகக் கூறப்பட்டிருந்ததால் 3 மணிக்கே அந்த இடத்தில் பெண்கள் தரையில் அமரவைக்கப்பட்டார்கள்.

சிறிது நேரத்திலேயே தரைவிரிப்பைத் தாண்டி சேறும் நீரும் மேலே வந்துவிட்டதால் மக்கள் நெளியத் தொடங்கினர். தரைவிரிப்பு முழுவதும் ஈரமாகிவிட்டதால், இடம் மாறி மாறி உட்கார்ந்தும் பயனில்லாமல் போனது. `தலைவர் இதோ வருகிறார்... அதோ வருகிறார்' என்று நிர்வாகிகள் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்ததால் வேறு வழியில்லாமல் அந்தச் சேற்றிலேயே அமர்ந்திருந்தனர் மக்கள்.

மக்கள் கிராமசபைக் கூட்டம்
மக்கள் கிராமசபைக் கூட்டம்

வயதான மற்றும் நடுத்தர வயது பெண்கள், குழந்தைகள் என அங்கு அமரவைக்கப்பட்டிருந்த அனைவரின் கால்களும் உடைகளும் சேற்று நீரில் முழுக்க ஈரமாகின. ஸ்டாலினுக்காக அமைக்கப்பட்டிருந்த மேடையிலும் இதேநிலைதான். மாலை 5:30 மணிக்கு ஸ்டாலின் வருவதற்கு முன்பாக அந்த இடத்தில் மட்டும் ஏற்கெனவே தயாராகவைத்திருந்த மற்றுமொரு விரிப்பை விரித்தார்கள்.

``இந்தச் சேத்துல எவ்ளோ நேரம்யா உக்கார்ந்துக்கிட்டு கெடக்கறது... இந்த ஊருல வேற இடமே இல்லையா? இந்தச் சேத்துல அப்படியே நடவு நட்டுறலாம்யா. புடவைல்லாம் நனைஞ்சு போச்சுய்யா..” என்று புலம்ப ஆரம்பித்தனர் வயதான பெண்கள். இடம் தேர்வு செய்வதில்தான் பிரச்னை என்றால் ஸ்டாலினிடம் குறைகளைத் தெரிவிக்கும் ஆட்களைத் தேர்வு செய்வதிலும் கோட்டைவிட்டிருந்தனர் நிர்வாகிகள்.

ஸ்டாலினிடம் குறை கூற வந்திருந்த அனைவருமே தி.மு.க தொண்டர்கள் என்று வெளிப்படையாகவே தெரியும் அளவுக்கு `முத்தமிழ் அறிஞரின் புதல்வனே' என்று கவி பாடினார்கள். அதிலும் ரமேஷ் என்ற இளைஞர் தன்னை தி.மு.க இளைஞரணி என்றே அறிமுகப்படுத்திக்கொண்டு பேசியதுதான் ஹைலைட். உடைகள் நனைந்து, நெளிந்துகொண்டிருந்த மக்கள் ஸ்டாலின் பேசத் தொடங்கியதுமே கலைந்துவிட்டதால் கறுத்துப்போனது ஸ்டாலினின் முகம்.

கோவை : மக்கள் கிராம சபை கூட்டத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின்! #PhotoAlbum
அடுத்த கட்டுரைக்கு