மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸின் எம்.எல்.ஏ ஒருவர், பெண்களை அவதூறு செய்யும் வகையில் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

மேற்கு வங்கத்தில் பேசிய திரிணாமுல் எம்.எல்.ஏ மதன் மித்ரா, ``ஐந்து கணவர்கள் கூட ஒரே மனைவியைப் பகிர்ந்துகொள்ளலாம் என்பதுதான் இந்திய கலாசாரம்" என்று கூறியிருக்கிறார். பெண்களை அவதூறு செய்யும் வகையில் பேசியிருப்பது தற்போது பேசுபொருளாகியிருக்கிறது.
மத்திய கல்வி அமைச்சகத்தின் மத்திய கள ஆய்வுக் குழு, மேற்கு வங்கத்தில் மதிய உணவுத் திட்டத்தை மறுஆய்வு செய்தபோது, ஏழு சமையல் உதவியாளர்களுக்கு, ஐந்து பேருக்கு வழங்கப்படும் ஊதியத்தை சமமாக வழங்கி முறைகேடு நடந்ததைக் கண்டுபிடித்தது குறித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் மதன் மித்ராவின் இத்தகைய பேச்சு, எதிர்க்கட்சியான பா.ஜ.க மட்டுமல்லாமல், சொந்தக் கட்சியிலேயேகூட பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதற்கு எதிர்வினையாற்றிய பா.ஜ.க எம்.எல்.ஏ அக்னிமித்ரா பால், ``மாநிலத்தின் ஆளுங்கட்சி, பெண்கள்மீது எந்த மரியாதையும் வைக்கவில்லை என்பதற்கு மித்ராவின் கருத்துகளே போதுமான சான்று. திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களின் பட்டியலில், பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட பலர் இருப்பதற்கும் இதுதான் காரணம்" என்றார். இருப்பினும் திரிணாமுல் காங்கிரஸ் இதுகுறித்து எந்தவொரு கருத்தும் இதுவரை தெரிவிக்கவில்லை.