Published:Updated:

கர்நாடகா: `கோலார்’ தொகுதியில் களமிறங்கும் சித்தராமையா... கடும் போட்டிச்சூழலை எதிர்கொண்டு வெல்வரா?

காங்கிரஸ் சித்தராமையா.

கோலாரில் மும்முனைப் போட்டிச்சூழல் உள்ளதால், கடுமையாகப் போராடினால் மட்டுமே வெற்றி என்ற நிலை உருவாகியிருக்கிறது.

கர்நாடகா: `கோலார்’ தொகுதியில் களமிறங்கும் சித்தராமையா... கடும் போட்டிச்சூழலை எதிர்கொண்டு வெல்வரா?

கோலாரில் மும்முனைப் போட்டிச்சூழல் உள்ளதால், கடுமையாகப் போராடினால் மட்டுமே வெற்றி என்ற நிலை உருவாகியிருக்கிறது.

Published:Updated:
காங்கிரஸ் சித்தராமையா.

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்கட்சித்தலைவருமானவர் சித்தராமையா (75). 1984-களில் அரசியல் வாழ்வைத் தொடங்கி, ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் சுயேட்சையாகக் களம் கண்டு எம்.எல்.ஏ-வாக வென்றிருக்கிறார். பிறகு கடந்த, 17 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார். தற்போது, கர்நாடக காங்கிரஸின் ‘ஐகான்’ இவர்தான்.

இன்னும் நான்கு மாதங்களுக்குள் கர்நாடகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கிற நிலையில் தினமும் பேச்சு, பேட்டி, அறிக்கை என, அரசியல் களத்தைச் சூடாகவே வைத்துவருகிறார். இவர் எந்தத்தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவிவந்த நிலையில், ‘வரும் தேர்தலில் கோலார் மாவட்டத்தில் போட்டியிட திட்டமிட்டிருக்கிறேன். ஆனால், இது மேலிடத்தின் உத்தரவுக்கு உட்பட்டது’ என தெரிவித்து, கோலார் மாவட்டத்தில் போட்டியிடுவதை உறுதிசெய்திருக்கிறார். கோலார் மாவட்டத்தில் சித்தராமையா சந்திக்கவிருக்கிற பிரச்னைகள் குறித்தும், கடந்த தேர்தலில் அவரின் வெற்றி குறித்தும் பார்ப்போம்...

வெற்றி பெற்ற போது.
வெற்றி பெற்ற போது.

ஒரு படுதோல்வி, அதிர்ச்சியான வெற்றி!

2018-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், மைசூரிலுள்ள சாமுண்டீஸ்வரி, பாகல்கோட்டை மாவட்டத்திலுள்ள பதாமி ஆகிய இரு தொகுதிகளில் சித்தராமையா போட்டியிட்டார். சாமுண்டீஸ்வரி தொகுதியில், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் வேட்பாளர் ஜி.டி.தேவகெளடாவிடம், 36,042 ஓட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தார். மறுபுறம் பதாமியில், தனக்கெதிராகப் போட்டியிட்ட பா.ஜ.க ஸ்ரீராமலுவைவிட வெறும், 1,696 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். பதாமியில் சித்தராமையாவின் சமூகமான குறுபா மக்கள் பலர் இருந்தும், லிங்காயத் சமூக மக்களின் ‘டாமினேஷன்’, வாக்கு வங்கிச் சிதறல் காரணமாகக் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றியடைந்தார்.

தொகுதி – ‘கோலார்’

கோலார் மாவட்டத்தில் மொத்தம், ஆறு சட்டப்பேரவை தொகுதிகள் இருக்கின்றன. இதில், கோலார் தொகுதியைப் பொறுத்தவரையில், 18 சதவிகிதம் குறுபா மக்கள், 19 சதவிகிதம் பட்டியலின மக்கள், 20-க்கும் அதிகமான சதவிகிதத்தில் இஸ்லாமிய மக்களும், மீத எண்ணிக்கையில் கெளடா, லிங்காயத் மற்றும் ஒக்கலிகா மக்கள் உள்ளனர்.

சித்தராமையா.
சித்தராமையா.

இந்தத் தொகுதியில், 2018ல் மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் போட்டியிட்ட ஸ்ரீனிவாசகெளடா தற்போது எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். ஆனால், இவர் கடந்த மூன்று மாதங்களாகவே காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும், தன் தொகுதியை சித்தராமையாவுக்கு விட்டுக்கொடுத்துவிட்டு, காங்கிரஸ் கட்சியில் இணைவதாகவும் தெரிவித்திருக்கிறார். இதனால், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் வரும் தேர்தலுக்கு கோலார் தொகுதியில் போட்டியிட, பல ஆண்டுகளாகக் கட்சியிலுள்ள சி.எம்.ஆர் ஸ்ரீநாத் என்பவரை களமிறக்குவதாக அறிவித்திருக்கிறது.

‘டப் பைட்’ சூழல் உருவாகும்!

மறுபுறம் கோலார் தொகுதியில் அதிக செல்வாக்குகொண்ட, சித்தராமையாவின் அதே குறுபா சமூகத்தைச் சேர்ந்தவர் வர்தூர் பிரகாஷ். சுயேட்சையாகப் போட்டியிட்ட இவர், 2008, 2013-ல் கோலார் எம்.எல்.ஏ-வாக வெற்றிபெற்றிருக்கிறார். சித்தராமையாவின் ஆதரவாளராக இருந்த இவர், கடந்தாண்டு பா.ஜ.க-வில் இணைந்து, வரும் தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிடுகிறார்.

கோலார் தொகுதியில் சித்தராமையா.
கோலார் தொகுதியில் சித்தராமையா.

சுயேட்சையாகவே செல்வாக்குள்ள வர்தூர் பிரகாஷ் பா.ஜ.க-வின் ஆதரவுடன் களம் காண்பதுடன், குறுபா மக்களிடம் நல்ல மதிப்பைப் பெற்றிருப்பதால், பெரும் அளவில் ஓட்டுகளைப் பெறுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது. கோலாரில் மும்முனை போட்டிச்சூழல் உள்ளதால், கடுமையாகப் போராடினால் மட்டுமே வெற்றி என்ற நிலை உருவாகியிருக்கிறது.

‘தோல்வியைச் சந்தித்தால் சிரமம்‘!

அரசியல் விமர்சகர்களிடம் பேசினோம், ‘‘கடந்த முறை இரண்டு இடங்களில் போட்டியிட்ட சித்தராமையா, இந்த முறை ஒரே தொகுதியில் போட்டியிடுகிறார். ‘சேஃப் சீட்’ என நினைத்து கோலார் தொகுதியைத் தேர்வுசெய்திருக்கிறார். ஒருபுறம் இஸ்லாமிய மக்கள், கெளடா, லிங்காயத் சமூக ஓட்டுகள் அதிக அளவில், ஜனதா தளம் கட்சிக்குச் செல்லும். குறுபா மக்களின் ஓட்டுகள் சித்தராமையா, வர்தூர் பிரகாஷுக்குப் பிரிந்து செல்லும். பட்டியலின மக்களின் ஓட்டுகள் யாருக்கு செல்லுமென்பதே தெரியாத சூழல் நிலவுகிறது. கோலார் தொகுதியில் காங்கிரஸ் சார்பில், ஏழு முறை எம்.பி-யாக தேர்வாகி, முன்னாள் அமைச்சராகவுள்ள கே.ஹெச்.முனியப்பா மற்றும் அவரின் தொண்டர்கள், சித்தராமையாவுக்கு ஆதரவு தெரிவிக்காமல் விலகியே இருக்கின்றனர். சமூகங்களின் வாக்கு வங்கிச் சிதறல், போதிய ஆதரவு இல்லாத நிலை உள்ளிட்ட சூழல்கள் உருவாகி, ஒருவேளை தோல்வியைச் சந்தித்தால், சித்தராமையாவுக்குச் சிரமத்தையும், அது அரசியல் களத்தில் பெரும் மாற்றத்தையும் உருவாக்கும்’’ என்றனர்.