Published:Updated:

கர்நாடகா Vs மகாராஷ்டிரா எல்லைப் பிரச்னை; லாரி கண்ணாடிகள் உடைப்பு - 700 பேர் கைது; பஸ் சேவை ரத்து!

போராட்டம் நடத்திய கன்னட அமைப்பினர்.

‘ஒரே நாடு’ என்ற கருத்துடன் மாநிலங்களை ஒன்றாக இணைக்கும் வகையில், மோடி தலைமையிலான பாஜக அரசு திட்டங்களை அறிவித்து வரும் நிலையில், பாஜக - பாஜக கூட்டணி ஆட்சி நடக்கும் மாநிலங்களிடையே, எல்லை விவகாரம் மோதலாகிவருவது விவாதப் பொருளாகியிருக்கிறது.

கர்நாடகா Vs மகாராஷ்டிரா எல்லைப் பிரச்னை; லாரி கண்ணாடிகள் உடைப்பு - 700 பேர் கைது; பஸ் சேவை ரத்து!

‘ஒரே நாடு’ என்ற கருத்துடன் மாநிலங்களை ஒன்றாக இணைக்கும் வகையில், மோடி தலைமையிலான பாஜக அரசு திட்டங்களை அறிவித்து வரும் நிலையில், பாஜக - பாஜக கூட்டணி ஆட்சி நடக்கும் மாநிலங்களிடையே, எல்லை விவகாரம் மோதலாகிவருவது விவாதப் பொருளாகியிருக்கிறது.

Published:Updated:
போராட்டம் நடத்திய கன்னட அமைப்பினர்.

கர்நாடகா – மகாராஷ்டிரா இடையே, பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்னை உள்ளது. மராத்தி மொழி பேசும் மக்கள் இருக்கும், 865 கிராமங்களை கர்நாடகாவிலிருந்து பிரித்து மகாராஷ்டிராவில் இணைக்கவும், மகாராஷ்டிராவில் கன்னடம் பேசும் மக்கள் இருக்கும், 53 கிராமங்களை கர்நாடகாவில் இணைக்கவும் இரு மாநிலங்களும் பல ஆண்டுகளாக முயன்றுவருகின்றன.

போராட்டம் நடத்திய கன்னட அமைப்பினர்
போராட்டம் நடத்திய கன்னட அமைப்பினர்

இந்தப் பணிக்காக மகாராஷ்டிராவிலிருந்து அமைச்சர்கள் சந்திரகாந்த் பாட்டீல், சம்புராஜ் தேசாய் ஆகியோர் நேற்று காலை, பெல்காமுக்குச் செல்வதாக அறிவித்தனர். இதனால், முதல்வர் பசவராஜ் பொம்மை, பெல்காமில் 144 தடை உத்தரவு பிறப்பித்து, ‘அமைச்சர்கள் பெல்காமில் நுழைந்தால் கைதுசெய்யப்படுவார்கள்’ என அறிவித்தார். இதைத் தொடர்ந்து, அமைச்சர்கள் பெல்காமுக்கு வரும் தங்கள் திட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிட்டனர்.

இந்த நிலையில், அமைச்சர் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெல்காம் எல்லையில், கன்னட அமைப்பினர் திரண்டு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த மகாராஷ்டிரா பதிவெண்கொண்ட இரு லாரிகளின் கண்ணாடிகளை போராட்டக்காரர்கள் உடைத்தனர். இரு மாநில எல்லையில் பதற்றம் பற்றிக்கொண்டதைத் தொடர்ந்து, போராட்டம் நடத்திய, 720-க்கும் மேற்பட்டோரை கர்நாடக போலீஸார் கைதுசெய்தனர்.

இதற்கு எதிர்விளைவாக, சிவசேனா கட்சித் தொண்டர்கள் சிலர், மகாராஷ்டிரா புனே அருகேயுள்ள சுவர்கேட் பகுதியில், மூன்று கர்நாடக அரசு பஸ்களில், ‘ஜெய் மகாராஷ்டிரா’ என கறுப்பு, ஆரஞ்சு நிற ‘ஸ்பிரே பெயின்ட்’ அடித்து எதிர்ப்பைப் பதிவுசெய்தனர். மேலும், கோலாப்பூர் சுற்றுப்பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

லாரி கண்ணாடி உடைப்பு.
லாரி கண்ணாடி உடைப்பு.
Special Arrangement.

பிரச்னை பூதாகரமானதைத் தொடர்ந்து, ‘எங்கள் பஸ்களுக்கு கர்நாடகாவில் பாதுகாப்பு கிடைக்காது என்பதால், மகாராஷ்டிராவிலிருந்து கர்நாடகாவுக்கு பஸ் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது’ என மகாராஷ்டிரா போக்குவரத்துத்துறை அறிவித்திருக்கிறது.

கர்நாடக பஸ்ஸில் – ‘ஜெய் மகாராஷ்டிரா’ பெயின்ட்.
கர்நாடக பஸ்ஸில் – ‘ஜெய் மகாராஷ்டிரா’ பெயின்ட்.

மகாராஷ்டிரா சிவசேனா, காங்கிரஸ் உட்பட அந்த மாநிலத்தில் பெரும்பாலானா கட்சியினர், ‘கர்நாடக எல்லையிலுள்ள கிராமங்களை இணைத்து மகாராஷ்டிரா அரசு தனது உரிமையை நிலைநாட்ட வேண்டும்,’’ எனத் தொடர்ந்து ஆக்ரோஷமான கருத்துகளைப் பதிவிட்டுவருவதால், இரு மாநில எல்லைப் பகுதிகளில் பதற்றம் காட்டுத்தீபோல பரவியிருக்கிறது.

பொறுமைக்கு எல்லையுண்டு!

மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத் பவார் நிருபர்களிடம், ‘‘மாநில எல்லையில், மகாராஷ்டிரா வாகனங்கள் தாக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. இந்தத் தாக்குதல்கள் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் அவரின் ஆதரவாளர்களால் நடத்தப்பட்டன எனக் கண்டறிந்தால், நாட்டின் ஒருமைப்பாடு குலையும். அதற்கு கர்நாடக முதல்வர்தான் பொறுப்பு.

சரத்பவார்
சரத்பவார்

அம்பேத்கரின் நினைவுநாளான இன்று மாநில எல்லையில் பிரச்னை ஏற்பட்டிருப்பது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு பிரச்னையில் தலையிட்டு விரைவில் சுமுகமான முடிவை எடுக்க வேண்டும். நாங்கள் மிகப் பொறுமையாக இருக்கிறோம். எங்கள் பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு’’ எனக் காட்டமாகத் தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

‘ஒரே நாடு’ என்ற கருத்துடன் மாநிலங்களை ஒன்றாக இணைக்கும் வகையில், மோடி தலைமையிலான பாஜக அரசு திட்டங்களை அறிவித்துவரும் நிலையில், பாஜக மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடக்கும் மாநிலங்களிடையே, மோதல் போக்கு நிலவிவருவதை, நெட்டிசன்கள் கலாய்த்துவருகின்றனர்.