கர்நாடகாவில் தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையாக ஆட்சியைப் பிடித்திருக்கிறது. பாஜக 66 இடங்களை பிடித்திருக்கிறது. அதேபோல் கடந்த தேர்தலில் ஆட்சிக் கவிழ்ப்புக்குள்ளான காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்த மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி இந்த முறை தனியாகக் களமிறங்கி வெறும் 19 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது.
இதுவொருபக்கமிருக்க, காங்கிரஸ் வெற்றிபெற்றும்கூட ஐந்து நாள்களாக யார் முதல்வர் என்று அறிவிக்காமலேயே இருந்தது. பின்னர் நீண்ட ஓர் ஆலோசனைக்குப் பிறகு ஒருவழியாக சித்தராமையாவை முதல்வராகவும், டி.கே.சிவகுமாரை துணை முதல்வராகவும் காங்கிரஸ் நேற்று அறிவித்தது. இந்த நிலையில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான குமாரசாமி, `அடுத்த இரண்டு மூன்று மாதங்களில் புதிய அரசியல் மாற்றம் (New Political Developments)' என்று பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
இந்தத் தேர்தலில் சன்னபட்னா தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற குமாரசாமி, தனக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக நேற்று கூட்டமொன்றில் பேசியபோது, ``பா.ஜ.க அரசின் கொள்ளை இப்போதும் தொடரும். தற்போதைய அரசியல் மாற்றம் குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம். இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில் புதிய அரசியல் முன்னேற்றங்கள் ஏற்படும். எனவே, கட்சித் தொண்டர்கள் யாரும் இதில் மனம் தளரவேண்டிய அவசியமில்லை. இது போன்ற தோல்வி ஒன்றும் கட்சிக்குப் புதிதல்ல.

நேர்மையான உழைப்பாளிகளுடன், கடவுளின் ஆசீர்வாதமும் நமக்கு இருக்கிறது. கட்சித் தொண்டர்கள் வலுவாக இருக்க வேண்டும். வரும் நாள்களில் கட்சி வலுப்பெறும். எங்களிடம் 19 இடங்கள் இருக்கின்றன. விவசாயிகளுக்காகப் போராடும் வலிமை இருக்கிறது" என்றார்.
மேலும் காங்கிரஸை நோக்கிக் கேள்வியெழுப்பிய குமாரசாமி, ``புதிய அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துவது என்பது எளிதானதல்ல. இதற்கெல்லாம் அவர்களுக்கு 70,000 முதல் 80,000 கோடி ரூபாய் தேவைப்படும். இந்தப் பணத்தை எங்கிருந்து கொண்டுவரப் போகிறார்கள்... மற்ற வளர்ச்சிப் பணிகளுக்குப் பணத்தை எங்கிருந்து கொண்டு வருவார்கள்?" என்று கேட்டார்.