Published:Updated:

ஓணம் புத்தாடையுடன் ரூ.10,000 கொடுத்த நகராட்சித் தலைவி; திருப்பிக்கொடுத்த கவுன்சிலர்கள்-நடந்தது என்ன?

கேரள மாநிலத்தின் திருக்காகர நகராட்சி அலுவலகம்
கேரள மாநிலத்தின் திருக்காகர நகராட்சி அலுவலகம்

ஓணம் பண்டிகைக்காக கவுன்சிலர்களுக்கு புத்தாடையுடன் தலா 10,000 ரூபாய் வழங்கியதாக எழுந்துள்ள சர்ச்சை கேரளத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

கேரள மாநிலத்தின் பாரம்பர்ய விழாவான ஓணம் பண்டிகை வரும் சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. ஓணம் பண்டிகையின்போது இரண்டு மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளிவிட்டு, கைகளைக் கழுவி பாதுகாப்பாகக் கொண்டாட வேண்டும் என மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆன்லைன் மூலம் ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தில் கலந்துகொண்டார். தமிழ்நாட்டின் பொங்கல் பண்டிகை போன்று கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகைக்கு புத்தாடைகள் அணிந்து `ஓண சத்யை’ எனப்படும் பலவகை கூட்டு, பொரியலுடன் மதிய உணவு உண்பதும், ஓண ஊஞ்சல் ஆடுவதும், மலர்களால் வீட்டு முற்றத்தில் அத்தப்பூ கோலம் போடுவதும் சிறப்பான நிகழ்வுகளாகும்.

பாரம்பர்ய விழாவான ஓணம் பண்டிகையின்போதுதான் கேரளத்தில் அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுகிறது. மிக விமர்சையாகக் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையின்போது கவுன்சிலர்களுக்குப் பணம் கொடுத்ததாக புகாரில் சிக்கியுள்ளார் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த நகராட்சித் தலைவி ஒருவர்.

ஓணம் பண்டிகைக்கு கவுன்சிலர்களுக்கு பணம் கொடுத்ததாகக் கூறப்படும் திருக்காகர நகராட்சி தலைவி அஜிதா தங்கப்பன்
ஓணம் பண்டிகைக்கு கவுன்சிலர்களுக்கு பணம் கொடுத்ததாகக் கூறப்படும் திருக்காகர நகராட்சி தலைவி அஜிதா தங்கப்பன்

எர்ணாகுளம் மாவட்டம், திருக்காக்கர நகராட்சி கவுன்சிலர்களுக்கு ஓணக்கோடி (புத்தாடை) உடன் 10,000 ரூபாய் வழங்கியதாக சர்ச்சையில் சிக்கியுள்ளார் நகராட்சித் தலைவர் அஜிதா தங்கப்பன். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜிதா தங்கப்பன், தனது நகராட்சியிலுள்ள கவுன்சிலர்கள் 43 பேருக்கு ஓணக்கோடி கொடுத்ததுடன், அவர்களை தனது அறைக்கு அழைத்து தலா 10,000 ரூபாய் பணம் அடங்கிய கவரைக் கொடுத்திருக்கிறார்.

எதிர்க்கட்சியைச் சேர்ந்த 18 கவுன்சிலர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட 10,000 ரூபாய் பணத்தைத் திருப்பிக் கொடுத்ததுடன் அது குறித்து விஜிலென்ஸ் விசாரணை வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். நகரசபையில் நடக்கும் முறைகேடுகள் மூலம் வந்த பணத்தை கவுன்சிலர்களுக்குக் கொடுத்ததாக எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் புகார் கூறியுள்ளனர். அதோடு நகராட்சித் தலைவர் உள்ளிட்ட சிலர் தலா 25 லட்சம் ரூபாய் வரை ஓணம் பண்டிகைக்காகப் பெற்றிருக்கலாம் என்ற புகாரையும் எதிர்கட்சியினர் முன்வைத்துள்ளனர். மேலும், சுகாதாரப் பணியாளர்களுக்கு வழங்கிய புத்தாடை தரமற்றது எனக் கூறி பணியாளர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

கேரள மாநிலத்தின் திருக்காகர நகராட்சி அலுவலகம்
கேரள மாநிலத்தின் திருக்காகர நகராட்சி அலுவலகம்

இது குறித்து கருத்து தெரிவித்த நகராட்சித் தலைவி அஜிதா தங்கப்பன், "இந்தக் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. புதிய ஆட்சிமன்றத்தைக் கலைக்க எதிர்க்கட்சியினர் திட்டம் தீட்டுகின்றனர். அவ்வளவு பணம் கொடுக்கும் அளவுக்கு என்னிடம் தகுதி இல்லை. அவர்கள் இது குறித்து புகார் அளிக்கட்டும். உண்மை என்னவென்று விளக்க நான் தயார்" என்றார்.

ஓணம் பண்டிகைக்காக கவுன்சிலர்களுக்கு புத்தாடையுடன் தலா 10,000 ரூபாய் வழங்கியதாக எழுந்துள்ள சர்ச்சை கேரளத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

ஓணம் பண்டிகை - ஆகஸ்ட் 21
அடுத்த கட்டுரைக்கு