Published:Updated:

மதுரை எய்ம்ஸ்: ``சிலர் அனைத்தையும் அரசியலாக்குகின்றனர்!" - மக்களவையில் அமைச்சர் பதிலால் திமுக அமளி

மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா - டி.ஆர்.பாலு

``மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக எதிர்க்கட்சிகள் பொய்யான தகவல்களைக் கூறி அவையைத் தவறாக வழிநடத்துகின்றன." - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா

Published:Updated:

மதுரை எய்ம்ஸ்: ``சிலர் அனைத்தையும் அரசியலாக்குகின்றனர்!" - மக்களவையில் அமைச்சர் பதிலால் திமுக அமளி

``மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக எதிர்க்கட்சிகள் பொய்யான தகவல்களைக் கூறி அவையைத் தவறாக வழிநடத்துகின்றன." - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா

மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா - டி.ஆர்.பாலு

மதுரையில் மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் எனக் கூறப்பட்டு, 2019-ல் அதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், அதன் கட்டுமானப் பணிகள் இன்னும்கூட தொடங்கப்படவில்லை. கடந்தாண்டு மதுரை வந்த பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் 94 சதவிகிதப் பணிகள் நிறைவடைந்துவிட்டதாகக் கூறினார்.

மதுரை எய்ம்ஸ்
மதுரை எய்ம்ஸ்

பின்னர் அதன் கோப்பு பணிகள்தான் முடிந்திருப்பதாக பா.ஜ.க தரப்பிலிருந்து விளக்கம் தரப்பட்டது. அதேசமயம் தற்போது எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மாணவர் சேர்க்கை தொடங்கி, அவர்களுக்கான வகுப்புகள் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் நடக்கின்றன.

இந்த நிலையில், மக்களவையில் இன்று நடைபெற்றக் கூட்டத்தில் மதுரை எய்ம்ஸ் விவகாரம் தொடர்பாக வாதங்கள் அரங்கேறின.

கேள்வி நேரத்தின்போது பேசிய தி.மு.க எம்.பி டி.ஆர்.பாலு, ``எத்தனை மருத்துவக் கல்லூரிகள் முறையான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் செயல்படுகின்றன... பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய எத்தனை மருத்துவக் கல்லூரிகள் இன்னும் தொடங்கப்படாமல் இருக்கின்றன..." என்று கேள்வியெழுப்ப, `மதுரையில் இன்னும் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படவேயில்லை' என தி.மு.க எம்.பி-க்கள் குரலெழுப்பினர்.

டி.ஆர்.பாலு
டி.ஆர்.பாலு

அதைத் தொடர்ந்து இதற்கு பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ``மதுரை எய்ம்ஸ் மருத்துவனை மருத்துவக் கல்லூரியில் வகுப்புகள் நடைபெற்றுவருகின்றன. ஆனால், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக எதிர்க்கட்சிகள் பொய்யான தகவல்களைக் கூறி அவையைத் தவறாக வழிநடத்துகின்றன. சிலபேர் அனைத்து விஷயங்களையும் அரசியலாக்குகின்றனர். அவர்கள் ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா

முறையான உள்கட்டமைப்பு, ஆசிரியர்கள் இல்லாத மருத்துவக் கல்லூரிகளின்மீது நான் கடுமையான நடவடிக்கை எடுத்திருக்கிறேன். அதன்மீதான எதிர்வினைதான் இது. மேலும் இதுபோன்ற மருத்துவக் கல்லூரிகளுக்கு எதிரான நடவடிக்கையையும் நாங்கள் தொடர்வோம்" என்றார்.

இதனால் தி.மு.க எம்.பி-க்கள் அமளியில் ஈடுபட, `அமைச்சர் எங்களுக்கு மிரட்டல் விடுக்கிறார்' என தி.மு.க எம்.பி தயாநிதி மாறன் கூறினார். பின்னர் பா.ஜ.க எம்.பி-க்களும் குரலெழுப்ப, தி.மு.க எம்.பி-க்கள் தொடர்ந்து கூச்சலிட்டனர். பிறகு, அமைச்சரின் பதில் சரியானதா, இல்லையா என்று ஆய்வு செய்வதாக அவைத்தலைவர் ஓம் பிர்லா தெரிவித்தார். இருப்பினும் தி.மு.க, காங்கிரஸ் எம்.பி-க்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.