Published:Updated:

குடியரசுத் தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளரை நிறுத்தத் திணறுவது ஏன்?!

ஸ்டாலின், மம்தா, ராகுல் - எதிர்க்கட்சிகள்

``பா.ஜ.க-வை பொறுத்தவரை குடியரசுத் தலைவர் தேர்தலில் 65% வாக்குகள் வைத்துள்ளனர். எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து வேட்பாளர்களை நிறுத்தினாலும் அது பயனளிக்காது.” - ரவீந்திரன் துரைசாமி.

குடியரசுத் தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளரை நிறுத்தத் திணறுவது ஏன்?!

``பா.ஜ.க-வை பொறுத்தவரை குடியரசுத் தலைவர் தேர்தலில் 65% வாக்குகள் வைத்துள்ளனர். எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து வேட்பாளர்களை நிறுத்தினாலும் அது பயனளிக்காது.” - ரவீந்திரன் துரைசாமி.

Published:Updated:
ஸ்டாலின், மம்தா, ராகுல் - எதிர்க்கட்சிகள்

ஜூலையில் புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறுகிறது. இதில், எதிர்க்கட்சிகளின் வேட்பாளருக்கு வெற்றிபெறும் வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளன. பாஜக தலைமையில் ஆளும் கட்சிகளான தேசிய முன்னணி சார்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து பொது வேட்பாளரை அறிவிக்கும் முயற்சியில் காங்கிரஸ் இறங்கியது. இதற்காக மூத்த தலைவரான மல்லிகார்ஜுனா கார்கே களமிறங்கிச் செயல்படத் தொடங்கினர். எனினும், காங்கிரஸைப் புறந்தள்ளும் வகையில் மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி திடீரெனக் களம் இறங்கினார். அதற்காக டெல்லியில் கடந்த 15-ம் தேதி கூட்டம் நடத்தி ஆலோசிக்க முடிவு செய்தார். இதற்காக, ஒரே சமயத்தில் 22 எதிர்க்கட்சித் தலைவர்களுக்குக் கடிதம் எழுதி அழைப்பு விடுத்தார். ஆனால், இந்தக் கூட்டம் தொடங்கும் முன்பாகவே மூன்று எதிர்க்கட்சிகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் எழுந்தன.

டெல்லியின் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், மம்தாவின் கூட்டத்தில் கலந்துகொள்ள மறுத்துவிட்டார். வேட்பாளராக நிறுத்தப்போவது யார் எனத் தெரிந்தால்தான் தான் ஆதரவு அளிக்க முடியும் எனத் தெரிவித்திருக்கிறார். இத்தனைக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், திரிணமுல் தலைவர் மம்தாவுக்கு மிகவும் நெருக்கமான தலைவராகவும் கருதப்படுபவர். ஒடிசாவின் முதல்வரும், பிஜு ஜனதா தளம் தலைவருமான நவீன் பட்நாயக்கும், மம்தாவின் கூட்டத்துக்கு வர மறுத்துவிட்டார்.

மம்தா, சரத் பவர், அகிலேஷ் யாதவ்
மம்தா, சரத் பவர், அகிலேஷ் யாதவ்

இதன் பின்னணியில் அவரது மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடித் தலைவரான திரௌபதி முர்மு பெயரை பாஜக பரிசீலனை செய்வது காரணமாகக் கருதப்படுகிறது. இவர், ஜார்க்கண்டின் முன்னாள் ஆளுநராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். திரௌபதி ஆளுங்கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால், அவருக்கு ஆதரவளிப்பதைத் தவிர முதல்வர் பட்நாயக்குக்கு வேறு வழியில்லை. இதையே முன்னிறுத்தி பிஜு ஜனதா வழக்கம்போல், இதர எதிர்க்கட்சிகளிடமிருந்து ஒதுங்க விரும்புகிறது. இவர்கள் இருவரைவிட முக்கியமாக தெலங்கானா மாநில முதல்வரும், தெலங்கானா ராஷ்டிரிய சமிதியின் தலைவருமான சந்திரசேகர ராவ், இந்தக் கூட்டத்துக்கு வர மறுத்திருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

பா.ஜ.க-வுக்கு எதிராகக் கொடிபிடிப்பதில் முன்னணி வகிக்கும் இவர், காங்கிரஸுக்கும் அழைப்பு விடுத்ததைக் காரணமாக்கியிருக்கிறார். வழக்கமாக திரிணமூல் தலைவர் மம்தாவிடமிருந்து விலகியிருக்கும் காங்கிரஸ் இந்த முறை அவரின் கூட்டத்தில் கலந்துகொள்ள முன்வந்தது. இந்த நிலையில், தெலங்கானா முதல்வரின் முடிவு இதர எதிர்க்கட்சிகளை அதிருப்திக்கு உள்ளாக்கிவிட்டது. இந்தக் கூட்டத்தின் மூலம் தேர்வாகும் பொது வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி இல்லை. எனினும், வரும் 2024-ல் மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமைக்கு அடித்தளமாக இருக்கும் வாய்ப்புகள் உள்ளன. தற்போது இதற்கான வாய்ப்பை தெலங்கானா முதல்வர் உள்ளிட்ட மூன்று கட்சிகள் தட்டிக் கழித்துள்ளன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நவீன் பட்நாயக், ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரசேகர ராவ், அரவிந்த் கெஜ்ரிவால்
நவீன் பட்நாயக், ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரசேகர ராவ், அரவிந்த் கெஜ்ரிவால்

இதையடுத்து, எதிர்க்கட்சி சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளரைத் தேர்வு செய்யும் பொருட்டு ஆலோசனை நடத்த மம்தா பானா்ஜி, ஏற்பாடு செய்த கூட்டத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, மக்கள் ஜனநாயகக் கட்சி, திமுக உள்ளிட்ட 17 கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். அதில், குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவதற்குக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பொது வேட்பாளர் யார் என்பது குறித்து முடிவுசெய்ய எதிர்க்கட்சிகள் கூட்டம் மீண்டும் நடைபெறவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து மம்தா பானர்ஜி, 'இன்று பல கட்சிகள் வந்திருந்தன. அனைத்துக் கட்சிகளுக்கும் ஒருமித்த வேட்பாளரை மட்டுமே தேர்வு செய்ய முடிவு செய்திருக்கிறோம். இந்த வேட்பாளருக்கு அனைவரும் தங்கள் ஆதரவை வழங்குவார்கள். இது குறித்து மற்றவர்களுடன் கலந்தாலோசிப்போம். இது ஒரு நல்ல ஆரம்பம். பல மாதங்களுக்குப் பிறகு ஒன்றாக அமர்ந்தோம், அதை மீண்டும் செய்வோம்' என்றார்.

டி.ஆர்.பாலு
டி.ஆர்.பாலு

அதுபோல பொது வேட்பாளரை முடிவு செய்வது குறித்து மீண்டும் கூடிப் பேசுவோம் என்று கூட்டத்தில் கலந்துகொண்ட திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தெரிவித்தார். அதேநேரத்தில், எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராகப் போட்டியிட சரத் பவார் மறுத்துவிட்டதாகவும் கூறினார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது தொடர்பாக அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, ``காங்கிரஸ்மீது எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கை இல்லை. கொஞ்சம் இடம் கொடுத்தாலும் தங்களிடம் இருக்கக்கூடிய கிறிஸ்தவ, முஸ்லிம் வாக்குகளைக் கைப்பற்றப் பார்ப்பார்கள் என்று எதிர்க்கட்சிகள் நெருக்கம் காட்ட விரும்பவில்லை. கூட்டணியாக இருக்கக்கூடிய சரத் பவார் கட்சி, தி.மு.க., ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா போன்ற கட்சிகளும் இதே நிலையில்தான் காங்கிரஸைக் கண்டு பதறுகிறார்கள். அப்படி கிறிஸ்தவ, முஸ்லிம் வாக்குகளை அந்த மாநிலக் கட்சியிடமிருந்து தன் வசம் எடுக்க காங்கிரஸ் முயன்றும் நடக்கவில்லையென்றால், பா.ஜ.க-வின் ‘பி’-டீம் என்று சொல்லி அந்த வாக்காளர்களிடம் கலவரத்தை உண்டு பண்ணி, தன் பக்கம் இழுக்கப் பார்க்கும். இப்படித்தான் ஆம் ஆத்மி, மாயாவதி, சீமான் போன்றவர்களுக்கு எதிராகச் சொல்வதை வழக்கமாக வைத்திருக்கிறது காங்கிரஸ்” என்றவரிடம், ‘பல மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி கட்சியாகத்தானே இருக்கிறது’ என்கிற கேள்வியை முன்வைத்தோம்.

ரவீந்திரன் துரைசாமி
ரவீந்திரன் துரைசாமி

“காங்கிரஸ் குறைந்த சீட்டுக்கு வந்து, சரண்டராகிப் போகும்போது கூட்டணி வைக்கிறார்கள். அது லாபம்தானே... காங்கிரஸுக்கும் மற்ற மாநிலக் கட்சிகளுக்கும் மதச்சார்பற்ற வாக்குகள் யாருக்கு என்கிற போட்டி இருக்கிறது. உதாரணமாக உ.பி-யின் கடந்த சட்டமன்ற தேர்தலில் 2.3% வாக்குகளை காங்கிரஸ் எடுத்திருக்கிறது. ஆனாலும், உ.பி-யில் ராஜ்ய சபா உறுப்பினர்களாக இரண்டு பிராமணர்கள், ஒரு முஸ்லிமுக்கு ராஜஸ்தான் மற்றும் மற்ற மாநிலங்களிலிருந்து ஆதரவு கேட்டு, அந்த மாநிலத்தில் கட்சியை வளர்க்கத் திட்டமிடுகிறார்கள். அதேவேளையில் 2.3% வாங்கி இருந்தாலும் அகிலேஷ் யாதவை வீழ்த்தி மேலே வருவோம் என்று கணக்கிடுகிறார்கள். அதனால்தான் மற்ற மாநிலக் கட்சிகளெல்லாம் எச்சரிக்கையாக இருக்கப் பார்க்கின்றன. `காங்கிரஸ் இருக்கக்கூடிய இடத்தில் நாங்கள் இருக்க மாட்டோம்’ என்று ஜெகன் ரெட்டி, நவீன் பட்நாயக், சந்திரசேகர் ராவ், மாயாவதி சொல்லிவிட்டார்கள். அதேநேரத்தில் தவிர்க்க முடியாத சில இடங்களிலும் கூட்டணி வைக்கிறார்கள். இப்போது பா.ஜ.க-வை பொறுத்தவரை குடியரசுத் தலைவர் தேர்தலில் 65% வாக்குகள் வைத்துள்ளனர். எதிர்க் ட்சிகள் ஒன்று சேர்ந்து வேட்பாளர்களை நிறுத்தினாலும் அது பயனளிக்காது” என்கிறார் ரவீந்திரன் துரைசாமி.

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் அறிவிப்பு வெற்றி பெறுமா அல்லது பாஜக சார்பில் அறிவிக்கப்படும் வேட்பாளர் போட்டியின்று வெற்றிபெறுவாரா என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism