Published:Updated:

``எடப்பாடி பழனிசாமிதான் பொதுச்செயலாளர்" - தீர்மானம் நிறைவேற்றிய புதுச்சேரி அதிமுக

புதுச்சேரி அதிமுக நிர்வாகிகள் கூட்டம்

``பொதுக்குழுவை நீதிமன்றம் மூலம் தடுத்து நிறுத்துவோம் என்று கூறுபவர்கள், தி.மு.க-வின் ‘B’ டீமைச் சேர்ந்தவர்கள். அவர்கள் கட்சியிலிருந்து விலக்கப்பட வேண்டியவர்கள்.” – புதுச்சேரி அ.தி.மு.க

``எடப்பாடி பழனிசாமிதான் பொதுச்செயலாளர்" - தீர்மானம் நிறைவேற்றிய புதுச்சேரி அதிமுக

``பொதுக்குழுவை நீதிமன்றம் மூலம் தடுத்து நிறுத்துவோம் என்று கூறுபவர்கள், தி.மு.க-வின் ‘B’ டீமைச் சேர்ந்தவர்கள். அவர்கள் கட்சியிலிருந்து விலக்கப்பட வேண்டியவர்கள்.” – புதுச்சேரி அ.தி.மு.க

Published:Updated:
புதுச்சேரி அதிமுக நிர்வாகிகள் கூட்டம்

அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில், புதுச்சேரி அ.தி.மு.க கிழக்கு மாநிலச் செயலாளர் அன்பழகன் தலைமையில் மாநில நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகரக் கழகம் மற்றும் தொகுதிக் கழக செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அ.தி.மு.க-வுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்றும், எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

அந்தத் தீர்மானத்தில், ``மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மறைவுக்குப் பிறகு, கழக ஒற்றுமை கருதி, கழகத்துக்கு இரட்டைத் தலைமை உருவாக்கப்பட்டது. கழக முதல்வர் வேட்பாளர் தேர்வு, எதிர்கட்சித் தலைவர், ராஜ்ய சபா உறுப்பினர் தேர்வு, கழக வளர்ச்சி உள்ளிட்ட பிரதான பல்வேறு முடிவுகளை எடுக்கும்போது இரட்டைத் தலைமையால் தொடர்ந்து கால தாமதம் ஏற்பட்டது.

அதிமுக - பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி
அதிமுக - பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி

கழகத்தின் எதிர்கால நலன் கருதி தற்போதிருக்கும் கழக ஒருங்கிணைப்பாளர்கள் என்ற இரட்டைத் தலைமையை மாற்றி, கழகத்துக்கு ஒரே தலைமையாக கழக பொதுச்செயலாளர் பதவியை 23-6-2022 அன்று சென்னையில் நடைபெறவிருக்கும் கழக செயற்குழு, பொதுக்குழுக் கூட்டத்தில் கொண்டு வர வேண்டும் என புதுச்சேரி மாநில கழகம் தெரிவித்துக்கொள்கிறது. தமிழ்நாட்டில் ஆட்சி செய்யும் மக்கள் விரோத தி.மு.க அரசை மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் எண்ணப்படி, உறுதியாக எதிர்ப்பதில் கட்சியில் பிரச்னை இருக்கிறது.

அ.தி.மு.க தொண்டர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்துவரும் கழக இணை ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை கழகத்தின் பொதுச்செயலாளராக ஏற்றுக்கொள்வது என புதுச்சேரி மாநில கழகம் முடிவெடுத்திருக்கிறது” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி அ.தி.மு.க கிழக்கு மாநிலச் செயலாளர் அன்பழகன், ``புதுச்சேரி கிழக்கு மாநிலம், காரைக்கால் அ.தி.மு.க நிர்வாகிகளின் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் இயக்கம் சிறப்பாகச் செயல்படவும், தகுதியான தலைவரைப் பொதுச்செயலாளராக நியமனம் செய்யவும், தி.மு.க-வை உறுதியாக எதிர்க்கக்கூடிய கழகத்தின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக நியமிக்க வேண்டும் என்றும் ஒற்றைத் தீர்மானம் இன்று நிறைவேற்றப்பட்டது. இரட்டைத் தலைமை இருப்பதால் தி.மு.க அரசை உறுதியாக எதிர்க்காதது உள்ளிட்ட பல்வேறு முக்கியமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. புதுச்சேரியிலிருந்து பல்வேறு பிரச்னைகளை நாங்கள் கூறும்போது இரட்டைத் தலைமை இருப்பதால் சரியான நேரத்தில் சரியான பதிலோ... வழிகாட்டுதலோ எங்களுக்குக் கிடைக்காது.

இரட்டைத் தலைமை இருந்தால் யார் முதல்வர், யார் எதிர்க்கட்சித் தலைவர் என்பதில் குழப்பம் ஏற்படுகிறது. ராஜ்ய சபா எம்.பி வேட்பாளர்களை அறிவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டதும் அதனால்தான். இப்படியான பிரச்னைகளால்தான் கட்சிக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம். நீதிமன்றம் மூலம் பொதுக்குழுவைத் தடுத்து நிறுத்துவோம் என்று சிலர் கூறுகிறார்கள். இரண்டு ஒருங்கிணைப்பாளர்களின் கையெழுத்துடன்தான் அந்தப் பொதுக்குழு கூட்டப்படுகிறது. பொதுக்குழுக் கூட்டம் என்பது ஒவ்வோர் அ.தி.மு.க தொண்டனின் உயிர்நாடி என்பதால் அதைப் பெரிய அளவில் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். நடைபெறவிருக்கும் பொதுக்குழுவைத் தடுத்து நிறுத்த நீதிமன்றம் மூலம் யார் தடை உத்தரவைப் பெற்றாலும், அவர்கள் கட்சிக்கு விரோதமானவர்கள். அவர்கள் தி.மு.க-வின் ‘B’ டீமைச் சேர்ந்தவர்கள். அ.தி.மு.க-விலிருந்து விலக்கப்படவேண்டியவர்கள்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism