Published:Updated:

புதுச்சேரி: `கிரண் பேடியின் தாத்தாவே தடுத்தாலும் சரி!’ பேரிகார்டு விவகாரத்தில் கொதித்த நாராயணசாமி

முதல்வர் நாராயணசாமி
முதல்வர் நாராயணசாமி

``பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்து சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கிறோம். ஆனால் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை” – முதல்வர் நாராயணசாமி.

31 மக்கள் நலத்திட்ட கோரிக்கைகளுக்கு துணைநிலை ஆளுநர் கிரண் பேடி அனுமதி அளிக்க வேண்டுமென்றும், அது தொடர்பாக விவாதிக்க நேரம் ஒதுக்க வேண்டுமென்றும் என்று கூறி கடந்த எட்டு நாள்களாகச் சட்டப்பேரவை வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தை நடத்திவருகிறார் சுகாதாரத்துறை அமைச்சர் கந்தசாமி. அவருக்கு ஆதரவாக அனைத்து தலித் மற்றும் பழங்குடி அமைப்புகள் நேற்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர். அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் நாராயணசாமி, ``பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்து சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கிறோம்.

கிரண் பேடி - நாராயணசாமி
கிரண் பேடி - நாராயணசாமி

அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் கவர்னர் தடுத்து நிறுத்தி, தொடர்ச்சியாகத் தொல்லை கொடுத்துவருகிறார். அவரிடம் நேரடியாகப் பேசிப் பார்த்தோம், கோப்புகளில் எழுதி அனுப்பினோம். கவர்னர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தினோம். ஒட்டுமொத்தமாக 51 கோப்புகளை கவர்னர் தடுத்து நிறுத்திவைத்திருக்கிறார். அதனால் கவர்னர் மாளிகை முன்பு ஆறு நாள்கள் போராட்டத்தை நடத்தினோம். நீதிமன்றத்துக்குச் சென்று கவர்னரின் அதிகாரம் குறித்த தீர்ப்பையும் பெற்றோம். ஆனாலும் அவர் நீதிமன்றம், அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் என யாரையும் மதிப்பதில்லை. அதனால் ஜனவரி 8-ம் தேதி அண்ணா சிலை அருகே மீண்டும் தர்ணா போராட்டத்தை நடத்தினோம் மூன்று நாள்கள் எழுச்சியுடன் அந்தப் போராட்டம் நடைபெற்றது. அதையடுத்துதான் அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்கள் உயர்கல்வி வரை பயில அரசே ஏற்கும் என்ற கோப்புக்கு கவர்னர் அனுமதி வழங்கியிருக்கிறார். அந்தத் திட்டத்துக்காக ஆண்டுக்கு ரூ.51 கோடி செலவாகும், இது போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி. அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டிருக்கிறது.

அதேபோல் தாழ்த்தப்பட்டோர் வீடு கட்டுவதற்காக தற்போது வழங்கப்பட்டுவரும் மானியம் ரூ.4 லட்சத்தை 5 லட்சமாக உயர்த்துவதற்கும் ஒப்புதல் வழங்கியிருக்கிறார். இதுவும் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றிதான். கொரோனாவுக்கு முன்புவரை கிரண் பேடி அம்மையார் சைக்கிளில் வலம்வந்தார். ஆனால் கடந்த 10 மாதங்களாக கவர்னர் மாளிகைக் கதவு மூடியே இருக்கிறது. இப்போது அந்த சைக்கிள் எங்கே போனது? ஆனால், நாங்கள் என்றும் மக்களுக்காகத் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டேதான் இருக்கிறோம். கிரண் பேடி செய்வது விளம்பரத்துக்காக. ஆனால், நாங்கள் செய்வது மக்களுக்காக. இதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். நகரப் பகுதியில் எங்கு பார்த்தாலும் தடுப்புக் கட்டைகள் அமைக்கப்பட்டு தடுக்கப்பட்டிருக்கின்றன.

புதுச்சேரி: `நாராயணசாமி Vs கிரண் பேடி; வாருங்கள்... வராதீர்கள்!’ - குழப்பும் `புத்தாண்டு அரசியல்’

இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியிருக்கின்றனர். தன்னுடைய பாதுகாப்புக்காக மக்களை அவதிக்குள்ளாகியிருக்கிறார் கிரண் பேடி. ஆனால் மக்கள் எங்களைத்தான் திட்டுகின்றனர். தடுப்புக் கட்டைகளை அகற்ற வேண்டும் என நான் கூறியிருக்கிறேன். கிரண் பேடியோ, அவருடைய தாத்தாவோ யார் தடுத்தாலும் சரி சட்டமன்றம் முடிந்த பிறகு நாளை (இன்று 18.01.2021) மாலை தடுப்புக் கட்டைகள் அகற்றப்படும்” என்றார் ஆவேசமாக.

அடுத்த கட்டுரைக்கு