Published:Updated:

புதுச்சேரி: காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்ட நமச்சிவாயம்; அமைச்சர், எம்.எல்.ஏ ராஜினாமா! - பின்னணி என்ன?

புதுச்சேரி அமைச்சர் ராஜினாமா
புதுச்சேரி அமைச்சர் ராஜினாமா

புதுச்சேரி காங்கிரஸ் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருக்கும் நமச்சிவாயம் பா.ஜ.க அணிக்குத் தாவுவதற்கு முடிவெடுத்துவிட்ட நிலையில், அவரை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கியிருப்பதாக மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.

புதுச்சேரியில் 2016 சட்டப்பேரவை பொதுத்தேர்தலை தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தது காங்கிரஸ் கட்சி. அப்போது வன்னியர் சமுதாய வாக்குகளை அறுவடை செய்யும் நோக்கில், அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த நமச்சிவாயத்தை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தியது காங்கிரஸ் கட்சி. ஆனால், தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றவுடன், கட்சியின் சீனியர் தலைவர்களுக்கு முதல்வராகும் ஆசை தொற்றிக்கொண்டது.

புதுச்சேரி அரசு சட்டப்பேரவை கட்டிடம்
புதுச்சேரி அரசு சட்டப்பேரவை கட்டிடம்

அதன் தொடர்ச்சியாக முதல்வராக யாரை நியமிப்பது என்பது குறித்து காலாப்பட்டு அசோக் ஹோட்டலில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தேர்தலைச் சந்திக்காத நாராயணசாமிதான் முதல்வர் என்று அறிவித்தது காங்கிரஸ் கட்சி. அப்போது நமச்சிவாயத்தின் ஆதரவாளர்கள் ஆடிய வன்முறை வெறியாட்டத்தில் புதுச்சேரி சின்னாபின்னமானது. தொடர்ந்து நமச்சிவாயத்தைச் சமாதானப்படுத்தும் வகையில் அவருக்கு பொதுப்பணித்துறை ஒதுக்கப்பட்டது. அத்துடன் உள்ளாட்சி, கலால், வீட்டுவசதி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட முக்கிய இலாக்காக்களும் வழங்கப்பட்டன. அமைச்சராக இருந்துகொண்டே கட்சியின் மாநிலத் தலைவராகவும் நமச்சிவாயம் நீடித்துவந்தார். அவ்வப்போது நாராயணசாமி, நமச்சிவாயம் இருவருக்குமிடையில் உரசலும் அரங்கேறியது. கடந்த ஆண்டு நமச்சிவாயத்திடமிருந்து மாநிலத் தலைவர் பதவி பறிக்கப்பட்டது. 2021 சட்டமன்ற தேர்தலை, நமச்சிவாயம் தலைமையில் சந்திப்பதை விரும்பாததால்தான் அந்தப் பதவி பறிக்கப்பட்டதாகக் காரணமும் கூறினார்கள் காங்கிரஸார்.

ஆனாலும், காங்கிரஸ் கட்சி தங்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக அதிருப்தியில் இருந்தனர் நமச்சிவாயமும், அவரது ஆதரவாளர்களும். புதுச்சேரியில் எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்றிவிட வேண்டும் என்று முயன்றுகொண்டிருக்கும் பா.ஜ.க., புதுச்சேரியில் பெரும்பான்மைச் சமூகமாக இருக்கும் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த நமச்சிவாயத்தைக் குறிவைத்து காய்நகர்த்தியது. `கட்சியில் இணைந்தால், நீங்கள்தான் முதல்வர் வேட்பாளர். மேலும் அதிருப்தியாக இருக்கும் எம்.எல்.ஏ-க்களை அழைத்துவந்தால் தேர்தலுக்குப் பிறகு முதல்வரும் நீங்கள்தான்’ என்று வலையை விரித்தது பா.ஜ.க. நமச்சிவாயத்துக்கு அந்த டீலிங்கில் உடன்படுதான் என்றாலும், பா.ஜ.க-வை நம்பிச் சென்றால் அரசியலில் நமது எதிர்காலமே கேள்விக்குறியாகவும் வாய்ப்பிருக்கிறது என்பதை உணர்ந்த அவர் காங்கிரஸ் கட்சியின் பல்ஸ் பார்க்க நினைத்தார்.

காங்கிரஸ் எம்..எல்.ஏ தீப்பாய்ந்தான் ராஜினாமா
காங்கிரஸ் எம்..எல்.ஏ தீப்பாய்ந்தான் ராஜினாமா

அதனால் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டுமென்று கட்சிக்கு அழுத்தம் கொடுத்துப் பார்த்தார் நமச்சிவாயம். ஆனால் அதற்கு ஒப்புக்கொள்ளாத காங்கிரஸ் கட்சி அவரைச் சமாதானப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டுவந்தது. அதில் கடுப்படைந்த நமச்சிவாயம், இரு தினங்களுக்கு முன்னர் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். பா.ஜ.க-வில் இணைவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்ட நிலையில், இன்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதற்காக சட்டப்பேரவைக்குச் செல்லத் தயாராக இருந்தார் நமச்சிவாயம்.

சில மணி நேரங்களுக்கு முன்பாக அந்தத் தகவலைக் கேள்விப்பட்டவுடன், செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், ``பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியிருக்கிறார். அமைச்சர் என்பதையும் மறந்து, காங்கிரஸ் கட்சிக்கு எதிராகப் பேசி, கட்சியைவிட்டு விலகப்போகிறேன் என்றும் சொல்கிறார். அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பிலிருந்து விலகி வாருங்கள் என்றும் கட்சி நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்து, கட்சிக்கு துரோகம் செய்துவருகிறார். அமைச்சர் மற்றும் கட்சித் தலைவர் என இரட்டைப் பதவிகளை வகிப்பது கட்சி வளர்ச்சிக்கு உகந்தது அல்ல என்று தலைமை அறிவுறுத்தியதால் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அவரைத் தலைவராக அழகு பார்த்த காங்கிரஸிலிருந்து விலகி, தற்போது மாற்றுக் கட்சிக்குப் போகும் எண்ணத்தில் இருக்கிறார். அதனால் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நமச்சிவாயம் தற்காலிகமாக நிக்கம் செய்யப்பட்டிருக்கிறார்” என்றார்.

அமைச்சர் நமச்சிவாயம்
அமைச்சர் நமச்சிவாயம்

அதையடுத்த சில நிமிடங்களில் சட்டப்பேரவையில் சபாநாயகர் சிவக்கொழுந்துவைச் சந்தித்த அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் ஊசுடு தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ தீப்பாய்ந்தான் இருவரும் தங்களது எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்வதாகக் கடிதம் அளித்தனர். இதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் பலம் 12 குறைந்திருப்பதால், சமூக வலைதளங்களில் புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சி கவிழுமா என்று கேள்வி எழுப்பிவருகின்றனர் நெட்டிசன்கள்.

ஆனால், ``புதுச்சேரி சட்டப்பேரவையில் மூன்று நியமன எம்.எல்.ஏ-க்களையும் சேர்த்து மொத்தம் 33 எம்.எல்.ஏ-க்கள் இருப்பார்கள். அவர்களில் காங்கிரஸ் எம்.எல்.ஏ தனவேலு ஏற்கெனவே தகுதிநீக்கம் செய்யப்பட்டுவிட்டார். பா.ஜ.க-வின் நியமன எம்.எல்.ஏ சங்கர் உயிரிழந்துவிட்டார். அதன் காரணமாக புதுச்சேரி சட்டப்பேரவையின் எம்.எல்.ஏ-க்கள் எண்ணிக்கை 31-ஆகக் குறைந்தது. தற்போது அமைச்சர் நமச்சிவாயமும், தீப்பாய்ந்தானும் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்திருப்பதால் எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 29 ஆகக் குறைந்துவிட்டது.

புதுச்சேரி: எம்.எல்.ஏ தகுதி நீக்கம்; வியூகம் வகுக்கும் பி.ஜே.பி! - கவிழ்கிறதா காங்கிரஸ் ஆட்சி?

இந்த எண்ணிக்கையின் அடிப்படையில் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 15 எம்.எல்.ஏ-க்களே போதும். அதன்படி பார்த்தால் காங்கிரஸ் தற்போது மூன்று தி.மு.க., ஒரு சுயேச்சை என 16 எம்.எல்.ஏ-க்களுடன் இருக்கிறது. அதேசமயம், பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் என்.ஆர்.காங்கிரஸ் நான்கு அ.தி.மு.க., இரண்டு பா.ஜ.க நியமன எம்.எல்.ஏ-க்களுடன் 13 எம்.எல்.ஏ-க்களுடன்தான் இருக்கிறது. அதனால் காங்கிரஸ் அரசு கவிழ்வதற்கு வாய்பில்லை” என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

அடுத்த கட்டுரைக்கு