Election bannerElection banner
Published:Updated:

புதுச்சேரி: `வார இறுதி நாள்களில் முழு ஊரடங்கு’ - புதிய கட்டுப்பாடுகளை அறிவித்த ஆளுநர் தமிழிசை

புதுச்சேரி ஊரடங்கு
புதுச்சேரி ஊரடங்கு

`புதுச்சேரியில் கொரோனா தொற்று வேகமெடுத்திருக்கும் நிலையில் வெள்ளிக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்’ என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை அறிவித்திருக்கிறார்.

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமெடுத்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக புதுச்சேரியிலும் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று அதிகமாகப் பரவிவருகிறது. அதையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த துணைநிலை ஆளுநர் தமிழிசை தலைமையில் நேற்று இரவு உயர்நிலைக் கூட்டம் ராஜ்நிவாஸில் நடந்தது. கூட்டத்தில் உயரதிகாரிகள் அனைவரும் பங்கேற்றனர்.

கூட்டத்தின் முடிவில், ``புதுச்சேரி முழுவதும் வெள்ளிக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். இது வரும் வெள்ளி முதல் அமலாகும். இதர நாள்களில் கடைகள், அங்காடிகள் பகல் 2 மணி வரை மட்டுமே இயங்கும். இது வரும் திங்கள்கிழமை முதல் நடைமுறைக்கு வரும். பகல் 2 மணிக்குப் பிறகு உணவு விடுதிகளில் உணவு எடுத்துச் செல்ல மட்டும் அனுமதிக்கப்படும். வழிபாட்டுத் தலங்களில் ஊர்வலம், தேரோட்டம் முதலியவை தடை செய்யப்படுகின்றன.

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

கொரோனா வழிமுறைகளோடு, வழிபாடுகள் அனுமதிக்கப்படும். பாண்லே பால் நிலையங்களில் இன்று முதல் குறைந்த விலையில் முகக்கவசம், கிருமி நாசினி வழங்கப்படும். மருத்துவமனைகள் மற்றும் பிற மருத்துவப் பணிகளுக்கு தேவையான ஆட்கள் நியமனம் செய்யப்படுவார்கள். கபசுரக் குடிநீர் வழங்குவது உட்பட இந்திய மருத்துவ வழிமுறைகள் ஊக்கப்படுத்தப்படும். ஆம்புலன்ஸ் எண்ணிக்கையை அதிகப்படுத்துவோம். கொரோனா தொற்றாளர்களை அழைத்துச் செல்ல தனியார் ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்படும்” என்று ஆளுநர் தமிழிசை தெரிவித்திருக்கிறார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு