புதுச்சேரி சட்டப்பேரவையில் 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை கடந்த 13-ம் தேதி முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்த நிலையில், தினமும் அது தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம் பெயரில் ராஜா திரையரங்கம் சந்திப்பில் நேற்றிரவு (15.03.2023) பொதுமக்களுக்காக பேனர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அந்த பேனரில்,
‘என்.ஆர் திறந்த புதிய மதுபானக் கடைகள் 350.
என்.ஆர் திறந்த புதிய மதுபான தொழிற்சாலைகள் 6.
என்.ஆர் திறந்த 350 மதுக்கடைகள் மற்றும் 6 மதுக்கடைகளில் வந்த வருவாய் எவ்வளவு?

முந்தைய ஆட்சியில் மூடப்பட்ட மதுபான தொழிற்சாலைகள் திறக்கப்பட்டது எப்படி ?
அதை முடிவு செய்தது ஆளுநரா… முதல்வரா…?
மதுக் குடியால் சீரழிந்த குடும்பங்கள் எத்தனை?
புதுவையில் அனைத்துப் பகுதிகளிலும் கஞ்சா, போதைப்பொருள்கள் விற்பனையாவது எப்படி?
புதுவை மக்களைப் போதை புதைகுழியில் தள்ளுவது நியாயமா… தர்மமா?
புதுச்சேரியை மதுச்சேரியாக்குவதுதான் என்.ஆரின் கொள்கையா?’ என்ற கேள்விகள் இடம்பெற்றிருந்தன.
பேனர் தடைச் சட்டமும், நீதிமன்றத்தின் நிலை ஆணையும் பல ஆண்டுகளாக புதுச்சேரியில் அமலில் இருக்கிறது. ஆனால், எந்த அரசியல் கட்சியினரும் அதை மதிப்பதில்லை. பேனர்களை வைப்பது ஆட்சியாளர்களும் அவர்களது அடிபொடிகளும் என்பதால் மாவட்ட நிர்வாகமும், நகராட்சியும் கண்டுகொள்வதில்லை. அந்த பேனரே கிழிந்து தொங்கும் வரை மாதக்கணக்கில் அப்படியேதான் இருக்கும். ஆனால், எம்.பி வைத்திலிங்கம் வைத்த இந்த பேனர் ஆளுங்கட்சியினரை அட்டாக் செய்ததால் அதிரடியாகக் களத்தில் இறங்கினார்கள் அதிகாரிகள்.
இரவு பேனர் வைத்த விவகாரம் காலையில் அதிகாரிகளுக்குச் சென்றிருக்கிறது. உடனே சிறிய கத்தி மற்றும் கத்தி கட்டப்பட்ட நீண்ட குச்சியுடன் களத்தில் இறங்கிய 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், ராஜா திரையரங்கம் சந்திப்பில் இருந்த அந்த பேனரைக் கிழித்து அப்புறப்படுத்தினார்கள். இந்த பேனரை மட்டும் கிழித்தால் சர்ச்சை வரும் என்று நினைத்தார்களோ என்னவோ, அருகில் பா.ஜ.க நியமன எம்.எல்.ஏ ராமலிங்கத்துக்கு வைத்திருந்த பேனரையும் கிழித்துவிட்டுச் சென்றார்கள் என்கிறார்கள். இது குறித்து எம்.பி வைத்திலிங்கத்திடம் கேட்டபோது, “புதுச்சேரி முழுவதும் எதற்கெல்லாமோ இவர்கள் வைத்த பேனர்கள் மாதக்கணக்கில் அப்படியே கிடக்கின்றன. மக்களுக்காக வைத்த பேனரை உடனே அப்புறப்படுத்துகிறார்கள். இதை என்னவென்று சொல்வது?” என்றார்.