தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாவை, தமிழக ஆளுநர் நேற்று திருப்பி அனுப்பியதையடுத்து, மக்களவையில் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் எம்.பி-க்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர். மேலும் தி.மு.க எம்.பி டி.ஆர்.பாலு, மக்களவையில் ஆளுநருக்கு எதிராகத் தனது கண்டனங்களைத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இன்று காலை மாநிலங்களவையில் ஜீரோ ஹவரில் பேசுவதற்காகப் பெயர் கொடுத்திருந்த உறுப்பினர்களை உரையாற்றுமாறு அவைத்தலைவர் வெங்கைய நாயுடு கூறினார்.
அப்போது திமுக எம்.பி-க்கள் குறுக்கிட்டு, `நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பியது குறித்து இங்கு விவாதம் நடத்த வேண்டும்’ என கோஷமிட்டனர். அதையடுத்து அவைத்தலைவர் வெங்கைய நாயுடு, குடியரசுத் தலைவர் உரைமீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் இது பற்றி விவாதிக்கலாம் என்று கூறினார்.

ஆனால் இதை ஏற்காத தி.மு.க எம்.பி-க்கள், ``நீட் தேர்வை ரத்துசெய், தமிழக அரசின் மசோதாவை ஆளுநர் திருப்பியனுப்பியது தவறு" எனத் தொடர் முழக்கமிட்டனர். இதையடுத்து எம்.பி திருச்சி சிவா உட்பட, திமுக எம்.பி-க்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
மாநிலங்களவையைவிட்டு வெளியேறிய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த திருச்சி சிவா, ``தமிழக அரசால் சட்டமன்றத்தில் மசோதாவாக நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்ட நீட் விலக்கு மசோதாவை, ஆளுநர் திருப்பியனுப்பியது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. நீட் தேர்வு அறிமுகப்படுத்திய பிறகு மருத்துவப் படிப்பானது கிராமப்புற மாணவர்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. எங்கெல்லாம் எதிர்க்கட்சிகள் ஆள்கின்றனவோ, அங்கெல்லாம் மத்திய அரசின் பிரதிநிதிகளாக ஆளுநர்கள் மாறிவிட்டார்கள். தனிப்பட்ட முறையில் ஆளுநர்மீது எங்களுக்கு எந்தக் காழ்ப்புணர்ச்சியும் கிடையாது" என்று திருச்சி சிவா பேசியிருக்கிறார்.