Published:Updated:

`பா.ஜ.க-வில் இணைய பலர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்!’ -தமிழக பா.ஜ.க தலைவர் முருகன்

பா.ஜ.க தலைவர் முருகன்
பா.ஜ.க தலைவர் முருகன் ( எம். விஜயகுமார் )

மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கையால் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு பெருகிவருவதை ஏற்க முடியாமல் எதிர்க்கட்சிகள் குறை கூறி அரசியல் செய்துவருகிறார்கள் -தமிழக பா.ஜ.க தலைவர் முருகன்.

தமிழக பா.ஜ.க தலைவர் முருகன், இன்று சேலத்திற்கு வந்திருந்தார். தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், பா.ஜ.க-வின் முன்னாள் மாநிலத் தலைவருமான லஷ்மணன், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரை இன்று சந்தித்து நலம் விசாரித்துவிட்டு, பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். உடன் மாநில நிர்வாகி சிவகாமி பரமசிவம், மாவட்டத் தலைவர் சுரேஷ்பாபு, முன்னாள் மாவட்டத் தலைவர் கோபி மற்றும் பலர் இருந்தனர்.

முருகன்
முருகன்

செய்தியாளர்களிடம் பேசிய முருகன், ``கொரோனா தடுப்புப் பணியை தமிழக அரசு சிறப்பாகச் செயல்படுத்திவருகிறது. சென்னையில் கொரோனாவைக் கட்டுப்படுத்த, மண்டல வாரியாக அதிகாரிகளை நியமித்து பணிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா பணிக்காக மத்திய அரசு 15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

தமிழகத்தில், ஜந்தன் யோஜனா திட்டத்தின்கீழ் 70 லட்சம் மகளிருக்கு 500 ரூபாய் உதவித் தொகையும், 35லட்சம் விவசாயிகளுக்கு தலா ரூ.2,000 உதவித் தொகையும் வழங்கியுள்ளது. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு வழங்கியுள்ளது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் மூன்று மாதங்களுக்குத் தேவையான சமையல் எரிவாயு சிலிண்டர் இலவசமாக வழங்குகிறது.

முருகன்
முருகன்

சர்வதேச அளவில் பெரும் பாதிப்பையும், அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ள கொரோனாவைக் கட்டுப்படுத்த, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, முன்கூட்டியே திட்டமிட்டு உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதல் படி தமிழகத்திலும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததால், நோய் பரவாமல் கட்டுப்படுத்த முடிந்துள்ளது.

மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கையால் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு பெருகிவருவதை ஏற்க முடியாமல் எதிர்க்கட்சிகள் குறைகூறி அரசியல் செய்துவருகிறார்கள். இது போன்ற பேரிடர் காலத்தில், எதிர்க்கட்சிகள் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் செயல்பாடுகளால் பலர் கவர்ந்து இழுக்கப்பட்டு பா.ஜ.க -வில் இணைய தமிழகத்தில் பல்வேறு கட்சிகள், இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்கள்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு