Published:Updated:

நீட் தேர்வில் சரியும் தமிழ்நாட்டின் தேர்ச்சி விழுக்காடு - என்னதான் தீர்வு?!

நீட் தேர்வு எழுதும் மாணவர்கள்

இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களில் 80 சதவிகிதம் பேர் தோல்வியடைந்திருக்கிறார்கள் என்கிற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நீட் தேர்வில் சரியும் தமிழ்நாட்டின் தேர்ச்சி விழுக்காடு - என்னதான் தீர்வு?!

இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களில் 80 சதவிகிதம் பேர் தோல்வியடைந்திருக்கிறார்கள் என்கிற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
நீட் தேர்வு எழுதும் மாணவர்கள்

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த ஜூலை 17-ம் தேதி இந்தியா முழுவதும் நடைபெற்றது. மொத்தம் 497 நகரங்களில், 3,500-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வை சுமார் 17.78 லட்சம் மாணவர்கள் எழுதினர். தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியிருக்கின்றன.

நீட் தேர்வு
நீட் தேர்வு

அதில், அகில இந்திய அளவில் பொதுப்பிரிவில் தனிஸ்கா என்ற ராஜஸ்தான் மாணவி 715 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்திருக்கிறார். டெல்லியைச் சேர்ந்த வடச் ஆஷிஷ் பத்ரா என்ற மாணவர் இரண்டாம் இடம் பிடித்திருக்கிறார். எஸ்.சி பிரிவில் ஜெயந்த் மௌரியா என்பவர் 695 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்திருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த ஆண்டு, நீட் தேர்ச்சியில் தமிழ்நாடு 28-வது இடத்துக்குப் பின்தங்கியதைக் கல்வியாளர்கள் கவலையுடன் பார்க்கிறார்கள். தமிழ்நாட்டில் 1,32,167 பேர் நீட் தேர்வை எழுதினர். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட அதிகம். இவர்களில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்தவர்கள் 17,517 பேர். தேர்வு எழுதியவர்களில் மொத்தம் 67,787 பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர். திருத்தேவ் விநாயகா என்ற மாணவர் 705 மதிப்பெண்கள் பெற்று தமிழ்நாட்டில் முதலிடம் பெற்றிருக்கிறார். இந்திய அளவில் அவர் 3-வது இடத்தைப் பிடித்திருக்கிறார்.

702 மதிப்பெண்களுடன் ஹரிணி என்ற மாணவி தமிழ்நாட்டில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறார். இவர், அகில இந்திய அளவில் 43-வது இடம். எஸ்.சி பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரதாப் என்ற மாணவர், 686 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் 7-ம் இடத்தைப் பிடித்திருக்கிறார். அகில இந்திய அளவில் முதல் 50 இடங்களில் இரண்டு பேர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

நீட் தேர்வு
நீட் தேர்வு

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் குறைந்திருக்கிறது. தமிழ்நாட்டில் 2019-ம் ஆண்டு 39.56 சதவிகிதம், 2019-ம் ஆண்டு 48.57 சதவிகிதம், 2020-ம் ஆண்டு 57.44 சதவிகிதம், 2021-ம் ஆண்டு 54.40 சதவிகிதம் என்ற அளவில் நீட் தேர்வு தேர்ச்சி விகிதம் இருந்தது. அது, இந்த ஆண்டு 51.30 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது.

தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்குக் கடுமையான எதிர்ப்பு இருந்துவருகிறது. எனவே, நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிப்பது தொடர்பான மசோதா அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆளுநருக்கு அனுப்பப்பட்ட அந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை.

நீட் தேர்வு
நீட் தேர்வு
KURUZ THANAM A

இந்த ஆண்டு நீட் தேர்வில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்திருக்கிறது என்பதுடன், நீட் தேர்வு எழுதிய அரசுப் பள்ளி மாணவர்களில் 80 சதவிகிதம் பேர் தேர்ச்சிபெறவில்லை என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான நீட் தேர்வு பயிற்சி அரசால் வழங்கப்பட்டுவருகிறது. தரமான பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை வைத்துவந்தனர். இந்த நிலையில், அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களின் தேர்ச்சி விகிதம் வெகுவாகக் குறைந்திருக்கிறது.

தரமான பயிற்சி வழங்கப்படாததே நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் வெற்றி பெறாததற்கு முக்கியக் காரணம் என்று விமர்சனங்கள் எழுதிருந்திருக்கின்றன. நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான முயற்சி ஒருபுறம் நடந்தாலும், அரசுப் பயிற்சி வழங்குவதிலும் சிறப்பு கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

“அரசுப் பள்ளிகளில் நீட் தேர்வுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆனால், அந்தந்தப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள்தான் பயிற்சியளிக்கிறார்கள். அவர்கள் மாணவர்களுக்குப் பாடத்தை நடத்துவார்களா, நீட் தேர்வுக்குப் பயிற்சி அளிப்பார்களா... வெளியிலிருந்து பயிற்சியாளர்களை அழைத்துவந்து பயிற்சி அளிக்க வேண்டும்” என்றும் கல்வியாளர்கள் அரசுக்குக் கோரிக்கை வைக்கிறார்கள்.

“நீட் தேர்வு முடிவுகள் வெளியான நேரத்தில், வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டிருந்தேன்” என்று பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறுகிறார். விலக்கு கேட்டுப் போராடினாலும், அது நடக்கும்வரையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தரமான நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்படுவதை அமைச்சர் உறுதிசெய்ய வேண்டும் என்பதே கல்வியாளர்களின் கோரிக்கை!