Published:Updated:

``வைகோவும் விஜயகாந்தும் கரைந்துபோய்விட்டனர்!’’ - சொல்கிறார் சீமான்

சீமான்
News
சீமான்

தமிழக அரசியலில், தனித்துப் போட்டியிடுவது குறித்தான கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில், '``வைகோவும் விஜயகாந்தும் கூட்டணி வைத்துக்கொண்டதால், தனித்தன்மை இழந்து கரைந்துபோய்விட்டனர்'' என்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

`தனித்துப் போட்டி', `மொத்த வேட்பாளர்களில் சரிபாதி பெண்கள்’, `முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு' எனத் தமிழக அரசியலையே தடதடக்க வைத்துவருகிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
சீமானைச் சந்தித்துப் பேசினேன்...

நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சி

``சாதி ஒழிப்பு, பெண் சமத்துவம் உள்ளிட்ட சமூகநீதி விஷயங்களில் நாம் தமிழர் கட்சியின் பார்வை என்ன?''

`` `சாதிய எண்ணம் இருக்கும்வரை சமூகமும் ஒன்றுபடாது; பொதுநலனும் இருக்காது' என்கிறார் அம்பேத்கர். `தமிழர்களைப் பிளந்து - பிரித்து ஆள்வது’தான் இந்தியக் கட்சிகள் மற்றும் திராவிடக் கட்சிகளின் கோட்பாடு. மாறாக, `தமிழர்களை இணைத்து, வலிமைபெற்று வாழ்வது - ஆள்வது'தான் நாம் தமிழர் கட்சியின் கோட்பாடு... கனவு. என் இனத்தில் எவனுமே தாழ்ந்தவன் இல்லை. அதனால்தான் புறக்கணிக்கப்பட்ட சமூகங்களுக்கு முன்னுரிமை கொடுத்து, அவர்களை பொதுத்தொகுதிகளில் நிற்கவைத்துப் போட்டியிடுகிறோம். கல்வி, வேலைவாய்ப்புகளில் மட்டுமன்றி அரசியல் அதிகாரத்திலும் பெண்களுக்குச் சம பங்கு கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அதனால்தான் 117 இடங்களில் பெண்களுக்குப் போட்டியிட வாய்ப்பு கொடுக்கிறோம்.''

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

``தமிழக அரசியல் வரலாற்றில், `கம்யூனிஸ்ட் கட்சியில் ஆரம்பித்து வைகோ, விஜயகாந்த் வரையில் யாராலும் தி.மு.க - அ.தி.மு.க-வுக்கு நிகரான கட்சியாக வளர முடியவில்லையே?''

``அண்ணன் வைகோ வரும்போது, ஓர் எழுச்சி இருந்தது. ஆனால், தொடர்ந்து தி.மு.க - அ.தி.மு.க-வுக்கு எதிராக சண்டையிட்டுக்கொண்டு என்னைப்போல் தனித்து நிலைத்து நிற்காமல், எதிர்த்துவந்த கட்சிகளிடமே போய் சரணடைந்து கூட்டணிவைத்துக் கரைந்துபோய்விட்டார். அதேபோல்தான், விஜயகாந்த்தும். இப்போது நானே தி.மு.க அல்லது அ.தி.மு.க-வுடன் போய் கூட்டணி வைத்துக்கொண்டால், என் பின்னே கட்சியில் வருகிறவர்கள், நேரடியாக தி.மு.க., அ.தி.மு.க-விலேயே போய்ச் சேர்ந்துவிட மாட்டார்களா... எதற்கு என்கூட வர வேண்டும். அப்படி நான் சேர மாட்டேன் என்பதால்தானே என் பின்னே இத்தனை இளம்பிள்ளைகள் எழுச்சியோடு வந்து சேர்கிறார்கள். ஆக, இதற்குப் பின்னே இந்தக் கோட்பாடுதான் இருக்கிறது. `என்றாவது ஒருநாள் தோற்கப்போகிற ஒரு கோட்பாட்டை ஏற்றுக்கொண்டு அதன் வெற்றிக்காகப் போராடுவதைவிட, என்றாவது ஒருநாள் வெல்லப்போகிற ஒரு கோட்பாட்டை ஏற்றுப் போராடி தோற்றுப்போவது மேலானது' என்கிறார் ஜவஹர்லால் நேரு. அதேபோல், என்றாவது ஒருநாள் என் கோட்பாடு வெல்லும். ஏனெனில், இது காலம் உருவாக்கிய அரசியல்!''

வைகோ - விஜயகாந்த்
வைகோ - விஜயகாந்த்

``2019 தேர்தலில், பா.ஜ.க-வுக்கு எதிரான வாக்குகள் தி.மு.க-வுக்குத்தானே போய்ச் சேர்ந்தன... நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்கவில்லையே?''

``இந்தியத் தேர்தலுக்கான ஆள் நான் இல்லை. ஆனாலும்கூட, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சுமார் 17 லட்சம் வாக்குகளை மக்கள் எங்களுக்கு அளித்திருக்கிறார்கள்.
பா.ஜ.க-வுக்கு எதிராக அதிகப்படியாக கருத்தியல் சண்டையிட்டு பரப்புரை செய்து, மோடிக்கு எதிரான மனநிலையை மக்களிடையே உருவாக்கி வைத்திருந்ததே நாங்கள்தான். ஆனால், `நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்தீர்களென்றால், வாக்குகள் பிரிந்து மோடி வென்றுவிடுவார்' என்று பிரசாரம் செய்து, மொத்த வாக்குகளையும் அறுவடை செய்துவிட்டது தி.மு.க. அதாவது, எங்களுக்கு வாக்களிக்க நினைத்தவர்கள்கூட, `பா.ஜ.க வந்துவிடக் கூடாதப்பா... அதனால் இந்த ஒருவாட்டி தி.மு.க-வுக்கு வாக்களிக்கிறோம்' என்று சொல்லிவிட்டனர் நடுநிலையாளர்கள். குறிப்பாக, ஒரு கிறித்துவர் அல்லது இஸ்லாமியர் ஓட்டுகூட எங்களுக்கு விழவிடாமல் பார்த்துக்கொண்டனர். ஆனால், இந்தத் தேர்தலில், எங்கள் விளையாட்டு ரொம்ப சிறப்பாக இருக்கும்!''

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``தி.மு.க-வை திராவிடக் கட்சி என்று விமர்சிக்கிற நீங்கள் அ.தி.மு.க-வை அதுபோல் விமர்சிப்பதில்லையே ஏன்?''

``அ.தி.மு.க-வும் திராவிடக் கட்சிதான். ஆனால், அவர்கள் திராவிட கோட்பாட்டை திரும்பத் திரும்பப் பேசுவது கிடையாது. `திராவிடக் கட்சிகளை அழிக்க முடியாது' என்று தினம் தினம் பேசுவதோ அல்லது சம்பளத்துக்கு 100 பேரை பணியமர்த்தி வைத்துக்கொண்டு திட்டுகிற வேலையையோ அவர்கள் செய்வதில்லை. அதுவுமல்லாமல், இன்றைக்கு முழுக்க முழுக்க தமிழ் தலைமைகள் அ.தி.மு.க-வின் தலைமைப் பொறுப்புகளில் வந்து உட்கார்ந்துவிட்டனர். அ.தி.மு.க மோசமான கட்சி, மோசமாக ஆட்சி நடத்துகிறது என்றால், அப்படியொரு கட்சியைப் பெற்றுப்போட்ட தாய் யார். அதனுடைய வேர் எங்கே இருக்கிறது... தி.மு.க தானே! கருணாநிதி மட்டும் ஒரு காமராஜராகவோ, கக்கனாகவோ இருந்திருந்தால், எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் எப்படி வந்திருப்பார்கள்?''

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

``கமல்ஹாசன் அளவுக்கு நீங்கள் ஆளும்கட்சியை விமர்சிப்பதில்லை என்பதாலேயே உங்களுக்கு `கரும்பு விவசாயி' சின்னம் மீண்டும் கிடைத்திருப்பதாகப் பேசப்படுகிறதே?''

``அப்படியில்லை... மத்திய பா.ஜ.க அரசை என் அளவுக்கு எதிர்த்துப் பேசியவர்கள் யாரும் இங்கு கிடையாது... கமல்ஹாசன் பேசியிருக்கிறாரா... ஆனால், நான் தொடர்ச்சியாகச் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறேன். புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, தொடர்ந்து சண்டை போடுகிறேன்.
மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நாங்கள் போராடித்தான் வருகிறோம். எனக்குக் கூடத்தான், கடந்த தேர்தலில் மெழுகுவர்த்தி சின்னத்தை தர மறுத்துவிட்டார்கள். சட்டமன்றத் தேர்தலில் சின்னம் ஒதுக்குவதென்பது மத்திய தேர்தல் ஆணையம்தான். அதனால், இந்த முறை டெல்லிக்கே சென்று தொடர்ச்சியாக தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு எங்கள் சின்னத்தைக் கேட்டுப் பெற்றிருக்கிறோம். இப்போதும்கூட, `கரும்பு விவசாயி சின்னம் மங்கலாக இருக்கிறது, வாக்கு எந்திரத்தில் சின்னத்தை எந்த இடத்தில் வைப்பது...' உள்ளிட்ட பிரச்னைகளுக்காக உயர் நீதிமன்றம் சென்றேன்... நேரமில்லை என்று சொல்லி தள்ளுபடி செய்துவிட்டார்கள். உச்ச நீதிமன்றமோ, `ஏற்கெனவே இது குறித்து 51 வழக்குகள் இருக்கின்றன. உங்கள் வழக்கை 52-வது வழக்காகத்தான் எடுக்க முடியும்' என்றது. 52-வது வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும்போது இங்கே தேர்தலே முடிந்து போயிருக்கும். எனவே, `நியாயமான எங்களின் கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுங்கள்' என்று தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டிருக்கிறோம். அவர்களும் பரிசீலிப்பதாக சொல்லியிருக்கின்றனர்... பார்க்கலாம்!''