Published:Updated:

தீண்டாமை: `யாரும் யாரையும் வற்புறுத்தியாக சரித்திரத்தில் நான் படித்தறியவில்லை!' -பாஜக எம்.எல்.ஏ

எம்.ஆர்.காந்தி
எம்.ஆர்.காந்தி

''இன்னும் 25 வருடங்கள் கழித்து, குமரி மாவட்டத்தில், இந்துக்கள் இருப்பார்களா என்றே எனக்கு சந்தேகமாக இருக்கிறது! 'இங்கேயும் இந்துக்கள் வாழ்ந்தார்கள்' என்றெல்லாம் சரித்திரத்தில்தான் படிக்கவேண்டி வருமோ!'' என்று சந்தேகம் எழுப்புகிறார் பா.ஜ.க எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அண்மையில், இந்து மதம் குறித்து இழிவாகப் பேசியதாக கைதான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. இந்த நிலையில், பாதிரியார் கைது விவகாரத்தின் பின்னணி குறித்துப் பேசுவோர், 'கன்னியாகுமரி மாவட்டத்தில் மத ரீதியான சர்ச்சைகளை சிலர் திட்டமிட்டு அரங்கேற்றி வருகிறார்கள்' என குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து தமிழக பா.ஜ.க-வின் மூத்த தலைவரும் நாகர்கோவில் எம்.எல்.ஏ-வுமான எம்.ஆர்.காந்தியிடம் பேசினோம்....

''தேவாலயம் கட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீங்கள் திட்டமிட்டு நடத்திய போராட்டத்தின் பின்னணியிலேயே பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது செய்யப்பட்டதாக சொல்கிறார்களே?''

ஜார்ஜ் பொன்னையா
ஜார்ஜ் பொன்னையா

''எங்களுடைய கன்னியாகுமரி மாவட்டத்தில், மண்டைக்காடு கலவரத்துக்குப் பிறகு, ஒரு மத வழிபாட்டுத் தலம் அருகே, மற்றொரு மத வழிபாட்டுத் தலம் கட்டப்படக்கூடாது என்று வேணுகோபால் கமிஷன் அறிக்கை சொல்கிறது. எனவே, மாவட்ட ஆட்சியரின் அனுமதியோடுதான் வழிபாட்டுத் தலங்கள் கட்டப்பட வேண்டும். ஆனால், அருமனை அருகேயுள்ள மாத்தூர் பகுதியில், இந்து கோயில்களுக்கு அருகே, அரசு அனுமதி இன்றி, சிலர் தேவாலயம் கட்ட முற்பட்டனர்.

இதை எதிர்த்து அப்பகுதியைச் சேர்ந்த இந்துக்கள், 'இங்கே சர்ச் கட்டினால், எங்கள் வழிபாட்டுக்கு அது குந்தகம் விளைவிக்கும். திருவிழா சமயங்களில் நாங்கள் மைக் செட் வைப்பதற்குக்கூட இடைஞ்சலாக இருக்கும்' என்றெல்லாம்கூறி போராட்டம் நடத்தினர். மாவட்ட ஆட்சியர் அனுமதியோடு, அவர்கள் சர்ச் கட்டுவார்களேயேனால், நாங்கள் யாரும் அங்கே போராடப்போவதில்லையே!

இன்னும் 25 வருடங்கள் கழித்து, கன்னியாகுமரி மாவட்டத்தில், இந்துக்கள் இருப்பார்களா என்றே எனக்கு சந்தேகமாக இருக்கிறது! 'இங்கேயும் இந்துக்கள் வாழ்ந்தார்கள்' என்றெல்லாம் சரித்திரத்தில்தான் படிக்கவேண்டி வருமோ என்னவோ!''

''சிறுபான்மையினருக்கு இங்கே பாதுகாப்பு இல்லை என்று கூறி போராட்டம் நடத்திய ஜார்ஜ் பொன்னையா கைது செய்யப்படுகிறார் என்றால், அவர்கள் சொல்வது உண்மைதானே?''

''எது உண்மை? 'நாங்கள் 62% பேர் இருக்கிறோம்' என்று ஜார்ஜ் பொன்னையாவே சொல்லி மிரட்டுகிறார் என்றால், இங்கே சிறுபான்மையினராக இருப்பது யார் என்று நீங்களே சொல்லுங்களேன்....

கிறிஸ்தவர்கள்தான் எங்களை மிரட்டுகின்றனர். வழிபாடு என்பது வாழ்க்கையின் ஒரு பகுதிதானே தவிர... வாழ்வதற்கு எல்லோருக்குமே உரிமை இருக்கிறது. அவரவர் மதத்தைப் பெருமைப்படுத்திப் பேசலாமே தவிர, யாரொருவரும் அடுத்தவர் மதத்தை சிறுமைப்படுத்திப் பேசக்கூடாது.

தமிழ்நாட்டில், தற்போது புதிதாக தி.மு.க தலைமையிலான அரசு பதவி ஏற்றிருப்பதால், 'இந்துக்களுக்கு எதிராக நாம் பேசலாம்... நடவடிக்கை எடுக்கமாட்டார்கள்' என்று ஜார்ஜ் பொன்னையாவுக்கு தைரியம் வந்திருக்கலாம். ஆனால், சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதற்காக, தி.மு.க அரசு உடனடியாக அவரைக் கைது செய்துவிட்டது. இதை நான் வரவேற்கிறேன். அதேசமயம், இந்த நடவடிக்கை இனிவரும் காலத்தில் என்னமாதிரியான பலன்களைக் கொடுக்கும் என்பதையெல்லாம் இனிமேல்தான் பார்க்கவேண்டும்!''

அகில பாரத இந்து மகாசபை செயலாளர் பூஜா பாண்டே
அகில பாரத இந்து மகாசபை செயலாளர் பூஜா பாண்டே

''காந்தி உருவபொம்மையை துப்பாக்கியால் சுடுவது, மாட்டுக் கறி வைத்திருந்தவர்களை அடித்துக்கொல்வது என இந்து மதத்தின் பெயரால் அராஜகம் செய்வோர் மீதெல்லாம் பெரிதாக எந்த நடவடிக்கையும் இல்லையே?''

''ஒவ்வொரு அரசாங்கமும் அந்தந்த சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு நடவடிக்கைகள் எடுப்பார்கள். மாட்டுக்கறி வைத்திருந்தவர்களை அடித்துக் கொன்றவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கிறதுதான். ஹெச்.ராஜா மீது இப்போதும் வழக்குகள் இருக்கின்றன. ஜாமீனில்தான் இருந்துவருகிறார். அதனால், நடவடிக்கைகள் என்பது ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியாகத்தான் இருக்கும்!''

``மேயர் பதவியைப் பிடித்தால்தான் நாம் கொண்டுவந்த திட்டங்களைத் தொடங்க முடியும்!’’ - செல்லூர் ராஜூ

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

''சட்டையைக் கழற்றிவிட்டுச் செல்லவேண்டிய கோயிலில்கூட எம்.ஆர்.காந்தி சட்டை அணிந்த நிலையிலேயே சென்றுவருகிறார் என்றெல்லாம் சொல்கிறார்களே... உண்மைதானா?''

''எங்கள் கோயில்களில் செல்வதற்கு எந்த விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவோ அந்த விதிமுறைகளைப் பின்பற்றித்தான் நான் சென்றுவருவேன். உதாரணமாக சுசீந்திரம் கோயிலுக்குள் ஆண்கள் செல்லவேண்டுமென்றால், மேலாடை அணிந்திருக்கக்கூடாது. அதற்குப் பதிலாக துண்டு வேண்டுமானால் போர்த்திக்கொள்ளலாம்.

அண்மையில் மண்டைக்காடு கோயிலில் தீ விபத்து ஏற்பட்டிருந்ததை பார்வையிடுவதற்காக அமைச்சர் சேகர் பாபு வந்திருந்தார். இந்தக் கோயிலின் மூலஸ்தானத்துக்குள் செல்ல வேண்டுமென்றால், ஆண்கள் சட்டையைக் கழற்றிவிட்டுத்தான் செல்லவேண்டும். மூலஸ்தானத்துக்கு வெளியே சட்டை அணிந்த நிலையிலேயே போய்வரலாம்தான். எனவே, நான் சட்டை அணிந்த நிலையில் நின்றிருந்தேன். இதைக்கூட சர்ச்சையாக்கி செய்தி பரப்பிவிட்டார்கள்!''

அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் மனோ தங்கராஜ்
அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் மனோ தங்கராஜ்

''எம்.எல்.ஏ தேர்தலில், தொடர்ச்சியாக ஆறு முறை தோல்வியுற்று வந்த நீங்கள் முதன்முறையாக வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனதும் எப்படி உணர்ந்தீர்கள்?''

''ஆறு முறை தோல்வியா அல்லது ஏழு முறை தோல்வியா என்ற கணக்கெல்லாம் எனக்கு ஞாபகத்தில் இல்லை. தோல்வியுற்றபோது அதற்காக நான் துவண்டுவிடவில்லை. பா.ஜ.க மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்திருக்கிறது. எங்கள் கட்சியும் இப்போது பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது. இந்த சூழ்நிலையில், அதிகாரத்துக்கு பா.ஜ.க-வும் வரவேண்டும் என மக்கள் விருப்பப்படுகிறார்கள். அவர்கள் அளித்த தீர்ப்பினால்தான் நானும் எம்.எல்.ஏ ஆகியிருக்கிறேன். என்னால் முடிந்த அளவு மக்களுக்கான சேவையை செவ்வனே செய்யவேண்டும்... அவ்வளவுதான்!''

எடப்பாடிக்கு வந்தா, தக்காளி சட்னி; ஸ்டாலினுக்கு வந்தா ரத்தமா?

''செருப்பு அணிந்த காலால், என் தாய் மண்ணை மிதித்து அவமதிக்கமாட்டேன் எனக் கருதுகிற நீங்கள், வெறும் கால்களாலும் தாய் மண்ணை மிதிக்கக்கூடாதுதானே?''

''தாயோடு பேசுவதில் மகிழ்ச்சி, தாயின் முந்தானையைப் பிடித்துக்கொண்டு நடப்பதில் ஒரு மகிழ்ச்சி, தாயின் சொல்லைக்கேட்டு நடப்பதில் ஒரு மகிழ்ச்சி... அந்தவகையில், என் தாய் மண்ணோடும் நான் நேரடித் தொடர்பில் இருப்பது உணர்வுபூர்வமான மகிழ்ச்சியல்லவா!''

எம்.ஆர்.காந்தி
எம்.ஆர்.காந்தி

''சாதியத் தீண்டாமைக்கு எதிராக 'செருப்பு அணிகிற உரிமை'க்குப் போராடிவருகிற நாட்டில், செருப்பு அணிய மறுக்கும் உங்களது செயல்பாடு கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகிறதே?''

''அவரவர் பார்வை அவரவர்க்கு! அதைப்பற்றி எல்லாம் நாம் ஒன்றும் சொல்லமுடியாது. நான் அறிந்தவரையில், சாதியத் தீண்டாமையினால், ஆங்காங்கே சில அடிமைத்தனங்கள் இருந்திருக்கலாம். ஆனால், 'நீ பிற்படுத்தப்பட்டவன்... எனவே செருப்பு அணியக்கூடாது' என்றெல்லாம் யாரும் யாரையும் வற்புறுத்தியாக சரித்திரத்தில் நான் படித்தறியவில்லை!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு