Published:Updated:

அதிமுக-வின் ஒரு தரப்பு சுயேச்சையாகப் போட்டி? - திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில் நடப்பதென்ன?!

திருவெண்ணெய்நல்லூர்

உட்கட்சி அதிருப்தியால், திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில் ஒரு தரப்பு அதிமுக-வினர் 12 இடங்களில் சுயேச்சைகளாகக் களம் இறங்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக-வின் ஒரு தரப்பு சுயேச்சையாகப் போட்டி? - திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில் நடப்பதென்ன?!

உட்கட்சி அதிருப்தியால், திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில் ஒரு தரப்பு அதிமுக-வினர் 12 இடங்களில் சுயேச்சைகளாகக் களம் இறங்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
திருவெண்ணெய்நல்லூர்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏழு பேரூராட்சிகளில் ஒன்று திருவெண்ணெய்நல்லூர். இந்தப் பேரூராட்சியில் 4,040 ஆண் வாக்காளர்கள், 4,105 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 8,145 வாக்காளர்கள் இருக்கிறார்கள். இங்கு அ.தி.மு.க கட்சிக்குள்ளாகவே நீண்டநாளாக நிலவிவந்த சலசலப்பு தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. 2000-க்கு முன்பு திருவெண்ணெய்நல்லூர் அ.தி.மு.க நகரச் செயலாளராக இருந்துவந்திருக்கிறார் சரவணக்குமார். கொளப்பாக்கத்தில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நகரச் செயலாளர்களை மாற்றியபோது இவருக்கு பதிலாக கேசவன் என்பவரை நகர செயலாளராக நியமித்தாராம். அதிலிருந்து தி.நல்லூர் அதிமுக நகரச் செயலாளராக இருந்துவந்த கேசவன் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் உயிரிழந்துள்ளார்.

முன்னாள் எம்.எல்.ஏ குமரகுரு
முன்னாள் எம்.எல்.ஏ குமரகுரு

அதிலிருந்து அந்தப் பகுதிக்கு நகரச் செயலாளர் நியமனம் செய்யப்படாமல் இருந்திருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போதும் இப்பகுதியில் நகரச் செயலாளர் இல்லாமலேயே தேர்தல் பணிகள் நடந்துள்ளன. இந்நிலையில், அதிமுக-வில் மாவட்ட ஜெ.பேரவை துணைச் செயலாளராக இருந்துவந்த சரவணக்குமாருக்கும், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் காண்டீபனுக்கும் இடையே நகரச் செயலாளர் பதவியைப் பிடிப்பதில் போட்டி இருந்துவந்துள்ளது. இந்நிலையில், நகரப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வருவதற்கு முன்னதாக காண்டீபனை தி.நல்லூர் நகரச் செயலாளராக அறிவித்திருக்கிறது கட்சித் தலைமை. இந்த அறிவிப்பால் அப்செட்டான சரவணக்குமார் தரப்பு, மாவட்டச் செயலாளர் குமரகுரு தலைமையில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்கவில்லையாம்.

நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், சரவணக்குமார் தலைமையில் 12 வார்டுகள் வரை அவரின் ஆதரவாளர்கள் சுயேச்சையாகக் களமிறங்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக சரவணக்குமாரிடம் பேசினோம். "நான், 1996-ல் அதிமுக சார்பில் நின்று முதன்முதலில் கவுன்சிலர் ஆனேன். அதற்குப் பிறகு தி.நல்லூர் நகச்ர செயலாளராக இருந்தேன். 2002-ல் அம்மா, நகரச் செயலாளராக கேசவன் என்பவரை நியமித்தார்கள். அதில் எனக்கு வருத்தமில்லை. 2001-போலத்தான் காண்டீபன் அதிமுக உள்ளே வந்தாரு. 2006-ல அவருக்கு 6-வது வார்டுல போட்டியிட வாய்ப்பு கிடைச்சது. ஆனா, அவர் நிக்காம வெளியேறி அமைச்சர் பொன்முடி தம்பியுடன் இணைந்து ஒப்பந்தப் பணிகளை செய்ய ஆரம்பிச்சுட்டாரு. 2011 வரைக்கும் அவர் கட்சிப் பக்கமே வரலை. ஆனா அவருக்கு சொசைட்டி தலைவர் பதவி குடுத்துட்டாங்க. இருந்தாலும், நான் கட்சிக்காக வேலை செய்துகொண்டு வந்தவன் தான்.

அதிமுக தலைமை
அதிமுக தலைமை

யதேச்சையா கேசவன் டிசம்பர் 2019-ல இறந்துட்டாரு. ந.செ பதவி காலியா இருந்தபோது எனக்குக் கேட்டதுக்கு 'பாக்கலாம்' அப்படினு மா.செ குமரகுரு அண்ணா சொல்லிட்டாரு. தி.நல்லூர் பகுதி, திருக்கோவிலூர் தொகுதியில் இணைக்கப்பட்டபோது, மோகன் அங்க நின்னு ஜெயிச்சாரு. அம்மா, அவரை அமைச்சராகவும் மா.செ-வாகவும் ஆக்கினாங்க. கட்சிக்கு கட்டுப்பட்டு அவர்கூட பயணித்தோம். குமரகுரு அண்ணா உளுந்தூர்பேட்டை தொகுதியில இருந்தாரு. அப்புறம் குமரகுரு அண்ணாவையே மா.செ-வாக அறிவிச்சபோது மீண்டும் அவருடன்தான் பயணிச்சோம். அப்படியிருந்தும் இப்போ நகரச் செயலாளர் பொறுப்பை காண்டீபனுக்குக் கொடுத்துட்டாங்க. 'ரெண்டு பேருக்கும் வேண்டாம். புது ஆளுக்குக் கொடுங்க என்றோம். ஆனா, கேக்கலை. இப்போ, 'கட்சிக்காக இந்தத் தேர்தலில் வேலை செய்யுங்க. நீங்களேகூட சேர்மனாக இருங்க' என்று கூறி காண்டீபன் நேர்ல வந்து பேசினாரு. `நீங்க ந.செ-வாக இருக்கும்போது என்னால வேலை செய்ய முடியாது’னு சொல்லிட்டேன். இப்போ, கட்சி இல்லாம சுயேச்சையாக நிக்கலாம்னு இருக்கோம். மக்கள் முடிவு பண்ணுவாங்க, தங்களுக்கு யார் வேண்டும் என்று..." என்றார்.

இது தொடர்பாக விளக்கம் கேட்க காண்டீபனைத் தொடர்பு கொண்டோம். "கட்சி இரு தரப்பாக எல்லாம் பிரியவில்லை. சுயேச்சையாக நிற்கிறேன் என்றால் அவர்கள் கட்சிக்குள் வர மாட்டார்கள். 2003-லருந்து நான் மா.செ தரப்பில்தான் இருக்கிறேன். அவங்கதான் இடையில பணம் சம்பாதிக்க முன்னாள் அமைச்சர் மோகன் பக்கம் போனாங்க. கட்சி என்பது எல்லாரையும் பாக்குறதுதான், சம்பாதிச்சுக்கிட்டு போவதற்கு இல்லை.

எம்.பி தேர்தல்போதுகூட அமமுக-வுக்காக ஓட்டுக் கேட்டாரு அவரு. இப்போது நடக்கவுள்ள தேர்தலுக்கு கட்சிக்காக ஓட்டுக் கேளுங்கள் என்று நான் அவரிடம் இரண்டு முறை நேர்ல பேசியபோது, "பாஜக கூட்டணில இருக்காங்க. இரட்டை இலைச் சின்னத்துக்கு ஓட்டுக் கேட்டா மக்கள் போட மாட்டாங்க"னு சொன்னாரு அவர். அவரது சுயநலத்துக்காகத் தேவையில்லாமல் பேசுகிறார்" என்றார்.