Published:Updated:

கவுன்சிலர்களை வளைக்க திமுகவினர் அடிதடி; போலீஸ் தடியடி; ஆலங்காயத்தில் என்ன நடக்கிறது?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மோதிக்கொண்ட தி.மு.க-வின் இருத்தரப்பு
மோதிக்கொண்ட தி.மு.க-வின் இருத்தரப்பு

மறைமுகத் தேர்தல் நாளை மறுநாள் (22-ம் தேதி) நடைபெறுகிறது. பல இடங்களிலும் நடக்கும் மாவட்ட ஊராட்சித் தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிகளுக்கான குதிரைப் பேரங்கள் மலைக்க வைக்கின்றன.

ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பான்மை இடங்களை தி.மு.க கைப்பற்றியுள்ள நிலையில், மாவட்ட ஊராட்சித் தலைவர், மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றியத் தலைவர், ஊராட்சி ஒன்றியத் துணைத் தலைவர், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நாளை மறுநாள் (22-ம் தேதி) நடைபெறுகிறது. பல இடங்களிலும் நடக்கும் மாவட்ட ஊராட்சித் தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிகளுக்கான குதிரைப் பேரங்கள் மலைக்க வைக்கின்றன. அதுமட்டுமல்ல, கூவத்தூர் ஸ்டைலில் கவுன்சிலர்களை அள்ளிச் சென்று ரிசார்ட்களில் தங்கவைப்பது, வெளி மாநிலங்களுக்குச் சுற்றுலா அனுப்பிவைப்பது என் களேபரம் செய்கிறார்கள்.

மாவட்டச் செயலாளர் தேவராஜி
மாவட்டச் செயலாளர் தேவராஜி

இந்த நிலையில், தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கான பதவி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. வெளியில் தங்க வைக்கப்பட்டிருந்த மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றியக் கவுன்சிலர்கள் அந்தந்த மாவட்ட ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ‘விசிட்’ அடித்து பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர். அப்போது, சில இடங்களில் கவுன்சிலர்களை கைப்பற்றுவது தொடர்பாக தி.மு.க புள்ளிகள் இடையே கைகலப்பும், வாக்குவாதமும் ஏற்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் ஒன்றியத் தலைவர் பதவிக்கு நடைபெறும் போட்டா போட்டியும் அடிதடி வரை முற்றிருக்கிறது. தி.மு.க மாவட்டச் செயலாளர் தேவராஜி தன் இளைய மருமகள் காயத்ரி பிரபாகரனை, ஆலங்காயம் ஒன்றியத் தலைவராக்க மற்ற கவுன்சிலர்களைக் கைக்குள் கொண்டுவர முயற்சி செய்கிறார் எனக் குற்றம்சாட்டுகிறார்கள் லோக்கல் ஆளும்கட்சி புள்ளிகள்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் துரைமுருகன் மகனும் எம்.பி-யுமான கதிர் ஆனந்த் தனது ஆதரவு கவுன்சிலரான சங்கீதா பாரியை ஆலங்காயம் ஒன்றியத் தலைவராக்க விருப்பப்படுகிறார் என்கிறார்கள். இதற்காக, ஆதரவு தெரிவித்த கவுன்சிலர்கள் அனைவரையும் அள்ளிச் சென்று ரிசார்ட்டுகளில் எம்.பி-யின் ஆதரவாளர்கள் மறைத்துவைத்திருக்கிறார்கள் என எதிர்தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர். இன்றைய தினம் ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு கார்களில் அழைத்துவரப்பட்ட இந்த கவுன்சிலர்களை மீட்கும் முயற்சியில்தான் இருத்தரப்பினரும் மாறி மாறி தாக்கிக்கொண்டனர் எனச் சொல்லப்படுகிறது. இதையடுத்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் லேசான தடியடி நடத்தி மோதலைத் தடுத்தனர்.

மோதிக்கொண்ட தி.மு.க-வின் இருத்தரப்பு
மோதிக்கொண்ட தி.மு.க-வின் இருத்தரப்பு

இதுகுறித்து, ஆலங்காயம் தி.மு.க நிர்வாகிகள் சிலர் கூறுகையில், ‘‘எங்கள் ஒன்றியத்தில் மொத்தம் 18 கவுன்சிலர்கள் இருக்கிறார்கள். தி.மு.க-11, அ.தி.மு.க-4, பா.ம.க-2, சுயேட்சை-1. மெஜாரிட்டியாக உள்ள தி.மு.க கவுன்சிலர்கள் எம்.பி கதிர் ஆனந்த், மாவட்டச் செயலாளர் தேவராஜின் தரப்பு என இரண்டு பிரிவினராக பிரிந்து நிற்கிறார்கள். மாவட்டச் செயலாளர் பக்கம் 6 கவுன்சிலர்கள் இருக்கிறார்கள். கதிர் ஆனந்த் ஆதரிக்கும் சங்கீதா பாரியின் பக்கம் ஐந்து கவுன்சிலர்கள் உள்ளனர். அதேபோல், சங்கீதா பாரியை அ.தி.மு.க மற்றும் பா.ம.க கவுன்சிலர்களும் ஆதரிக்க முடிவுச் செய்திருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இவ்வளவு பேரும் ஒன்றாகக்கூடி மாவட்டச் செயலாளர் தேவராஜியை எதிர்க்கிறார்கள். இன்று பதவி ஏற்க வந்த எதிரணி கவுன்சிலர்களைத் தங்கள் பக்கம் இழுக்க முயன்றார் மாவட்ட செயலாளர் தேவராஜி. அதனால் ஏற்பட்ட பிரச்னைதான் மோதலாக வெடித்தது. மாவட்டச் செயலாளர், ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ என அதிகாரத்தில் தொடர்கிறார் தேவராஜி. அப்படியிருந்தும் தனது மருமகளை ஒன்றியத் தலைவராக்க ஆசைப்படுவது நிர்வாகிகளையும், தொண்டர்களையும் கொந்தளிப்படையச் செய்திருக்கிறது என்கிறார்கள்.

தடியடி நடத்திய போலீஸார்
தடியடி நடத்திய போலீஸார்

இந்த பிரச்னை, இதோடு நிற்கப் போவதில்லை. எதிரணி கவுன்சிலர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் இடங்களை மாவட்ட செயலாளரின் ஆட்கள் தேடி வருகிறார்கள். கையில் கிடைப்பவர்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க திட்டமிட்டிருக்கிறார்கள். தங்களை ஆதரிக்காத கவுன்சிலர்கள் கிடைக்கும் பட்சத்தில் அவர்களை நாளை மறுநாள் நடைபெறும் மறைமுக தேர்தலுக்கு வரவிடாமல் தடுப்பதற்கான வேலைகளும் நடைபெற்றுவருகின்றன. நாளை மறுநாள் கவுன்சிலர்கள் கூடும்போது பிரச்னை நடைபெறவும் வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. ஒன்றியத் தலைவர் பதவியில் யார் அமரப் போகிறார்கள் என்பதைப் பொருந்திருந்துதான் பார்க்க வேண்டும்’’ என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு