Published:Updated:

`தள்ளுமுள்ளுவில் முடிந்த வேட்புமனு விவகாரம்‘ - வேலூர் அதிமுக நிர்வாகிகள் கைது; நடந்தது என்ன?

அசல் வேட்பாளரான அம்பிகாவிடமும் கையெழுத்து பெற்றதாகக் கூறப்படுகிறது. விலகல் கடிதம் எனத் தெரியாமல் அம்பிகாவும் தேர்தல் அதிகாரிகள் காட்டிய பக்கங்களில் கையெழுத்து போட்டதாகக் கூறப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வேலூர் மாவட்டம், காட்பாடி ஒன்றியக் குழுவிலுள்ள 8-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் களமிறங்கியிருப்பவர் அம்பிகா. மனுத்தாக்கலின்போது, மாற்று வேட்பாளராக ரேவதி என்பவரை அம்பிகா முன்னிறுத்தியிருந்தார். இருவரின் மனுவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், மாற்று வேட்பாளர் ரேவதியின் மனுவைத் திரும்பப் பெறுவதற்காக காட்பாடி பி.டி.ஓ அலுவலகத்துக்கு அவருடன் `அசல்’ வேட்பாளர் அம்பிகாவும் சென்றார். மாற்று வேட்பாளரிடம் விலகல் படிவத்தில் கையெழுத்து வாங்கிய தேர்தல் நடத்தும் அதிகாரிகள், அசல் வேட்பாளரான அம்பிகாவிடமும் கையெழுத்து பெற்றதாகக் கூறப்படுகிறது. விலகல் கடிதம் எனத் தெரியாமல் அம்பிகாவும் தேர்தல் அதிகாரிகள் காட்டிய பக்கங்களில் கையெழுத்து போட்டதாகக் கூறப்படுகிறது.

அதிமுக வேட்பாளர் அம்பிகா
அதிமுக வேட்பாளர் அம்பிகா
`உதயநிதிக்கு என்ன தகுதி இருக்கிறது?’ - எடப்பாடி பழனிசாமி கேள்வியும், திமுக-வின் பதிலும்!

அதன் பிறகு, திமுக வேட்பாளர் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வு செய்யப்படுவதாகத் தகவல்கள் வெளியாகின. அதிர்ச்சியடைந்த அதிமுக வேட்பாளர் அம்பிகா, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சென்று ``போட்டியின்றி திமுக வேட்பாளர் எப்படி வெற்றிபெற முடியும்? களத்தில் நான் இருக்கிறேனே?’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். அதற்கு, ``நீங்கள்தானே அம்மா... வாபஸ் பெறும் படிவத்தில் கையெழுத்துப் போட்டிருக்கிறீர்கள்?’’ என்று அந்தப் படிவத்தைக் காட்டியிருக்கிறார் தேர்தல் நடத்தும் அதிகாரி. ``மாற்று வேட்பாளருக்கான வாபஸ் படிவம் என்று சொல்லித்தானே என்னிடமும் கையெழுத்து வாங்கினீர்கள்... இது மோசடி. திமுக-வுக்கு ஆதரவான செயல்பாடு’’ என்று கண்டித்திருக்கிறார் வேட்பாளர் அம்பிகா. அம்பிகாவை அதட்டி வெளியில் அனுப்பியிருக்கிறார்கள் தேர்தல் அதிகாரிகள்.

தகவலறிந்ததும், அதிமுக மாநகர மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு தலைமையிலான அதிமுக நிர்வாகிகள் பி.டி.ஓ அலுவலகத்துக்குள் சென்று, ``துரைமுருகன் தூண்டுதலின்பேரில் நீங்கள் செய்யும் தவற்றுக்குக் கட்டாயம் பதில் சொல்லியாக வேண்டும்’’ எனத் தேர்தல் அதிகாரியிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து, எஸ்.ஆர்.கே.அப்புவிடம் போனில் பேசிய தேர்தல் அதிகாரி, தன்னிடமிருந்த வேட்பாளரின் வாபஸ் பெறும் படிவத்தையும் கொடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அந்தநேரத்தில், திமுக மத்திய மாவட்டச் செயலாளரும், அணைக்கட்டு எம்.எல்.ஏ-வுமான நந்தகுமார் தலைமையிலான அந்தக் கட்சியினரும் வந்ததால் மோதல் உருவானது. அதுவரை அதிமுக-வினரிடம் பணிந்துபோகிற வகையில் பேசிக்கொண்டிருந்த தேர்தல் அதிகாரிகள், அடுத்த நொடி திமுக-வினருக்குச் சாதகமாகப் பேசத்தொடங்கியதாகச் சொல்லப்படுகிறது.

தேர்தல் அதிகாரியிடம் கேள்வி கேட்ட அதிமுக-வினர்
தேர்தல் அதிகாரியிடம் கேள்வி கேட்ட அதிமுக-வினர்

அப்போது இரு கட்சியினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதிமுக-வினர் மீது மட்டும் காட்பாடி காவல் நிலையத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் புகாரளித்தார். போலீஸாரும் அதிமுக மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு உட்பட ஐந்து பேர் மீது நான்கு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்தனர். 26-ம் தேதி அதிகாலை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த காட்பாடி பகுதிச் செயலாளர் ஜனார்தனன், மாநகர மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் அமர்நாத், காட்பாடி ஒன்றிய முன்னாள் செயலாளர் ஆனந்தன் மூவரையும் கைதுசெய்து குடியாத்தம் கிளைச் சிறையில் அடைத்திருக்கிறது போலீஸ். முன்ஜாமீன் பெற்றதால் மாநகர மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்புவை போலீஸார் கைதுசெய்யவில்லை. தேர்தல் அதிகாரிகள், காவல்துறையினர் ஒருதலைபட்சமாக நடந்துகொண்டதாக மாநிலத் தேர்தல் ஆணையரிடமும், டி.ஜி.பி-யிடமும் அதிமுக தலைமை புகாரளித்திருக்கிறது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக நிர்வாகிகளைத் தேர்தல் பணிக்குழுப் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி இன்று காலை சந்தித்து நலம் விசாரித்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து, வேலூர் மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு கூறுகையில், ``அதிமுக-வினரின் வேட்புமனு திட்டமிட்டு நிராகரிக்கப்படுகிறது. காட்பாடி ஒன்றியத்தைப் பொறுத்தவரையில் திமுக-வைவிடவும் அதிமுக-வுக்கு எப்போதுமே ஏழாயிரம் வாக்குகள் கூடுதலாகக் கிடைக்கும். இதை அமைச்சர் துரைமுருகனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எங்கள்மீது வழக்கு போட்டால் பயந்து ஒதுங்கிவிடுவோம் என்று துரைமுருகன் நினைத்துக்கொண்டிருக்கிறார். எந்தவிதமான சலசலப்புக்கும் நாங்கள் அஞ்சக்கூடிய ஆட்கள் கிடையாது. துரைமுருகன் செய்யும் இந்த வேலைக்கு உள்ளாட்சித் தேர்தலில் தகுந்த பாடம் கற்பிப்போம்.

துரைமுருகன்
துரைமுருகன்

மாற்று வேட்பாளரின் மனுவை வாபஸ் பெறும்போது, அசல் வேட்பாளரையும் கையெழுத்து போடச் சொல்லியிருக்கிறார் தேர்தல் அதிகாரி. அப்போதுதான் மாற்று வேட்பாளரின் விலகல் மனு ஏற்கப்படும் என்று அவர் கூறியதால், எழுதப் படிக்கத் தெரியாத எங்களது அசல் வேட்பாளரும் கையெழுத்து போட்டிருக்கிறார். அதிமுக-வினரை ஏமாற்றிவிடலாம் என்று நினைத்த தேர்தல் அதிகாரியிடம் நாங்கள் அமைதியான முறையில் சென்றுதான் விளக்கம் கேட்டோம். அதற்கு அவர், என்னிடம் மறைமுகமாக போனில் பேசி மன்னிப்புக் கோரினார். `இத்துடன் விவகாரத்தை முடித்துக்கொள்ளுங்கள். இறுதி வேட்பாளர் பட்டியலில் உங்களது வேட்பாளர் பெயரைச் சேர்த்துவிடுகிறேன்’ என்று கெஞ்சியதுடன், மோசடியாக கையெழுத்து பெற்ற விலகல் படிவத்தையும் என்னிடமே கொடுத்துவிட்டார். பின்னர், துரைமுருகனிடமிருந்து வந்த அழுத்தம் காரணமாக விலகல் படிவத்தை நான் பிடுங்கிச் சென்றதாக போலீஸில் புகாரளித்திருக்கிறார். தேர்தல் நடத்தும் அலுவலர் என்னிடம் மன்னிப்புக் கேட்டு கெஞ்சிய ஆடியோ உரையாடலைப் பதிவு செய்துவைத்திருக்கிறேன். தேவையான நேரத்தில் வெளியிடுகிறேன். அதிமுக-வினரை குண்டர்களைப்போல் வீடு புகுந்து கைதுசெய்த காவல்துறையினர்மீதும் டி.ஜி.பி-யிடம் புகாரளித்திருக்கிறோம். இந்த விவகாரத்தில் ஆளுநர் தலையிட்டு திமுக-வின் அராஜகத்துக்கு முற்றுப்புள்ளிவைக்க வேண்டும் என்று அதிமுக தலைமை வலியுறுத்திவருகிறது’’ என்றார் எஸ்.ஆர்.கே.அப்பு.

அதிமுக-வின் குற்றச்சாட்டு குறித்து காட்பாடி தெற்குப் பகுதி திமுக செயலாளர் சுனில்குமாரிடம் கேட்டபோது, ``பிரச்னையை அறிந்தவுடன் காட்பாடி பி.டி.ஓ அலுவலகத்துக்கு நானும், திமுக மத்திய மாவட்டச் செயலாளரும் விரைந்து சென்று அங்கிருந்தவர்களிடம் பேசினோம். இந்த விவகாரத்துக்கும் எங்கள் அமைச்சருக்கும் துளியும் சம்பந்தம் கிடையாது. அதிமுக சார்பில் போட்டியிடும் அந்த வேட்பாளர் யாரென்றுகூட எங்களுக்குத் தெரியாது. சம்பவத்துக்குப் பின்னரே அவரைப் பார்க்கின்றோம். மிகவும் ஏழ்மையிலுள்ள குடும்பம் எனச் சொன்னார்கள். தேர்தலில் செலவிட பணம் இல்லை என்பதால் வேட்புமனுவை வாபஸ் வாங்கிச் செல்லும் முடிவில்தான் இருந்திருக்கிறார். அவரைத் தேவையில்லாமல் பிடித்து வந்து பிரச்னையைக் கிளப்பியிருக்கிறார்கள் அதிமுக நிர்வாகிகள். தேவையில்லாமல் அமைச்சரின் பெயரை இழுக்கிறார்கள்’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு