Published:Updated:

விழுப்புரம்: சுயேச்சை வேட்பாளர் தோல்வியால் நடந்த களேபரம்! -மறுதேர்தல் கேட்டு முறையிட்ட வேட்பாளர்கள்

ஒன்றிய சேர்மன் பதவிக்கு போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் ஒருவர் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டதால், சுமார் 100-க்கும் மேற்பட்டோர் திண்டிவனம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த 6, 9 தேதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். பெருவாரியான இடங்களை திமுக கூட்டணியே கைப்பற்றியிருந்தது. கடந்த 20-ம் தேதி தேர்தலில் வெற்றிபெற்ற வேட்பாளர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். மாவட்ட ஊராட்சித் தலைவர், மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றியத் தலைவர், ஊராட்சி ஒன்றியத் துணைத் தலைவர், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல்கள் நேற்று (22.10.2021) நடைபெற்றன.

உள்ளாட்சி: `டிக்’ மட்டுமே; கையெழுத்துப் போட்டால் செல்லாது! - மறைமுகத் தேர்தல் நடைமுறை தெரியுமா?

விழுப்புரம் மாவட்டத்தைப் பொறுத்தவரை, 1 மாவட்ட ஊராட்சித் தலைவர், 1 மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர்; 13 ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள், 13 ஊராட்சி ஒன்றியத் துணைத் தலைவர்கள்; 688 ஊராட்சி மன்றத் துணைத் தலைவர்கள் என மொத்தம் 716 பதவிகளுக்கு தேர்தல் நேற்று நடைபெற்றது.

பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட சொக்கலிங்கம்
பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட சொக்கலிங்கம்

மரக்காணம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் (ஒன்றிய சேர்மன்) பதவியைப் பிடிப்பதற்காக திமுக கட்சியினர் இரு தரப்பினருக்கும் இடையே பலத்த வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு நடைபெறவிருந்த மறைமுகத் தேர்தல், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

மரக்காணம் ஒன்றிய சேர்மன் பதவி: திமுக-வில் இரு தரப்பினர் இடையே போட்டி - மறைமுகத் தேர்தல் ஒத்திவைப்பு

அதைப்போலவே ஒலக்கூர் ஒன்றியத்திலும் நடைபெற்றுள்ள மற்றொரு சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பேசுபொருளாகியுள்ளது.

ஒலக்கூர் ஒன்றியத்தில் மொத்தம் 16 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் (ஒன்றிய கவுன்சிலர்கள்) வெற்றி பெற்றுள்ளனர். அதில் திமுக - 7, அதிமுக - 3, பாமக -2, சுயேச்சை - 4 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. இங்கு ஒன்றிய சேர்மன் பதவியை பிடிப்பதற்கு 9 ஒன்றிய கவுன்சிலர்களின் ஆதரவு தேவை. ஆனால் திமுக 7 இடங்களை மட்டுமே கைப்பற்றியிருந்தது. இதனால், சுயேச்சை அல்லது மாற்றுக் கட்சியைச் சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர்களின் ஆதரவு திமுக-வுக்குத் தேவையாக இருந்தது. இதனால் இங்கு சுயேச்சை வேட்பாளர்களுக்கான மவுசு கூடியிருந்தது. இது தொடர்பாகவும், சுயேச்சை வேட்பாளர்கள் வென்றது எப்படி என்றும், 13.10.2021 அன்று நமது விகடன் தளத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தோம். அதன் லிங்க் கீழே!

உள்ளாட்சித் தேர்தல்: சீட்-க்கு 'நோ' சொன்ன திமுக! - சுயேட்சையாக வென்று செக் வைத்த நபர்

ஒலக்கூர் ஒன்றிய சேர்மன் பதவியை பிடிப்பதற்கு... திமுக தரப்பில், அப்பகுதி கிழக்கு ஒன்றியச் செயலாளர் சொக்கலிங்கம் முயன்று வந்தார். சுயேச்சை, அதிமுக, பாமக ஆகிய ஒன்றிய கவுன்சிலர்களை கவர்ந்து எழிலரசன் (சுயேச்சை) என்பவர் எதிர்த்து போட்டியிட்டிருக்கிறார். மறைமுகத் தேர்தலுக்காக நேற்று (22.10.2021) காலை பணிகள் விறுவிறுப்பு அடைந்துவந்த நிலையில், குறைவான ஒன்றிய கவுன்சிலர்கள் மட்டுமே வந்திருந்தனராம். ராகுகாலத்தைக் காரணம் காட்டி, அதன் பின்னரே ஒரு சில கவுன்சிலர்கள் வந்தனராம். இறுதியாக 15 ஒன்றிய கவுன்சிலர்கள் வந்து சேர்ந்துள்ளனர்.

சாலைமறியல்
சாலைமறியல்

அந்த இடைப்பட்ட நேரத்தில், தான் பெரும்பான்மை இன்றி இருந்ததால் தன் ஆதரவாளர்களைத் தாண்டி சிலரிடம் ஆதரவு கோரி பேச்சுவார்த்தை நடத்தினார் சொக்கலிங்கம் என்ற தகவல் பரவியது. இருப்பினும், தேர்தல் சுமார் 12 மணிக்கு மேல்தான் நடத்தப்பட்டதாம். சொக்கலிங்கத்துக்கு 8 ஒன்றிய கவுன்சிலர்களும்; எழிலரசனுக்கு 7 ஒன்றிய கவுன்சிலர்களும் வாக்களித்தனராம். தேர்தல் முடிவில், 8 வாக்குகளைப் பெற்ற திமுக வேட்பாளர் சொக்கலிங்கம் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போதுதான் சுயேச்சை ஒன்றிய கவுன்சிலர் ஒருவர் தாமதமாக வந்திருக்கிறார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவரும் திமுக சார்பில் போட்டியிட சீட் கேட்டு கிடைக்காததால் சுயேச்சையாக நின்று வெற்றிபெற்றவராம். அதனால், அவரது வாக்கு தனக்கே கிடைக்கும் என நம்பியதாம் எழிலரசன் தரப்பு. அப்படி அந்த நபர் வாக்களிக்கும் பட்சத்தில் இரு தரப்பும் சமநிலை அடைந்து, குலுக்கல் சீட்டு முறைக்குச் சென்றிருக்கும். அதனால், அவரையும் வாக்களிக்க அனுமதிக்க கோரி எழிலரசன் தரப்பு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு திமுக தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், தேர்தல் அதிகாரியோ அந்த நபரை வாக்களிக்க அனுமதிக்க மறுத்துவிட்டாராம். இதனால் ஆத்திரம் அடைந்த எழிலரசன் தரப்பு, "பெறும்பான்மைக்கு 9 நபர்களின் ஆதரவு வேண்டும் என கூறப்பட்ட நிலையில், ஒரு ஒன்றிய கவுன்சிலரை வாக்களிக்க அனுமதிக்காதது ஏன்? தேர்தல் தாமதமாகத் தொடங்கியபோதும் நாங்கள் அமைதியாகத்தானே இருந்தோம்... ஏன் அவரை வாக்களிக்க அனுமதிக்கவில்லை. 8 வாக்குகள் பெற்றவரை எப்படி வெற்றிபெற்றதாக அறிவித்தீர்கள்? தேர்தலை முறையாக நடத்த வேண்டும்" என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

காவல்துறை தடியடி
காவல்துறை தடியடி

இதற்கிடையே சுயேச்சை வேட்பாளர் எழிலரசன் தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டதால், தேர்தலை முறையாக நடத்தக் கோரி 100-க்கும் மேற்பட்டோர் திண்டிவனம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் சாலைமறியல் சென்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஈச்சேரியைச் சேர்ந்த நபர் ஒருவர் தீடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். அவர்மீது தண்ணீரை ஊற்றி காவல்துறையினர் அவரை அப்புறப்படுத்தினர். இதைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள், சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அப்போதும் நிலைமை கட்டுக்குள் வராததால் காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்துள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியுள்ளது.

அதேபோல, கண்டமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பஞ்சமாதேவி ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நேற்று நடைபெற்றுள்ளது. இந்த ஊராட்சியில் உள்ள வார்டுகளில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 9 வார்டு உறுப்பினர்கள், இந்தத் தேர்தலில் வாக்களித்துள்ளனர். "பஞ்சாயத்து தலைவர் வாக்கு உட்பட 6 வாக்குகளை நான் பெற்ற நிலையிலும், 4 வாக்குகளை மட்டுமே பெற்ற ஆளுங்கட்சி வேட்பாளர் ராஜேஸ்வரி வெற்றிபெற்றதாக தேர்தல் அதிகாரி பொய்யாக அறித்துவிட்டார். அதற்கு, காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஒருதலைபட்சமாக செயல்பட்டு உதவியாக இருந்தார்" என்று கூறி தமிழ்வாணன் என்ற வேட்பாளர் தனது ஆதரவாளர்களான வார்டு உறுப்பினர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நேற்று மதியம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். சுமார் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக இந்தப் போராட்டம் நீண்டிருக்கிறது.

ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட தமிழ்வாணன் தரப்பு
ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட தமிழ்வாணன் தரப்பு
தே.சிலம்பரசன்

இதே போன்ற, துணைத் தலைவர் தேர்வு செய்யும் பிரச்னையை முன்னிறுத்தி எறையூர், உப்புவேலூர் பஞ்சாயத்தைச் சேர்ந்த ஒரு தரப்பினர் வானூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக, தமிழ்வாணனிடம் பேசினோம். ``மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்துப் பேசினோம். எங்கள் பகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் கலந்தாலோசித்துவிட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார்" என்றார்.

மறைமுகத் தேர்தல் வெற்றி நிலவரம் - விழுப்புரம்.

மாவட்ட ஊராட்சித் தலைவர் - ஜெயசந்திரன் (திமுக)

மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் - ஷீலாதேவி சேரன் (விசிக)

12 ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் - (அனைத்தும் திமுக)

ஒலக்கூர் - கோ.சொக்கலிங்கம்

கண்டமங்கலம் - ஆர்.எஸ்.வாசன்

கானை - நா.கலைச்செல்வி

கோலியனூர் - ஏ.சச்சிதானந்தம்

செஞ்சி - ர.விஜயகுமார்

திருவெண்ணெய்நல்லூர் - கு.ஓம்சிவசக்திவேல்

மயிலம் - ம.யோகேஸ்வரி

முகையூர் - உ.தனலட்சுமி

மேல்மலையனூர் - நெ.கண்மணி

வல்லம் - ர.அமுதா

வானூர் - செ.உஷா

விக்கிரவாண்டி - ர.சங்கீதா அரசி.

12 ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர்கள் - (அனைத்தும் திமுக)

ஒலக்கூர் - அ.இராஜாராம்

கண்டமங்கலம் - த.நஜீரா பேகம்

கானை - த.வீரராகவன்

கோளியனூர் - க.உதயகுமார்

செஞ்சி - வ.ஜெயபாலன்

திருவெண்ணெய்நல்லூர் - நி.கோமதி

மயிலம் - ரா.புனிதா

முகையூர் - ப.மணிவண்ணன்

மேல்மலையனூர் - மு.விஜயலட்சுமி

வல்லம் - அ.மலர்விழி

வானூர் - வி.பருவ கீர்த்தனா

விக்கிரவாண்டி - ர.ஜீவிதா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு