டெல்லி, மும்பையிலிருக்கும் பிபிசி ஊடக நிறுவத்தின் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் கடந்த மூன்று நாள்களாக சோதனை மேற்கொண்டனர். இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்தும், ஊடக அமைப்புகள் தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்தன.

இருப்பினும், ``இது ஆய்வுதான், ரெய்டு அல்ல" என்று வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பிபிசி அலுவலகங்களில் மூன்று நாள்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு குறித்த விளக்கத்தை வருமான வரித்துறை அறிக்கையாக வெளியிட்டிருக்கிறது.
அதில், ``ஆங்கிலம் தவிர்த்து பிற மொழிகளில் பிபிசி-யின் செயல்பாடுகளும், அதற்குக் கிடைத்த வருவாய் அளவும் ஒத்துப்போகவில்லை. ஊழியர் அல்லாதோரிடமிருந்து பெறப்பட்ட சேவைகளுக்காகச் செலவழித்த பணம் சம்பந்தப்பட்ட வெளிநாட்டு நிறுவனத்துக்கு இந்திய நிறுவனத்தால் திருப்பிச் செலுத்தப்பட்டது.

அத்தகைய பணம் செலுத்துதல் முறையும் வரி செலுத்தலுக்கு உட்பட்டது. ஆனால், அவ்வாறு செய்யப்படவில்லை. பரிமாற்ற விலை ஆவணங்கள் தொடர்பாகப் பல முரண்பாடுகள் இருக்கின்றன. மேலும், பிபிசி ஊழியர்கள் கூறியதிலிருந்தும், டிஜிட்டல் தரவுகளிலிருந்தும், ஆவணங்களிலிருந்தும் பல முக்கிய ஆதாரங்களைக் கைப்பற்றியிருக்கிறோம். அவை சரியான நேரத்தில் மேலும் ஆய்வுசெய்யப்படும்" என்று கூறப்பட்டிருக்கிறது.