Published:Updated:

வி.பி.சிங் முதல் யோகி ஆதித்யநாத் வரை... வித்தியாசமான சட்டத்தால் மக்கள் பணத்தில் வரி கட்டிய ருசிகரம்!

உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சருக்கு மாதச் சம்பளம் ரூ. 1,000 வழங்கப்பட்டுள்ளது. துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு ரூ. 650 சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.

V.P.Singh
V.P.Singh

பல வித்தியாசமான கூத்துகள் அரங்கேறும் மாநிலம் உத்தரப்பிரதேசம். இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசம்தான், மத்திய அரசு அமைவதையும் தீர்மானிக்கும் இடத்தில் உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் மாயாவதி முதல்வராக இருந்தபோது, அரசு செலவில் தன் கட்சி சின்னமான யானைக்குச் சிலைவைத்து அழகு பார்த்த விஷயம் அனைவருக்கும் தெரியும். ஆனால், கடந்த 40 ஆண்டுகளாக உத்தரப்பிரதேச முதல்வர்கள், அமைச்சர்களின் வருமானவரியை மக்கள் பணத்திலிருந்தே செலுத்தி வந்துள்ள அதிர்ச்சித் தகவல் நேற்று வெளியாகியுள்ளது.

Yogi Adityanath
Yogi Adityanath

கடந்த 1981-ம் ஆண்டு வி.பி.சிங், உத்தரப்பிரதேச மாநில முதல்வராக இருந்தபோது, இப்படியொரு சட்டத்தை இயற்றியுள்ளார். அப்போது, உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சருக்கு மாதச் சம்பளம் ரூ.1,000 வழங்கப்பட்டுள்ளது. துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு ரூ. 650 சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் பெரும்பாலான அமைச்சர்கள், பொருளாதாரரீதியாகப் பின்தங்கியிருந்ததால், இத்தகைய சட்டம் இயற்றப்பட்டதாக அப்போது வி.பி.சிங் காரணம் சொன்னார். இந்தச் சட்டத்தின்படி, உத்தரப்பிரதேச முதல்வர்கள், அமைச்சர்கள் எல்லோருக்கும் அரசுக் கருவூலத்திலிருந்தே வரி செலுத்தப்பட்டு வந்துள்ளது.

தற்போது, உத்தரப்பிரதேச முதலமைச்சரின் சம்பளம் மாதம் ரூ.40,000 ஆகும். அமைச்சர்களுக்கு ரூ. 35,000 சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த நிதியாண்டில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அமைச்சரவையில் இடம்பெற்றவர்களின் வருமான வரியாக 86 லட்ச ரூபாய் அரசுக் கருவூலத்திலிருந்து செலுத்தப்பட்டுள்ளது. முதலமைச்சர், அமைச்சர்களுக்கு மக்கள் பணத்திலிருந்து இருந்து வரி கட்டும் தகவல் வெளியானதும், கடும் விமர்சனம் எழுந்தது. ஆனால், உத்தரப்பிரதேச மாநில அமைச்சர்கள் தங்களுக்கு இப்படியொரு சட்டம் இருப்பதே தெரியாது என்றும் கூறி வருகின்றனர்.

Tax
Tax

அம்மாநில முன்னாள் முதல்வர்கள் மாயாவதி, முலாயம் சிங், அகிலேஷ் யாதவ் ஆட்சிக் காலத்தில் அமைச்சர்களாக இருந்தவர்களும், தங்களுக்கு இந்தச் சட்டம் குறித்துத் தெரியாது என்றே தெரிவிக்கின்றனர். இந்தச் சட்டத்தின்படி ,வி.பி.சிங், முலாயம் சிங், அகிலேஷ் யாதவ், மாயாவதி, கல்யாண் சிங், ராம் பிரகாஷ் குப்தா, ராஜ்நாத் சிங், வீர் பகதுர் சிங், என்.டி.திவாரி, யோகி ஆதித்யநாத் வரை பலன் அடைந்துள்ளனர். இந்தச் சட்டம் இயற்றப்பட்டதிலிருந்து உத்தரப்பிரதேச மாநிலத்தில் 19 முதலமைச்சர்கள் பதவி வகித்துள்ளனர். மேலும், 1,000-க்கும் மேற்பட்டவர்கள் அமைச்சர்களாகப் பணியாற்றியுள்ளனர்.

விமர்சனம் எழுந்ததால், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், அமைச்சரவைக் கூட்டத்தை நேற்று கூட்டினார். கூட்டத்தில், ’இனிமேல் முதலமைச்சர்கள், அமைச்சர்கள் தங்கள் வருமானவரியைத் தாங்களே செலுத்திக்கொள்ள வேண்டும்’ என்று அறிவுறுத்தப்பட்டது. அதோடு, அந்தச் சட்டத்தை ரத்து செய்யவும் முடிவு செய்யப்பட்டது. உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வர் மாயாவதிக்கு, ரூ.111 கோடி மதிப்பில் சொத்துகள் இருக்கின்றன. இவர், ஆட்சியிலிருந்த காலத்தில் ஒருமுறைகூட வரி செலுத்தியதில்லை.

Rajnath Singh
Rajnath Singh

அகிலேஷ் யாதவ்க்கு 37 கோடி ரூபாய்க்குச் சொத்து உள்ளது. இவரும், ஆட்சியிலிருந்த காலத்தில் வரி செலுத்தியதில்லை. தற்போதைய முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் கடந்த ஆண்டுவரை வருமான வரி செலுத்தவில்லை. தற்போது, உத்தரப்பிரதேச அமைச்சர்களாக 44 பேர் இருக்கின்றனர். அதில், 35 பேர் கோடீஸ்வரர்கள். கடந்த 2017-ம் ஆண்டு உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றவர்களில் 80 சதவிகித பேர் பெரும் பணக்கார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மக்கள் நிலைதான் எப்போதுமே பரிதாபம்!