Published:Updated:

ஐ.டி ரெய்டு: ``தவறுகளைச் சுட்டிக்காட்டினால், சரிசெய்துகொள்ளத் தயாராக இருக்கிறோம்” - செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி, வருமான வரித்துறை

சோதனையின்போது அவர்கள் என்ன ஆவணத்தைக் கேட்டாலும், எத்தனை நாள் சோதனை செய்தாலும், அதற்கான முழு ஒத்துழைப்பு வழங்கச் சோதனைக்கு உள்ளானவர்கள் தயாராக இருக்கிறார்கள்.

Published:Updated:

ஐ.டி ரெய்டு: ``தவறுகளைச் சுட்டிக்காட்டினால், சரிசெய்துகொள்ளத் தயாராக இருக்கிறோம்” - செந்தில் பாலாஜி

சோதனையின்போது அவர்கள் என்ன ஆவணத்தைக் கேட்டாலும், எத்தனை நாள் சோதனை செய்தாலும், அதற்கான முழு ஒத்துழைப்பு வழங்கச் சோதனைக்கு உள்ளானவர்கள் தயாராக இருக்கிறார்கள்.

செந்தில் பாலாஜி, வருமான வரித்துறை

தி.மு.க-வின் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் எனக் கருதப்படுபவர்களின் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்திவருகின்றனர். சென்னை, கரூர், கோவை உட்பட பல இடங்களில் சோதனை நடந்துவருகிறது. இதில் கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்ளச் சென்றபோது, செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் அதிகாரிகளைச் சூழ்ந்து, முடக்கி அவர்களின் வாகனத்தைச் சேதப்படுத்திய விவகாரம் சர்ச்சையானது.

Senthil Balaji - செந்தில் பாலாஜி - ஐ.டி ரெய்டு
Senthil Balaji - செந்தில் பாலாஜி - ஐ.டி ரெய்டு

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச்  சந்தித்துப் பேசினார். அப்போது, "இது போன்ற வருமான வரித்துறை சோதனை எங்களுக்குப் புதிதல்ல. ஏற்கெனவே சட்டமன்றத் தேர்தலின் இறுதி நாள்களின்போது வருமான வரித்துறை அதிகாரிகள், `நான் அவசியம் நேரில் வர வேண்டும்' எனக் கட்டாயப்படுத்தினார்கள். ஆனால் நான், `இப்போது தேர்தல் பிரசாரம் நடந்துகொண்டிருக்கிறது. அது முடிந்த பிறகு என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள்.

முடிந்தால் என் வீடுகளுக்குச் சீல் வைத்தாலும் சரி, அல்லது வீட்டில் என் பெற்றோருக்கு முன்பாக வீட்டைச் சோதனை செய்துவிட்டு, என்னுடைய பெற்றோரிடம் கையொப்பம் பெற்றுக்கொள்ளுங்கள். எனது வீட்டில் எதைக் கைப்பற்றுகிறீர்களோ அதற்கான விளக்கத்தைத் தேர்தலுக்குப் பிறகு நானே வந்து சொல்வதற்குத் தயாராக இருக்கிறேன்' எனக் கூறினேன்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

எனவே, இது போன்ற வருமான வரித்துறை சோதனையை ஏற்கெனவே எதிர்கொண்டிருக்கிறோம். இன்று நடைபெறும் வருமான வரித்துறை சோதனை என் சகோதரர்கள், அவர்களின் உறவினர்கள், அவர்களின் நண்பர்கள் எனச் சங்கிலித் தொடர்போல நடத்திவருகிறார்கள். இதில் சிறப்பு என்னவென்றால் எல்லோரும் வருமான வரி கட்டிக்கொண்டிருப்பவர்களேயன்றி, ஏமாற்றக்கூடியவர்களல்ல.

அதிகாரிகள் சோதனையின்போது விரும்பத்தகாத செயல்கள் நடந்ததை அறிந்து, உடனே கரூருக்கு செல்போனில் தொடர்புகொண்டு, நிர்வாகிகள் யாரும் அங்கு இருக்கக் கூடாது. அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டேன். உடனே நிர்வாகிகளும் அங்கிருந்து சென்றுவிட்டார்கள். சோதனையின்போது அவர்கள் என்ன ஆவணத்தைக் கேட்டாலும், எத்தனை நாள் சோதனை செய்தாலும், அதற்கான முழு ஒத்துழைப்பு வழங்கச் சோதனைக்கு உள்ளானவர்கள் தயாராக இருக்கிறார்கள்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

எனவே, முழு சோதனைக்குப் பிறகு அவர்கள் முன்வைக்கும் அறிக்கைக்குப் பிறகு எனது கருத்துகளைத் தெரிவிப்பது சரியாக இருக்கும் எனக் கருதுகிறேன். வருமான வரித்துறை அதிகாரிகள் வீட்டின் கதவைத் தட்டாமல், சுவர் ஏறிக் குதித்து உள்ளே நுழைந்திருக்கிறார்கள். அதன் காரணமாகவே அவர்கள் மீதான கோபத்தின் வெளிப்பாடாய் இருக்கலாம். இந்தத் தாக்குதல் குறித்து காவல்துறை வழக்கு பதிந்திருக்கிறது.

இதே வருமான வரித்துறை சோதனைக்கு வந்தபோது நிர்வாகிகளுக்கு உணவு வழங்கி, குளிர்பானம் வழங்கி, பந்தல் போட்டு அவர்களை அங்கேயே இருக்க வைத்தவர்களை உங்களுக்குத் தெரியும். ஆனால், நாங்கள் இந்தச் சோதனையை நேர்மையாக எதிர்கொள்ள நிர்வாகிகளை அங்கிருந்து வெளியேறக் கூறிவிட்டோம். இதிலிருந்தே யார் நேர்மையாக இதை எதிர்கொள்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். 1996-ம் ஆண்டு ஒன்றியக் குழு வேட்பாளராக வெற்றிபெற்று அரசியலுக்கு வந்தவன்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

26 ஆண்டுகள் இந்த அரசியலில் இருக்கிறேன். என்மீதான நம்பிக்கையில் அமைச்சரவையில் எனக்குப் பொறுப்பு வழங்கியிருக்கிறார் முதல்வர். எனவே இந்தச் சோதனையில், யார் தவறு செய்திருந்தாலும், அவர்கள்மீது உரிய நடவடிக்கையை வருமான வரித்துறை எடுத்துக்கொள்ளட்டும். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், `வீட்டு காலிங் பெல் அடித்தவுடன் கதவைத் திறக்கவில்லை' எனச் சுவர் ஏறிக் குதிக்கும் விரும்பத்தாகாத செயலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

2006 நான் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட முதல் தேர்தல். அப்போது வேட்புமனுவில் நான் என்ன தாக்கல் செய்தேனோ அதிலிருந்து ஒரு சொத்தை நான் விற்பனை செய்திருக்கிறேன். அப்போது முதல் இன்றுவரை நானோ எனது குடும்ப உறுப்பினர்களோ சொத்து என எதையும் வாங்கவில்லை, யாருடைய பெயரிலும் சொத்துகளைப் பதிவுசெய்யவில்லை. அது போன்ற நடவடிக்கையில் எப்போதும் ஈடுபட மாட்டோம்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

சமீபத்தில் வீடு கட்டுவதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வெளியானது. அது என் சகோதரனின் மாமியார், அவரின் மகளுக்கு சில சொத்துகளை அன்பளிப்பாக வழங்கினார். அந்த இடத்தில்தான் வீடு கட்டிக்கொண்டிருக்கிறார்கள். மக்களின் அங்கீகாரம், முதல்வரின் அங்கீகாரம் ஆகியவையே போதும். இந்தச் சோதனையில், வருமான வரித்துறை என்ன தவறுகளைச் சுட்டிக்காட்டினாலும், அதைச் சரிசெய்துகொள்வதற்கும் தயாராக இருக்கிறோம்" எனத் தெரிவித்திருக்கிறார்.