Published:Updated:

`தரக்கட்டுப்பாட்டுத்துறை டு வருமானவரித்துறை..!'- கொசுவலை நிறுவனம் மூலம் செந்தில் பாலாஜிக்கு செக்?

கணக்கில் காட்டப்படாத 32 கோடி
கணக்கில் காட்டப்படாத 32 கோடி ( நா.ராஜமுருகன் )

கரூர் தொழிலதிபர் சிவசாமி வீடு மற்றும் கம்பெனிகளில் நடைபெற்ற நான்கு நாள் சோதனையில் கணக்கில் காட்டாத ரூ.32 கோடி ரொக்கம், வரி ஏய்ப்புச் செய்த ரூ.435 கோடி சொத்துக்களுக்கான ஆவணங்கள், 10 கிலோ தங்கம் என்று அதிகாரிகள் வசம் சிக்க, விவகாரம் விறுவிறுப்பாகி இருக்கிறது.

`செந்தில் பாலாஜிக்கு கிலி ஏற்படுத்தத்தான் இந்த ரெய்டு' என்று கிளம்பி இருக்கும் தகவலால், ரெய்டு விவகாரம் இன்னும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.

வருமானவரித்துறை ரெய்டு
வருமானவரித்துறை ரெய்டு
நா.ராஜமுருகன்

கரூர், ராம் நகரைச் சேர்ந்தவர், சிவசாமி. இவர் கரூர் வெண்ணைமலைப் பகுதியில் ஷோபிகா இம்பெக்ஸ் என்ற கொசுவலை தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி நிறுவனத்தை நடத்தி வருகிறார். வருடத்துக்கு ரூ.600 கோடி வரை வருமானம் பார்க்கும் இந்த கம்பெனிக்கு, நரிக்கட்டியூர் தொழிற்பேட்டை, கரூர்-சேலம் பைபாஸில் உள்ள சிட்கோ, சின்னதாராபுரம் சாலை உள்ளிட்ட பல இடங்களில் கிளை நிறுவனங்களும் உள்ளன.

தவிர, சிவசாமி காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் தொழிலையையும் செய்துவருகிறார். மதுரை, கோவை மற்றும் இதர மாநிலங்களிலும் இவரது கம்பெனிக்குக் கிளைகள் உள்ளன. இங்கே தயாரிக்கப்படும் கொசுவலைகள் ஆப்பிரிக்கா, தாய்லாந்து, சீனா, மலேசியா, இலங்கை மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த நிறுவனத்தில் ஆயிரக்கணக்கானோர் பணிபுரிந்து வருகின்றனர்.

சிவசாமி
சிவசாமி

இந்த நிறுவனம் கடந்த 2017 ம் ஆண்டு மத்திய அரசின் `எக்ஸ்போர்ட் எக்ஸலன்ஸ்' என்ற விருதைப் பெற்றது. அதோடு, சமீபத்தில் நடைபெற்ற அம்பானி வீட்டுத் திருமணத்தில் கரூர் சார்பில் கலந்துகொண்ட ஒரே தொழிலதிபர், சிவசாமிதான். இப்படி அசுர வளர்ச்சிக் கண்ட இந்த நிறுவனத்தையும் அதன் உரிமையாளர் சிவசாமியையும் கடந்த நான்கு நாள்களாக நடைபெற்ற வருமான வரித்துறை ரெய்டு, ஆடிப்போகச் செய்திருக்கிறது.

மத்திய அரசு விருது; ரூ.435 கோடி வரிஏய்ப்பு; அலமாரியில் குவிக்கப்பட்ட பணம்!’-யார் இந்த கரூர் சிவசாமி?

ஷோபிகா இம்பெக்ஸ் நிறுவனம் தொடர்ந்து வரிஏய்ப்பில் ஈடுப்பட்டு வருவதாக வருமானவரித்துறைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, இந்த நிறுவனத்தின் கணக்குகளை வருமானவரித்துறை அதிகாரிகள் ஆய்வுசெய்தபோது, சிவசாமி வரிஏய்ப்பில் ஈடுபட்டு வருவது உண்மை என்று கண்டறிந்தனர். இதனால், கடந்த 15 ம் தேதி கரூர், கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 80 -க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள், ஷோபிகா இம்பெக்ஸ் கம்பெனிக்கு உட்பட்ட அத்தனை இடங்களிலும் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். வெளிஆட்கள் மூலம் சோதனைக்கு இடைஞ்சல் வரக்கூடாது என்பதற்காக, பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. உள்ளே இரவு பகலாக ஆவணங்களை ஆய்வுசெய்தனர். அப்போது, ராம் நகர் பகுதியில் உள்ள சிவசாமியின் வீட்டில் இருந்த துணிகள் அடுக்கிவைக்கும் அலமாரியில் கட்டுக்கட்டாக ரூ.2000 மற்றும் ரூ.500 தாள் கட்டுகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

மத்திய அரசின் விருது பெறும் சிவசாமி
மத்திய அரசின் விருது பெறும் சிவசாமி

அதை எண்ணியதில், ரூ.32 கோடி இருந்தது தெரியவந்தது. இதைக் கணக்கில் காட்டப்படாத பணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து, 18 -ம் தேதி மதியம் வரை அதிகாரிகள் தொடர்சோதனை மேற்கொண்டனர். சோதனையின் முடிவில், கணக்கில் காட்டாத ரூ.32 கோடி, கணக்கில் வராத ரூ.435 கோடி சொத்துகளுக்கான ஆவணங்கள், 10 கிலோ தங்கம் உள்ளிட்டவற்றைக் கைப்பற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், திருச்சி மண்டல வருமானவரித்துறை அலுவலகத்துக்கு வந்து விசாரணையில் ஆஜராகும்படி சிவசாமிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், ``இந்த அதிரடி ரெய்டே செந்தில் பாலாஜிக்குக் கடிவாளம் போடத்தான்" என்று ஒருதரப்பு கிசுகிசுக்கிறது. நம்மிடம் அதுசம்பந்தமாகப் பேசிய, விஷயம் தெரிந்த சிலர், ``கரூர் மாவட்டத்தைப் பொறுத்தமட்டில், அரசியலில், தேர்தலில், கட்சி வளர்ப்பதில் செந்தில் பாலாஜிதான் ஸ்பீடாக இருக்கிறார். அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற இடைதேர்தலிலும், செந்தில் பாலாஜியே ஜெயித்தார். அதனால், செந்தில் பாலாஜியை முடக்க ஆளுங்கட்சி தரப்பு பல்வேறு உபாயங்களைக் கையாண்டு வருகிறது. ஒரு வருடத்துக்கு முன்பு செந்தில் பாலாஜியின் நண்பர்கள், உறவினர்கள் வீடுகள், கம்பெனிகள் என்று 9 பேருடைய இடங்களில் வருமானவரித்துறையினர் ரெய்டு நடத்தினர். ஆனால், அதில் சொல்லிக்கொள்ளும்படி கிடுக்கிப்பிடி அதிகாரிகளுக்குச் சிக்கவில்லை. இந்நிலையில், பத்து நாள்களுக்கு முன்பு செந்தில் பாலாஜியின் உதவியாளர் சுப்பிரமணி அவரோடு அண்ணனோடு சேர்ந்து நடத்தி வரும் கொசுவலை கம்பெனியில் மதுரையைச் சேர்ந்த சுங்க மற்றும் தரக்கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதில் தரமாக கொசுவலை தயாரிக்கப்படுகிறதா, முறையாக அனுமதி வாங்கப்பட்டுள்ளதா என்று அதிகாரிகள் தீவிர சோதனையை மேற்கொண்டனர். கொசுவலை தரத்தை சோதனை செய்ய மாதிரியையும் எடுத்துச் சென்றனர்.

வருமானவரித்துறை ரெய்டு
வருமானவரித்துறை ரெய்டு
நா.ராஜமுருகன்

இந்நிலையில்தான், சிவசாமிக்குச் சொந்தமான ஷோபிகா இம்பெக்ஸ் கொசுவலை உற்பத்தி மற்றும் எற்றுமதி நிறுவனத்தில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனையை மேற்கொண்டுள்ளனர். சிவசாமி நேரடியாக எந்தக் கட்சியிலும் இல்லை. ஆனா, அவர் செந்தில் பாலாஜிக்கு வேண்டியவர் என்று சொல்கிறார்கள். செந்தில் பாலாஜியின் உதவியாளர் சுப்பிரமணி தான் நடத்தும் கொசுவலை கம்பெனிக்கான ஜாப் ஒர்க்கை, சிவசாமியின் ஷோபிகா இம்பெக்ஸ் கம்பெனியில் பெற்றுச் செய்ததாகச் சொல்கிறார்கள். அதனால், கரூர் மாவட்ட ஆளுங்கட்சி புள்ளி, வருமானவரித்துறையினரை ஏவிவிட்டு, ஷோபிகா இம்பெக்ஸ் கொசுவலை கம்பெனியில் சோதனைபோட வைத்தனர். ஆனா, ரூ.32 கோடி பணம், ரூ.435 கோடி மதிப்பிலான சொத்துக்கான ஆவணங்கள், 10 கிலோ தங்கம் என்று ரெய்டில் பெரும் திமிங்கலமே சிக்கும் என்று ஆளுங்கட்சி புள்ளியும் நினைக்கலை; ரெய்டு செய்த அதிகாரிகளும் நினைக்கவில்லை. இதைவைத்து, செந்தில் பாலாஜிக்குப் பெரும் நெருக்கடி கொடுக்கலாம்னு அந்த ஆளுங்கட்சி புள்ளி கணக்குப்போட்டிருக்கிறார்" என்றார்கள்.

இதுசம்பந்தமாக, செந்தில் பாலாஜியிடம் பேச முயன்றோம். அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரது ஆதரவாளர்கள் சிலரிடம் பேசியபோது,

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி
நா.ராஜமுருகன்

``சிவசாமிக்கும் செந்தில் பாலாஜிக்கும் துளியும் சம்பந்தமில்லை. ஆனால், இயல்பாக நடக்கும் ரெய்டை வைத்து, செந்தில் பாலாஜியோடு முடிச்சுப்போட்டு, கட்டுக்கதைகளைக் கட்டிவிடுகிறார்கள், கரூர் மாவட்ட ஆளுங்கட்சியினர். ஆனால், செந்தில் பாலாஜியை டச்கூட பண்ணமுடியாது" என்றார்கள்.

அடுத்த கட்டுரைக்கு