அலசல்
Published:Updated:

புதைக்க முடியாத உண்மை! - முனைவர் ரவிக்குமார் எம்.பி

மோடி
பிரீமியம் ஸ்டோரி
News
மோடி

‘அரசு நிறுவனங்கள் கட்சியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும். அடங்கி நடக்கும் குடிமகன்களை உருவாக்க, குடும்பம் என்ற நிறுவனம் பயன்படுத்தப்படும்

டெல்லியிலும் மும்பையிலும் பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் ‘சர்வே’ மேற்கொண்டது கருத்துச் சுதந்திரம் பற்றிய விவாதத்தை எழுப்பியிருக்கிறது. உலகின் முன்னணிப் பத்திரிகைகள் இதை விமர்சித்திருக்கின்றன. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளன.

புதைக்க முடியாத உண்மை! - முனைவர் ரவிக்குமார் எம்.பி

பிரதமர் மோடி குஜராத்தின் முதலமைச்சராக இருந்தபோது, அங்கு ஏற்பட்ட கலவரம் குறித்து அண்மையில் பிபிசி இரண்டு பாகங்களைக் கொண்ட ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது. ‘அந்தப் படத்தின் இணைப்பைச் சமூக ஊடகங்களிலிருந்து நீக்க வேண்டும்’ என்று உடனடியாக இந்திய அரசு உத்தரவிட்டது. ட்விட்டர், யூடியூப் ஆகிய இரண்டும் இந்திய அரசின் உத்தரவுக்குப் பணிந்து, அந்த இணைப்புகளை நீக்கின. அதன் பின்னர் ‘பிபிசி ஆவணப் படத்துக்குத் தடைவிதிக்க வேண்டும்’ என்று இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், உச்ச நீதிமன்றம் அந்த வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டது.

இந்த நிலையில்தான் வருமான வரித்துறையின் இந்த ‘சர்வே’ நடத்தப்பட்டிருக்கிறது. இதை `மோடி அரசின் பழிவாங்கும் போக்கு’ என்று குறிப்பிட்டு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. பழிவாங்கும் போக்கு இதில் இருக்கிறதுதான் என்றாலும், தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடி, பிபிசி என்ற ஊடக நிறுவனத்துக்கு எதிராக இதைச் செய்கிறார் என்று பார்ப்பது இந்தப் பிரச்னையைச் சுருக்கிப் பார்ப்பதாகும். அதிகாரத்துவ அரசாக உருமாறிக்கொண்டிருக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு, ஊடகங்களை எவ்வாறு கையாள்கிறது என்பதைப் புரிந்துகொள்ளும் போதுதான் இது பிபிசி-க்கு எதிராக மட்டுமல்ல ஒட்டுமொத்தமாக ஊடக உலகுக்கே விடப்பட்டிருக்கும் சவால் என்பதை நாம் உணர முடியும்.

அதிகாரத்துவ அரசை உருவாக்குவதில் பிரசாரத்துக்கு முக்கியமான பங்கு இருக்கிறது. அதிகாரத்துவ ஆட்சியாளர்கள் தங்களுடைய கருத்தியல் மேலாதிக்கத்தைச் சமூகத்திலும், அரசு நிறுவனங்களிலும் நிலைநாட்டுவதற்குப் பிரசாரத்தைத்தான் முழுமையாக நம்பியிருக்கின்றனர். பாசிசம் குறித்து விரிவான ஆராய்ச்சியை மேற்கொண்ட நிக்கோஸ் பவுலன்ட்சாஸ் என்ற அறிஞர், அதிகாரத்துவ அரசு மூன்று விஷயங்களை முக்கியமாகப் பயன்படுத்தும் எனப் பட்டியல் இட்டிருக்கிறார். ஒன்று – கட்சி; இரண்டாவது - குடும்பம் என்ற அமைப்பு; மூன்றாவது - பிரசார சாதனங்கள்.

‘அரசு நிறுவனங்கள் கட்சியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும். அடங்கி நடக்கும் குடிமகன்களை உருவாக்க, குடும்பம் என்ற நிறுவனம் பயன்படுத்தப்படும். பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சி உள்ளிட்ட தொடர்பு சாதனங்கள் அவற்றின் சுயேச்சைத்தன்மை அகற்றப்பட்டு, வெறும் பிரசாரக் கருவிகளாகச் சுருக்கப்படும்’ எனக் குறிப்பிடும் பவுலன்ட்சாஸ், கல்வியின் முக்கியத்துவத்தை அதிகாரத்துவ அரசு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கும் என்றும் சொல்கிறார். பிரதமராக மோடி அவர்கள் பொறுப்பேற்றதற்குப் பிறகு இந்தியாவில் நடைபெற்றுவரும் மாற்றங்களை உன்னிப்பாக கவனித்தால், பவுலன்ட்சாஸ் குறிப்பிடும் விஷயங்கள் இங்கே எப்படி அரங்கேறிக் கொண்டிருக்கின்றன என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும்.

2002-ல் குஜராத் கலவரம் நடந்த பின்னர் அதைப் பற்றி நேரடியாக விசாரித்து அறிக்கை தருமாறு எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மூன்று மூத்த ஊடகவியலாளர்களை அனுப்பியது. ஆகார் பட்டேல், திலிப் பட்கோங்கர், பி.ஜி.வர்கீஸ் ஆகிய மூவரும் குஜராத்துக்குச் சென்று விசாரித்தனர். அப்போது அங்கு முதலமைச்சராக இருந்த திரு.மோடியையும் சந்தித்தனர். குஜராத்தி மொழி ஊடகங்கள் அந்தக் கலவரத்தில் வகித்த பங்கை அவர்கள் தங்களின் அறிக்கையில் குறிப்பிட்டனர். குஜராத் சமாச்சார், சந்தேஷ் ஆகிய பத்திரிகைகள் எப்படியெல்லாம் வெறுப்பைத் தூண்டி கலவரத்துக்கு வித்திட்டன என்பதை அவர்களது அறிக்கை வெளிப்படுத்தியது.

புதைக்க முடியாத உண்மை! - முனைவர் ரவிக்குமார் எம்.பி

அந்த நேரத்தில் ஆங்கில ஊடகங்கள் அது போன்ற வெறுப்புப் பிரசாரத்தில் இறங்கவில்லை என அந்த அறிக்கை புலப்படுத்தியது. ஆனால், அந்த நிலை இப்போது இல்லை. அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன - டிஜிட்டல் ஊடகத்தின் பெருக்கம், கோவிட் பெருந்தொற்று ஏற்படுத்திய பொருளாதாரச் சேதம்.

ஊடகங்கள் பெரும்பாலும் விளம்பர ஆதரவைத்தான் நம்பியிருக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தமட்டில் ஒன்றிய, மாநில அரசுகள்தான் அதிக அளவில் விளம்பரம் கொடுக்கின்றன.

2017-ம் நிதியாண்டில் விளம்பரத்துக்காக மோடி அரசு சுமார் 1,300 கோடி ரூபாய் செலவிட்டிருந்தது. அதில் 468 கோடி ரூபாய் அச்சு ஊடகங்களில் விளம்பரம் செய்வதற்கென செலவிடப்பட்டிருந்தது. சராசரியாக ஒன்றிய அரசு ஆண்டொன்றுக்கு சுமார் 1,250 கோடி ரூபாய் விளம்பரத்துக்கெனச் செலவிடுகிறது. அதே அளவு தொகை, அரசு நிறுவனங்களால் செலவிடப்படுகிறது.

‘கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய நிதி நெருக்கடி, பெரும்பாலான ஆங்கில ஊடகங்களை அரசாங்கத்திடம் சரணடைய வைத்துவிட்டது. அரசாங்கத்தை விமர்சிக்க வேண்டிய அந்த ஊடகங்கள், தங்களைக் காப்பாற்றுவதற்குச் சிறப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதே அரசாங்கத்திடம் கையேந்தி நிற்கும் நிலை ஏற்பட்டது. அப்போது ஊடக நிறுவனங்கள் எட்டு மாதங்களில் சுமார் 12,500 கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்தன. எனவே, அரசாங்க விளம்பரம் இல்லாவிட்டால் அவை உயிர் வாழ முடியாது என்ற நிலை ஏற்பட்டது’ என்கிறார் ‘பிரைஸ் ஆஃப் தி மோடி இயர்ஸ்’ என்ற நூலின் ஆசிரியர் ஆகார் பட்டேல்.

புதைக்க முடியாத உண்மை! - முனைவர் ரவிக்குமார் எம்.பி

டி.ஆர்.பி-க்காக டெலிவிஷன் சேனல்கள் விவாத நிகழ்ச்சிகளைப் பயன்படுத்த ஆரம்பித்தன. ஒவ்வொரு விவாத நிகழ்ச்சியையும் ஒரு போர்க்களமாக மாற்றுவதன் மூலம் டி.ஆர்.பி-யை உயர்த்திக்கொள்ள முடியும் என்ற நிலைக்கு சேனல்கள் தள்ளப்பட்டுள்ளன. பரபரப்பு மற்றும் உணர்ச்சியைத் தூண்டும் செய்திகளைத் தருவதையே வணிக உத்தியாகப் பின்பற்றிவந்த மாநில மொழி ஊடகங்கள், சமூக ஊடகங்களின் வருகைக்குப் பிறகு கடுமையான நிதி நெருக்கடியைச் சந்திக்க ஆரம்பித்தன. அதனால் அவை அதிகாரத்துவ பரப்புரைப் பணியில் தம்மை மேலும் வலுவாகப் பிணைத்துக்கொண்டன. ஆங்கில ஊடகங்களின் சரணாகதி, டெலிவிஷன் சேனல்களின் டி.ஆர்.பி வெறி, மாநில மொழி ஊடகங்களின் சமரசம் - இவை யாவும் சேர்ந்து வெறுப்புப் பிரசாரத்துக்கு உகந்த சூழலை உருவாக்கிவிட்டன. யார் அதிகமாக வெறுப்பைப் பரப்புகிறாரோ அவரே அதிகம் லாபம் அடைகிறார் என்ற நிலை மோடி அரசுக்கு எல்லாவற்றையும் எளிதாக்கிவிட்டது.

வளைகுடா போரின்போது அமெரிக்க அரசு, ஊடகவியலாளர்களை ராணுவப் படையினரோடு சேர்த்தனுப்பி, அவர்கள் மூலம் அந்த யுத்தத்தை நியாயப்படுத்தும் வேலையைச் செய்தது. அதை ‘எம்படடு ஜர்னலிசம்’ (Embedded journalism) என ஆங்கிலத்தில் அழைத்தார்கள். அதுபோல இன்று இந்தியாவில் அதிகாரத்துவ அரசுக்கு வக்காலத்து வாங்கும் ஊடகங்களை ‘கோடி மீடியா’ என அழைக்கிறார்கள். இந்த ‘கோடி மீடியா’ காலத்தில் ஊடகங்களின் நம்பகத்தன்மை முற்றாகத் தகர்ந்துவிட்டது. ஆனால், இந்தச் சூழலிலும் தமது நம்பகத்தன்மையைக் காப்பாற்றிக்கொண்டிருக்கும் வெகுசில ஊடகங்களில் பிபிசி-யும் ஒன்று.

புதைக்க முடியாத உண்மை! - முனைவர் ரவிக்குமார் எம்.பி

‘இந்தியா: மோடியின் கேள்வி’ குறித்த பிபிசி ஆவணப்படத்தில் நமக்குத் தெரியாத செய்தி என எதுவும் காட்டப்படவில்லை. பிபிசி செய்தியாளராக இருந்த மார்க் டுல்லி, 2007-ம் ஆண்டில் வெளியிட்ட ‘இந்தியாவின் முற்றுப்பெறாத பயணம்’ (இண்டியாஸ் அன் எண்டிங் ஜர்னி) என்ற நூலில் குஜராத் கலவரம் குறித்துப் பின்வருமாறு எழுதியிருக்கிறார்: `வடக்கு குஜராத்தில் ஒரு ரயில் நிலையத்துக்கு வெளியே ஒரு ரயிலை முஸ்லிம்கள் தாக்கியதாகத் தகவல் வெளியானது. ரயிலில் பயணம் செய்தவர்களில் பலர், அயோத்தியில் ஒரு பேரணியிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள். அங்கு சர்ச்சைக்குரிய இடத்தில் கோயிலைக் கட்டத் தவறியதைக் கண்டித்து அவர்கள் போராட்டம் நடத்திவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தனர். ரயிலில் தீ பிடித்துக்கொண்டது. அதில் பயணம் செய்த பலர் இறந்தனர். அந்த ரயிலில் என்ன நடந்தது என்பது இதுவரை சரியாகத் தெரியவில்லை. ஆனால், அதன் பிறகு நடந்தவை தெளிவாக எல்லோருக்கும் தெரியும். மூன்று நாள்கள் கலவரம் தொடர்ந்து நடந்தது. சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பதில் காவல்துறை முற்றிலும் தவறிவிட்டது. அகமதாபாத்திலும், குஜராத்திலுள்ள பிற நகரங்களிலும் முஸ்லிம்களைத் தாக்குவதற்கும், அவர்களின் உடைமைகளைச் சூறையாடுவதற்கும் காவல்துறை அனுமதித்தது. எல்லாம் நடந்த பிறகு முதலமைச்சர் நரேந்திர மோடியோ அதற்கு வருத்தம் தெரிவிப்பதற்குப் பதிலாக, மாநில சட்டசபைக்குத் தேர்தலை அறிவித்து அதில் தெளிவான வகுப்புவாதப் பிரசாரத்தை மேற்கொண்டார்’ - இப்படிக் குறிப்பிடுகிறார் மார்க் டுல்லி.

அச்சில் வெளியான இந்தச் செய்தியை இப்போது காட்சிகளாகக் காட்டியுள்ளனர். தாக்கம் ஏற்படுத்தும் விதத்தில் தொகுத்துக் கொடுக்கும்போது தமக்கு ஏற்கெனவே தெரிந்த செய்திதான் என்றாலும், அதைப் பார்ப்பவர்கள் விழிப்படைகின்றனர். மறந்துபோன கொடுமைகள் அவர்களுக்கு நினைவுக்கு வருகின்றன. அத்தகைய நினைவூட்டல், ஆட்சியாளர்களின் முகமூடிகளுக்கு அப்பாலுள்ள முகங்களை ஊடுருவிப் பார்ப்பதற்குக் கற்றுத்தருகிறது. அதுதான் பிரச்னை.

பிபிசி ஆவணப்படம், புதைத்துவிட்டதாக நினைத்த செய்திகளைக் கிளறிவிடுகிறது. மயானத்தில் சடலத்தை எரித்துவிட்டு வீடு திரும்பும் ஒருவர், வீட்டில் அதே சடலம் கிடத்தப்பட்டிருப்பதைப் பார்த்தால் எப்படித் திகைப்பாரோ அப்படி அவர்கள் திகைக்கின்றனர். உண்மையைப் புதைக்க முடியாது என்பதை அவர்கள் உணரும் காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது.