Published:Updated:

பள்ளி மாணவர்களிடம் அதிகரிக்கும் சாதிய மோதல்கள்... பள்ளிக் கல்வித் துறை என்ன செய்யப் போகிறது?

சாதிக்கயிறு

தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகளில் சாதி சார்ந்த விஷயங்களால் மாணவர்களிடையே பிரச்னை உண்டாவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

பள்ளி மாணவர்களிடம் அதிகரிக்கும் சாதிய மோதல்கள்... பள்ளிக் கல்வித் துறை என்ன செய்யப் போகிறது?

தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகளில் சாதி சார்ந்த விஷயங்களால் மாணவர்களிடையே பிரச்னை உண்டாவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

Published:Updated:
சாதிக்கயிறு

தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் தொடர்பாக சமீபகாலமாக வெளியாகும் செய்திகள் அனைத்தும் அதிர்ச்சியையும் கவலையையும் அளிக்கக் கூடியவை. மாணவர்கள் தங்களுக்குள் மோதிக் கொள்வது, ஆசிரியர்களை அடிக்கப் பாய்வது, வகுப்பறையில், பொதுவெளியில் கட்டுப்பாடில்லாமல் நடந்துகொள்வது என பட்டியல் நீண்ட வேளையில் சாதியப் பிரச்னைகளும் மாணவர்கள் மத்தியில் ஊடுருவியிருப்பதுதான் வேதனையின் உச்சம்.

சமீபத்தில் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே பள்ளக்கால் பொதுக்குடி அரசு மேல்நிலை பள்ளியில் மாணவர் ஒருவர் சக மாணவர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கையில் சாதிக்கயிறு கட்டிக்கொள்வதில் ஏற்பட்ட தகராறுதான் இதற்கான பின்னணியாக இருந்திருக்கிறது. இந்தப் பள்ளி என்றில்லை, தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகளில் சாதி சார்ந்த விஷயங்களால் பிரச்னை உண்டாவது சமீபமாக அதிகரித்து வருகிறது.

பள்ளி மாணவர்கள்
பள்ளி மாணவர்கள்

மாணவர்களின் தற்போதைய அத்துமீறல்களுக்குக் கொரோனா அழுத்தம் உள்ளிட்ட பல விஷயங்கள் காரணமாகச் சொல்லப்பட்டாலும், சாதி சார்ந்த விஷயங்களில் சிக்கியிருக்கும் மாணவர்களை மீட்டெடுக்க வேண்டியது மிக முக்கியமான ஒன்று. மற்ற சிக்கல்களைவிட முதன்மையாகத் தீர்க்கப்பட வேண்டிய பிரச்னையாக இது மாறியிருக்கிறது. பள்ளிப் பருவம், கல்லூரிப் பருவங்களுக்கே உரிய கொண்டாட்டங்களை எல்லாம் சாதி தின்று செறித்துவிடுவதோடு மட்டுமல்லாமல் பல அழிவுகளையும் உண்டாக்கிச் சென்றுவிடும். முதலில் இதுபோன்ற பிரச்னைகள் எழுவதற்கு காரணமாக என்னென்ன விஷயங்கள் இருக்கின்றன, அதற்கான தீர்வுகள் என்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பெயர் வெளியிட விரும்பாத ஆசிரியர்கள் சிலர் இதுகுறித்துப் பேசும்போது,

``பள்ளிகள் சாதி சார்ந்த அடையாளங்களைப் பயன்படுத்துவது பலகாலமாகவே இருந்துவருகிறது. நாம் அதுகுறித்துக் கேட்டால் சாமிக்கயிறு என ஏதாவது காரணம் சொல்லிவிடுவார்கள். மீறி நாம் ஏதாவது கேட்கப் போனால், வீட்டிலிருந்து பெற்றோரைக் கூட்டிவந்து பிரச்னை செய்வார்கள். ஒருசில பெற்றோர் நாம் சொல்வதைப் புரிந்து தங்களின் பிள்ளையின் படிப்புதான் முக்கியம் என சமாதானமாகி பிள்ளைகளையும் கண்டித்துவிட்டு செல்வார்கள். ஒருசிலர் பெற்றோர் நாம் சொல்வதைக் கேட்கமாட்டார்கள். கண்டித்த ஆசிரியரின் சமூகப் பின்னணி குறித்துப் பேசி பிரச்னை செய்யத்தான் பார்ப்பார்கள். பெற்றோர் என்றில்லை. இப்போதைய சூழ்ல்நிலையில் பெரும்பாலான வளரிளம் பருவ மாணவர்கள், தாங்க சாதி சார்ந்த அமைப்புகள், அரசியல் கட்சிகளில் உள்ளவர்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள். அதன் காரணமாக இதுபோன்ற பழக்கங்கங்களுக்கு ஆளாவதோடு அவர்களை அழைத்துவந்து பள்ளிகளிலே பிரச்னையும் செய்வார்கள்.

பள்ளி ஆசிரியர்கள்
பள்ளி ஆசிரியர்கள்

மாணவர்கள் தங்கள் திறமைகளின் வாயிலாக தங்களை அடையாளப்படுவதற்கு மெனக்கெடாமல், சாதி சார்ந்த அடையாளங்களின் மூலமாக தங்களை முன்னிறுத்திக் கொள்கிறார்கள். உண்மையிலேயே இது மிகவும் ஆபத்தான ஒரு போக்கு. பெற்றோர்- ஆசிரியர் - அரசாங்கம் இணைந்தால் மட்டுமே இதுபோன்ற பிரச்னைகளுக்குத் தீர்வு காணமுடியும்'' என்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆசிரியர்களின் கருத்துகள் இப்படியிருக்க, பல பள்ளிகளில் ஆசிரியர்களே சாதி சார்ந்த விஷயங்களில் மாணவர்களைத் தூண்டுவதாக குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார், குழந்தைகள் நலச் செயற்பாட்டாளர் தேவநேயன். அவர் பேசும்போது,

``மாணவர்கள் சாதியை அடையாளப்படுத்தி கயிறுகள் கட்டுவது, டீ சர்ட் போடுவது, கேப் போடுவது போன்றவை மிகவும் ஆபத்தான ஒரு போக்கு. இது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். ஆனால், அவர்களுக்கு ரோல்மாடல்களாக இருக்கவேண்டிய ஆசிரியர்களே அவர்களுக்குக் கொம்பு சீவி விடுபவர்களாக பல பள்ளிகளில் இருப்பதுதான் வேதனையான விஷயம். தன்னுடைய சாதிக்கார மாணவர்களுடன் பேசுவது, சாப்பிடுவது, மற்ற மாணவர்களைத் தனிமைப்படுத்துவது என மாணவர்கள் மத்தியில் ஒரு பிரிவை பல ஆசிரியர்களே உருவாக்குகிறார்கள். அது நிச்சயமாக தடுக்கப்படவேண்டும். ஆசிரியர்களை சொந்த ஊருக்குப் பக்கத்தில் அல்லது அவர்களின் சாதி ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் அல்லாமல் மாற்று பகுதிகளில் பணி நியமனம் செய்யவேண்டும்.

குழந்தை உரிமைகள் செயற்பாட்டாளர் தேவநேயன்
குழந்தை உரிமைகள் செயற்பாட்டாளர் தேவநேயன்

அதற்காக ஆசிரியர்கள் மட்டுமே இதற்குக் காரணம் என்று சொல்லவில்லை, ஒருசில ஆசிரியர்களும் அப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதையும் நான் கவனித்துக் களையெடுக்க வேண்டும். தவிர, பள்ளிகளில் சாதிக்கயிறுகளை தடை செய்வது மட்டுமே இதற்குத் தீர்வாகாது. பிஞ்சு மனங்களில் சாதியத்தைத் தூவுவது மிகப்பெரிய கொடூரம். இதைத் தடுக்க சமூக நல்லிணக்கத்துக்கான நிகழ்வுகள் கிராமங்கள், நகரங்களில் உள்ள பள்ளிகளில் நடக்கவேண்டும். சமூக நல்லிணக்கத்துக்கான மையமாக பள்ளிகள் திகழவேண்டும். அதற்கான முயற்சிகளை அரசு எடுக்கவேண்டும்'' என்கிறார்.

``பள்ளி மாணவர்கள் சாதி மோதல்களில் ஈடுபடுவது வருத்தம் அளிக்கிறது. மாணவர்கள் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடாது. இது மாதிரியான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கும் கட்டாயத்தில் பள்ளிக்கல்வித்துறை உள்ளது'' என்கிற கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்.

இந்தநிலையில், அரசு என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருக்கிறது என்பது குறித்து திமுக தலைமைக் கழக செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் இராஜீவ் காந்தியிடம் பேசினோம்,

``சாதி சார்ந்த அடையாளங்களைப் பயன்படுத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உத்தரவு போட்டிருக்கிறார். தொடர்ச்சியாக இதுபோன்ற குற்றச்சாட்டுகள் வருவதால், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் கவுன்சலிங் கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பள்ளி மேலாண்மைக் குழு ஒவ்வொரு பள்ளியிலும் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

இராஜீவ் காந்தி, திமுக செய்தித் தொடர்பாளர்
இராஜீவ் காந்தி, திமுக செய்தித் தொடர்பாளர்

இந்தக் குழு இதுபோன்ற பிரச்னைகளைச் சரிசெய்ய பெரிதளவில் உதவும் என நம்புகிறோம். அதேபோல, ஆசிரியர்கள் மீதும் சாதி சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் வந்து, ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டால் அவர்களின்மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கெனவே இது தொடர்பாக சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டிருக்கிறது. மாணவர்களின்மீது இந்த அரசு உண்மையான அக்கறையோடு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அது எப்போதும் தொடரும்'' என்கிறார் அவர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism