Election bannerElection banner
Published:Updated:

'5 முறை தள்ளுபடி செய்யவில்லை; இப்போது மட்டும் ஏன்?' - தீக்குளிக்க முயன்ற சுயேச்சை வேட்பாளர்

தேர்தல் நடத்தும் அலுவலகம், விழுப்புரம்.
தேர்தல் நடத்தும் அலுவலகம், விழுப்புரம்.

சுயேச்சை வேட்பாளர் ஒருவரின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதால், அவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. நேற்று மாலை தகுதிபெற்ற இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தம் 102 பேர் போட்டியிடுகின்றனர். செஞ்சி-13, மயிலம் -14, திண்டிவனம் -15, வானூர்-7, விக்கிரவாண்டி -14, திருக்கோவிலூர் - 14 பேரும் வேட்பாளர்களாகக் களம் காண்கின்றனர்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

விழுப்புரம் சட்டமன்றத் தொகுதியில் மட்டும் அதிகபட்சமாக 25 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். எனவே, இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவிருப்பதாகக் கூறப்படுகிறது.

மார்ச் 12-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடைபெற்ற வேட்புமனுத் தாக்கலில், விழுப்புரம் சட்டமன்றத் தொகுதியில் மட்டும் 36 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த 20-ம் தேதி தேர்தல் நடத்தும் அலுவலர் மூலமாக வேட்பாளர்கள் முன்னிலையில் மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. மூன்று சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் சில மாற்று வேட்பாளர்கள் உட்பட 11 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மீதமுள்ள 25 நபர்களில் யாரும் நேற்று மாலை வரை வாபஸ் பெறவில்லை. எனவே, நேற்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. சுயேச்சை வேட்பாளர்களுக்குக் குலுக்கல் முறையில் சின்னங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

அப்போது, தன்னுடைய மனு தள்ளுபடி செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுயேச்சை வேட்பாளராக விண்ணப்பித்திருந்த, முகமது அலி ஜின்னா என்பவர் விழுப்புரம் தேர்தல் நடத்தும் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர் கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு 0.45% வாக்குகளை பெற்றிருக்கிறார்.

முகமது அலி ஜின்னா
முகமது அலி ஜின்னா

இது குறித்து முகமது அலி ஜின்னாவிடம் பேசினோம். ``நான் விழுப்புரம் சட்டமன்றத் தொகுதியில் ஐந்து சட்டமன்றத் தேர்தல்களில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டிருக்கிறேன். 1989-லிருந்து போட்டியிட்டுவருகிறேன். திண்டிவனம் மக்களவைத் தொகுதியாக இருந்தபோது எம்.பி- க்கும் போட்டியிட்டிருக்கிறேன். தற்போது ஆறாவது முறையாக விழுப்புரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தேன். திட்டமிட்டு என்னுடைய மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டனர்.

அவர்கள் கேட்ட அனைத்து விவரங்களையும் சரியாகப் பூர்த்தி செய்திருந்தும் என் மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டார்கள். நான் சிறுவயதில் ஒரு மளிகைக் கடையில் வேலை செய்துவந்தேன். அங்கு வரும் சிலரிடம் பேசிப் பழகுவேன். அது காலப்போக்கில் அரசியல்மீது ஆர்வம் ஏற்படக் காரணமாக அமைந்தது. சமூக சேவை செய்ய வேண்டும் எனும் ஆசையில் சுயேச்சையாகப் போட்டியிட்டுவருகிறேன். கடந்த ஐந்து முறையும் என் வேட்புமனு தள்ளுபடி செய்யப்படவில்லை. ஏன் இந்த முறை மட்டும் தள்ளுபடி செய்ய வேண்டும்? இதைத் திட்டமிட்டு செய்திருக்கிறார்கள். இதனால், மனம் தாங்காமல் தீக்குளிக்கும் முடிவை எடுத்தேன். இன்று ஆட்சியரிடம் மனு ஒன்றைக் கொடுத்துவிட்டு, சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடரவிருக்கிறேன்" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு