Published:Updated:

`600 பத்திரிகை, பூ, பழம், வெற்றிலை, பாக்கு'-நகரசபைக் கூட்டத்துக்கு மக்களை அழைத்த சுயேச்சை கவுன்சிலர்

சுயேச்சை கவுன்சிலர்

ராசிபுரம் நகராட்சியில் சுயேச்சை கவுன்சிலர் சசிரேகா சதீஷ் என்பவர், வீடு வீடாகச் சென்று, திருமண அழைப்பிதழ் கொடுப்பதுபோல், தாம்பூலத்தட்டில் பத்திரிகை வைத்து அழைப்பு விடுத்துவருகிறார்.

`600 பத்திரிகை, பூ, பழம், வெற்றிலை, பாக்கு'-நகரசபைக் கூட்டத்துக்கு மக்களை அழைத்த சுயேச்சை கவுன்சிலர்

ராசிபுரம் நகராட்சியில் சுயேச்சை கவுன்சிலர் சசிரேகா சதீஷ் என்பவர், வீடு வீடாகச் சென்று, திருமண அழைப்பிதழ் கொடுப்பதுபோல், தாம்பூலத்தட்டில் பத்திரிகை வைத்து அழைப்பு விடுத்துவருகிறார்.

Published:Updated:
சுயேச்சை கவுன்சிலர்

கிராமசபைக் கூட்டம் நடத்தப்படுவதுபோல் தமிழகத்தில் முதன்முறையாக நவம்பர் 1-ம் தேதி பேரூராட்சி, நகராட்சி, மாநகரசபைக் கூட்டமும் நடைபெறும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது. இதற்கு, மக்களிடையே வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த நிலையில், தமிழகத்தில் முதன்முறையாக நடைபெறும் நகரசபைக் கூட்டம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ராசிபுரம் நகராட்சியில் சுயேச்சை கவுன்சிலர் சசிரேகா சதீஷ் என்பவர், வீடு வீடாகச் சென்று, திருமண அழைப்பிதழ் கொடுப்பதுபோல், தாம்பூலத்தட்டில் பத்திரிகை வைத்து அழைப்பு விடுத்துவருகிறார்.

பத்திரிகை வைத்து மக்களை அழைக்கும் சசிரேகா
பத்திரிகை வைத்து மக்களை அழைக்கும் சசிரேகா
நா.ராஜமுருகன்
பத்திரிகை வைத்து மக்களை அழைக்கும் சசிரேகா
பத்திரிகை வைத்து மக்களை அழைக்கும் சசிரேகா
நா.ராஜமுருகன்

நாமக்கல் மாவட்டத்திலுள்ள ராசிபுரம் நகராட்சியில் 27 வார்டுகள் இருக்கும் நிலையில், அவற்றில் 24 வார்டுகளில் தி.மு.க-வும், இரண்டு வார்டுகளில் அ.தி.மு.க-வும், ஒரு வார்டில் சுயேச்சை வேட்பாளரும் வெற்றிபெற்றிருக்கின்றனர். இதில், 12-வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் சசிரேகா வெற்றிபெற்றிருந்தார். இந்த நிலையில், அரசு அறிவித்திருக்கும் இந்த நகரசபைக் கூட்டம் தன் வார்டு மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதால், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தனது வார்டில் வசிக்கும் 600 குடும்பங்களுக்கு வீடு வீடாகச் சென்று பத்திரிகை வைத்து அழைப்பு விடுத்துவருகிறார்.

இது குறித்து, சுயேச்சை கவுன்சிலர் சசிரேகா சதீஸிடம் பேசினோம். ``கிராமசபைக் கூட்டம்போல் நகரசபைக் கூட்டம் நடைபெற, அரசு ஆணை வெளியிட்டிருக்கிறது. அதையொட்டி, பொதுமக்களைச் சந்தித்து நகரசபைக் கூட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, அந்தக் கூட்டத்துக்கு அவர்களை மரியாதையுடன் அழைக்க நினைத்தேன். அதன் காரணமாக, தாம்பூலத்தட்டில் பத்திரிகை வைத்து அழைப்பு விடுத்துவருகிறேன்.

சசிரேகா
சசிரேகா
நா.ராஜமுருகன்

கிராமசபைக் கூட்டத்தைப் பொறுத்தவரை அங்கு நடைபெற்றுவரும் பணிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து கிராமசபைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, அரசுக்குத் தீர்மானமாக அனுப்பிவைக்கப்படும். அந்த அடிப்படையில்தான், நகரப் பகுதியில் இருக்கும் மக்களுடைய குறைகளைக் கேட்டு, அவர்களுக்கான குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில், இந்த நகரசபைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. அரசின் இந்த அறிவிப்பின்படி, இனி ஆண்டுக்கு ஆறு முறை பேரூராட்சி, நகர மற்றும் மாநகரசபைக் கூட்டம் அந்தந்த வார்டு கவுன்சிலர்கள் தலைமையில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பத்திரிகை வைத்து மக்களை அழைக்கும் சசிரேகா
பத்திரிகை வைத்து மக்களை அழைக்கும் சசிரேகா
நா.ராஜமுருகன்

மக்கள் இந்த நகரசபைக் கூட்டத்தைப் பயன்படுத்தி, தங்களுக்கு ஜனநாயகத்திலுள்ள பவரை வைத்து, பல சமூககேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். பட்டதாரியான என்னை நம்பி, எனது வார்டு மக்கள் என்னை சுயேச்சையாக ஜெயிக்கவைத்தார்கள். அவர்களின் நம்பிக்கை என்றும் வீண்போகாது என்ற வகையில், என்னால் முடிந்த அளவு வார்டு மக்களுக்காக செயல்பட்டுவருகிறேன்.

பத்திரிகையில் மக்களுக்கு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறும் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்ததோடு, மதியம் சமபந்தி விருந்தும் நடைபெறும் என்று பத்திரிகையில் குறிப்பிட்டோம். அந்தப் பத்திரிகையை தாம்பூலத்தட்டில் வைத்து, அதோடு வெற்றிலை, பாக்கு, பூ, பழமும் வைத்து, எனது வார்டில் உள்ள 600-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு நேரடியாகச் சென்று வழங்கினேன். அவர்களும் மகிழ்ச்சியாக அதைப் பெற்றுக்கொண்டதோடு, 'கண்டிப்பாகக் கூட்டத்துக்கு வருகிறோம்' என்று சொல்லியிருக்காங்க. அந்தக் கூட்டத்தின் நோக்கம், முக்கியத்துவம் பற்றி தெரியாதவங்களுக்குக் கூடுதலாக விளக்கம் கொடுத்து, கூட்டத்துக்கு வரச்சொல்லி அழைத்திருக்கிறோம்.

பத்திரிகை வைத்து மக்களை அழைக்கும் சசிரேகா
பத்திரிகை வைத்து மக்களை அழைக்கும் சசிரேகா
நா.ராஜமுருகன்

என் வார்டிலுள்ள 90 சதவிகித மக்கள் கண்டிப்பாகக் கூட்டத்துக்கு வருவாங்கனு நினைக்கிறேன். ஏன்னா, நகரசபைக் கூட்டத்தில் வார்டின் மொத்த வாக்காளர்களில் குறைந்தபட்சம் 10 சதவிகித வாக்காளர்கள் கலந்துகொள்ள வேண்டும். குறிப்பாக, குறைந்தபட்ச வாக்காளர்கள் கலந்துகொள்ளாதபோது நடைபெறும் நகரசபைக் கூட்டத்தில் இயற்றப்படும் தீர்மானங்கள் சட்டப்படி செல்லுபடி ஆகாது என்பது குறிப்பிடத்தக்கது. அதனால், எனது வார்டு பிரச்னைகளைப் பற்றிப் பேசி, அதற்குத் தீர்வு ஏற்படுத்த நான் மட்டுமல்ல, மக்களும் இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொள்ள ஏதுவாகக் கூட்டத்தில் கலந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்றார்.