Published:Updated:

இந்தியா - நேபாளம்... கசக்கும் உறவு!

கசக்கும் உறவு!
பிரீமியம் ஸ்டோரி
கசக்கும் உறவு!

ஒரு டைம்லைன் பார்வை...

இந்தியா - நேபாளம்... கசக்கும் உறவு!

ஒரு டைம்லைன் பார்வை...

Published:Updated:
கசக்கும் உறவு!
பிரீமியம் ஸ்டோரி
கசக்கும் உறவு!
இந்தியாவைச் சுற்றி எல்லைத் தகராறுகள் தகித்துக் கொண்டிருக்கின்றன. இந்தியாவுடன் நெருக்கமான நட்புறவுகொண்டிருந்த நேபாளம், சமீபகாலமாக முரண்பட்டு நிற்கிறது. உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மேற்கு வங்கம், பீகார், சிக்கிம் என இந்தியாவின் ஐந்து மாநிலங்களுடன் 1,751 கிலோமீட்டர் நீளமுள்ள எல்லைகளைப் பகிர்ந்துகொண்டிருக்கும் நீண்டகால நட்பு நாடான நேபாளத்தின் உறவில் கடந்த நான்கு ஆண்டுகளாக விரிசல் பெரிதாகிக்கொண்டே செல்கிறது. என்ன நடந்தது, நடக்கிறது? ஒரு டைம்லைன் பார்வை...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

2015, செப்டம்பர் 20

2008-ம் ஆண்டே மன்னராட்சியை ஒழித்து, மதச்சார்பற்ற குடியரசாக அறிவித்துக்கொண்டது நேபாளம். அதன் அரசியலமைப்பு வரைவு, ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு 2015-ம் ஆண்டு அதன் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது.

2015, செப்டம்பர் 23

இந்தியா வழியாக நேபாளத்துக்குள் செல்லும் பெட்ரோல், மருத்துவப் பொருள்கள் உள்ளிட்டவை முற்றிலுமாகத் தடைப்பட்டன. இது, நேபாளத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் முடக்கியது. அதிர்ச்சியடைந்த நேபாளம், ‘பொருள்கள் தடைப்பட்டதற்கு இந்தியாதான் காரணம்’ என்று குற்றம்சாட்டியது. ஆனால், ‘இந்திய - நேபாள எல்லையில் வசிக்கும் மாதேசி இன மக்கள், நேபாளத்தின் புதிய அரசியலமைப்பை விரும்பாமல் முற்றுகையிடுவதால்தான் வர்த்தகத் தடை ஏற்பட்டது. இதற்கும் இந்திய அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’ என்று மறுத்தது இந்தியா. மாதேசி மக்கள் அமைப்பு இந்தியாவின் ஆதரவு பெற்றது என்பதால், இதை நம்பவில்லை நேபாளம்.

2015, அக்டோபர் 28

பெட்ரோல் உள்ளிட்ட தனது தேவைகளுக்காக இந்தியாவை மட்டுமே நம்பிக்கொண்டிருக்கிறோம் என்று உணர்ந்த நேபாளம், சீனாவின் பக்கம் கவனத்தைத் திருப்பியது. எரிபொருள் தேவைக்காக, சீனாவுடன் முதல் ஒப்பந்தம் போடப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2016, ஜனவரி

நேபாளத்தின் அரசியலமைப்பில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அந்தத் திருத்தங்களை இந்தியா வரவேற்றது. ஆனால், அந்தத் திருத்தம் அரைகுறையாக இருப்பதாகச் சொல்லி மாதேசி மக்கள் அமைப்பினர் ஏற்றுக்கொள்ள மறுத்தனர். எனினும், தங்களின் போராட்டங்களால் நேபாள மக்கள் பாதிக்கப்படுவதை உணர்ந்து அவர்கள் பின்வாங்கினர். அவர்களின் முற்றுகை முடிவுக்கு வந்தது.

இந்தியா - நேபாளம்... கசக்கும் உறவு!

2017, டிசம்பர்

நேபாளத்தில் கே.பி.ஷர்மா ஒளி தலைமையிலான கம்யூனிஸ்ட் கூட்டணிக் கட்சிகளின் ஆட்சி தொடங்கியது.

2018, ஜனவரி

இந்தியா-நேபாளம் இடையேயான உறவைச் சீரமைத்து, புதிய மாற்றங்களுடன் மேம்படுத்த இரு நாடுகளின் பிரதிநிதிகள் அடங்கிய சிறப்புக் குழு அமைக்கப்பட்டது. ஆய்வின் முடிவில், ‘அந்தக் குழுவின் பரிந்துரைகளை இந்தியா விரும்பவில்லை’ என்று தகவல் வெளியானது. 2019-ம் ஆண்டு, அந்தப் பரிந்துரைகள் இன்னும் பரிசீலனையில் இருப்பதாக வெளியுறவுத்துறை சார்பாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

2019, அக்டோபர்

சீனாவின் அதிபர் ஷி ஜின்பிங் நேபாளத்துக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். ஒரு சீனத் தலைவர் நேபாளத்துக்குச் செல்வது அதுவே முதன்முறை. நேபாளம்-சீன உறவை பலப்படுத்துவது குறித்துப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

2019, நவம்பர் 2

ஆகஸ்ட் மாதம் ஜம்மு-காஷ்மீர் மாநிலச் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய பிறகு, அந்தப் பகுதியை யூனியன் பிரதேசமாக அறிவித்தது இந்தியா. நவம்பர் 2 அன்று அதை உறுதிப்படுத்தும் புதிய வரைபடத்தையும் இந்தியா வெளியிட்டது. அந்த வரைபடத்தில் சர்ச்சைக்குரிய பகுதியான காலாபானி பகுதி, இந்தியப் பகுதியாகக் குறிப்பிட்டிருந்தது. நேபாளம் அதற்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவித்து, இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த முற்பட்டது. இந்தியா அதற்கு ஒத்துழைக்கவில்லை.

2020, மே 8

சீனாவின் கட்டுப்பாட்டிலிருக்கும் கயிலாய மலையின் மானசரோவர் ஏரி வரை செல்ல, லிபுலேக் கணவாய் வரை 80 கிலோமீட்டருக்கு புதிய சாலையை அமைத்துள்ளது இந்தியா. மே 8-ம் தேதி வீடியோ கான்ஃபரன்ஸ் வழியாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்தச் சாலையைத் திறந்துவைத்தார். “எங்களுக்குச் சொந்தமான லிபுலேக் கணவாயின் காலாபானிப் பகுதியை இந்தியா ஆக்கிரமித்துள்ளது” என்று நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஒளி எதிர்ப்பு தெரிவித்தார்.

அதேசமயம், இந்திய ராணுவத் தலைமை ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே, “நேபாளம் வேறு யாருக்காகவோ பேசுகிறது” என்று நேபாளத்தின் சீன ஆதரவு நிலைப்பாட்டை மறைமுகமாகச் சாடினார். மறுபுறம் இந்திய-சீன எல்லை மோதல்களும் தொடங்கின.

2020, ஜூன் 13

நேபாள அரசு, அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் அந்த நாட்டின் அதிகாரபூர்வ வரைபடத்தை வெளியிட்டது. அதில், இந்தியாவுடன் எல்லை சர்ச்சையிலிருக்கும் லிம்பியாதுரா, காலாபானி, லிபுலேக் ஆகிய பகுதிகள் நேபாள நாட்டின் பகுதிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தன. `இவையனைத்தும் உத்தரகாண்ட் மாநிலத்தின் பகுதிகள்’ என்று இந்திய அரசு உரிமை கோரி வந்த பகுதிகள். நேபாளத்தின் இந்தப் புதிய வரைபடத்துக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்தியா - நேபாளம்... கசக்கும் உறவு!

2020, ஜூன் மற்றும் ஜூலை

நேபாளத்தின் இந்த முடிவு இந்தியாவில் பெரும் விவாதங்களைக் கிளப்பியது. இந்திய ஊடகங்கள் ஷர்மா ஒளியின் சீனச் சார்பைக் கடுமையாக விமர்சித்தன. பதிலுக்கு அவர், “இந்தியாவின் ஆதரவுடன் என் பிரதமர் பதவிக்கு ஆபத்து விளைவிக்கச் சதி நடக்கிறது” என்று குற்றம்சாட்டினார்.

2020, ஜூலை 9

ஷர்மா ஒளி பதவி விலகக் கோரி ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் போர்க்கொடி தூக்கினார்கள். கொரோனா காரணமாக, சுகாதார அவசரநிலையை அமல்படுத்த, ஜனாதிபதி பண்டாரியுடன் ஷர்மா ஒளி ஆலோசனை நடத்தினார். நேபாள கம்யூனிஸ்ட் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், ஆட்சியைக் காப்பாற்றும் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்குப் பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் ஷர்மா ஒளி.

மறுபுறம், தங்களது நாட்டின் ஒற்றுமைக்கும், ஆட்சியாளர்களுக்கும் எதிராக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிடுவதாக நேபாளத்தில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதைத் தொடர்ந்து நேபாளத்தின் கேபிள் மற்றும் சாட்டிலைட் தொலைக்காட்சி சேவை நிறுவனங்கள் இந்திய சேனல்களின் ஒளிபரப்பை நிறுத்தின. `நேபாள அரசு இந்தத் தடையை விதிக்கவில்லை’ என்று கூறப்பட்டாலும், கேபிள் நிறுவனங்களின் இந்தச் செயல்பாட்டை நேபாள அரசு கண்டிக்கவில்லை. நேபாள அரசின் செய்தித் தொடர்பாளர் யூபா ராஜ் காத்திவாடா, “இந்திய ஊடகங்களில் வரும் கற்பனையான செய்திகள் சட்டரீதியான நடவடிக்கை களுக்கு வித்திடும்” என்று தெரிவித்தார்.

2020, ஜூலை 13

“கடவுள் ராமர் பிறந்த உண்மையான அயோத்தி இந்தியாவில் இல்லை. நேபாளத்தில்தான் இருக்கிறது” என்று புதிய சர்ச்சையைக் கொளுத்திப்போட்டார் ஷர்மா ஒளி. மேலும், “இந்தியா கலாசார அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறது” என்றும் குற்றம்சாட்டினார். உத்தரப்பிரதேசம், அயோத்தியிலிருந்து நேபாளத்தில் சீதா பிறந்ததாகக் கூறப்படும் ஜனக்பூர் வரை ‘ராமாயண சுற்றுப்பாதைப் பயணத்தை’ மோடியும் ஷர்மா ஒளியும் கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கிவைத்தனர். அப்போதெல்லாம் ராமர் பிறப்பிடம் பற்றி நேபாளத்துக்கு மாற்றுக் கருத்து இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு காலத்தில் இந்தியாவும், தற்போது சீனாவும் நேபாளத்தின்மீது இறுக்கமான பிடியைக்கொண்டிருப்பது மேற்கண்ட நிகழ்வுகளிலிருந்து புரிகிறது. நேபாளத்துடன் திறந்த எல்லைகளைக்கொண்ட நாடு இந்தியா. எந்தத் தடையும் இன்றி இரு நாட்டு மக்களும், வர்த்தகப் பொருள்களும் எல்லைகள் தாண்டி சுதந்திரமாகப் பயணிக்க முடியும். இவ்வளவு நெருக்கமான நட்புறவைப் பராமரித்த நிலையில், நேபாளத்தில் சீனாவின் தீவிரமான தலையீடு நேபாளத்துக்கு மட்டுமன்றி இந்தியாவுக்கும் ஆபத்தாகவே முடியும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism