Published:Updated:

`அவர்களின் குரல்கள் நசுக்கப்படக் கூடாது!’ - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளிக்கும் ராகுல்

யாராவது பிரதமர் மோடியை எதிர்த்துப் பேசினாலோ, மத்திய அரசுக்கு எதிராகக் குரலை உயர்த்தினாலோ, அவர்கள் சிறையில் தள்ளப்பட்டு, தாக்கப்படுகின்றனர்.

ராகுல்காந்தி
ராகுல்காந்தி

``எதிர்ப்புக் குரல் இல்லாமல் ஜனநாயகம் செயல்பட முடியாது, எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களை, `ஆன்டி நேஷனல்' (anti-national) என்றும், `அர்பன் நக்சல்' (urban naxal) என்றும் முத்திரை குத்துவது நியாயமற்றது. இந்திய அரசியலமைப்பு கருத்து சுதந்திரத்தை மக்களுக்கு வழங்குகிறது. அதைச் செயல்படுத்தும் குரல்களில் அரசுக்கு எதிரான எதிர்ப்புக் குரலும் அடக்கம்” என்று பிரபலங்கள் சேர்ந்து மோடிக்குக் கடிதம் ஒன்றை எழுதினர்.

Rahul Gandhi
Rahul Gandhi
Twitter/@RahulGandhi

இந்தியாவில் தொடர்ந்து நடைபெறும் கூட்டு வன்முறை தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மொத்தம் 49 பேர் எழுதிய இந்தக் கடிதம் நாடுமுழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. சினிமா, கலை, இலக்கியம், அறிவியல், மருத்துவம் உட்பட பல்வேறு துறையைச் சேர்ந்த இந்தியாவின் முக்கிய ஆளுமைகள் ஒன்றிணைந்து இந்தக் கடிதத்தை எழுதினர். இது மிகப் பரவலாக இந்தியா முழுவதும் பேசப்பட்டது. இந்நிலையில் பீகாரைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதிர்குமார் ஓஜா என்பவர், தாக்கல் செய்த வழக்கின் மீது நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து பிரதமருக்குக் கடிதம் எழுதிய பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

`இனி 98 அல்ல 217 கி.மீட்டர் பயணம்!' - வயநாடு போராட்டத்துக்குக் கரம் கொடுத்த ராகுல் காந்தி

இந்நிலையில், கர்நாடகா மாநிலம், பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் இரவு நேரத்தில் பயணிக்க தடைவிதிக்கபட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சிசார்பில் நடந்த போராட்டத்தில், ராகுல்காந்தி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ``நாட்டில் என்ன நடக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும்; இதில ரகசியம் எதுவுமில்லை. சர்வாதிகாரத்தை நோக்கி நாம் பயணப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.

letter
letter

யாராவது பிரதமர் மோடியை எதிர்த்து பேசினாலோ, மத்திய அரசுக்கு எதிராகக் குரலை உயர்த்தினாலோ, அவர்கள் சிறையில் தள்ளப்பட்டு, தாக்கப்படுகின்றனர். நாட்டில் இரண்டு சித்தாந்தங்கள் இருக்கின்றன. ஒன்று இந்தத் தேசத்தை ஒரு மனிதர் ஒரு சித்தாந்தம் ஆள வேண்டும். மற்றவர்கள் வாய்மூடி இருக்க வேண்டும். மற்றொரு புறம், எதிராகப் பேசும் காங்கிரஸ் கட்சியும் மற்ற எதிர்க்கட்சிகளும் எதிர்க்கின்றன. இந்தத் தேசத்தில் ஒவ்வொருவருக்கும் மாறுபட்ட பார்வைகள், வேறுபட்ட மொழிகள், கலாசாரங்கள், கருத்துகளைத் தெரிவிப்பதில் வித்தியாசமான கோணங்கள் இருக்கின்றன. அவர்களது குரல்கள் ஒருபோதும் நசுக்கப்படக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.