Published:Updated:

சீன எதிர்ப்பை மீறி அருணாச்சல் சென்ற அமித் ஷா... தீராத எல்லைப் பிரச்னைக்கு என்ன காரணம்?!

அமித் ஷா

இந்தியாவும் சீனாவும் 3,488 கி.மீ. எல்லையைப் பகிர்ந்துகொள்கின்றன.

Published:Updated:

சீன எதிர்ப்பை மீறி அருணாச்சல் சென்ற அமித் ஷா... தீராத எல்லைப் பிரச்னைக்கு என்ன காரணம்?!

இந்தியாவும் சீனாவும் 3,488 கி.மீ. எல்லையைப் பகிர்ந்துகொள்கின்றன.

அமித் ஷா

இந்தியாவும் சீனாவும் 3,488 கி.மீ. எல்லையைப் பகிர்ந்துகொள்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரையில் ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் சீனாவுடன் எல்லையைப் பகிர்ந்துகொள்கின்றன. அதில், பல தசாப்தங்களாக லடாக் எல்லையும், அருணாச்சலப் பிரதேச எல்லையும் போர்ப் பதற்றத்துக்குரியப் பகுதிகளாக இருநாடுகளுக்கும் நீடித்துவருகின்றன.

கல்வான் பள்ளத்தாக்கு மோதல் நினைவுச்சின்னம்
கல்வான் பள்ளத்தாக்கு மோதல் நினைவுச்சின்னம்

குறிப்பாக, கடந்த 2020-ல் லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு எல்லைப் பகுதியில் சீன ராணுவ வீரர்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சித்தனர். அப்போது, இந்தியா - சீன ராணுவப் படையினருக்கு இடையே கடுமையான மோதல் வெடித்தது. இருதரப்பு வீரர்களும் ஒருவரை ஒருவர் கட்டையாலும், இரும்புக்கம்பிகள் மற்றும் கற்களாலும் மாறிமாறித் தாக்கிக்கொண்டனர். இந்த மோதலில், இந்திய வீரர்கள் தரப்பில் 20 பேரும் சீனப் படையினர் தரப்பில் 40 பேரும் உயிரிழந்தனர்.

இந்தநிலையில், மீண்டும் இந்தியாவின் இறையாண்மையை சீண்டும் வகையில், கடந்த ஏப்ரல் 2-ம் தேதி அருணாச்சலப் பிரதேசத்தின் 11 இடங்களுக்கு சீன மொழியில் புதிய பெயர்களைச் சூட்டியது சீனா. குறிப்பாக, அருணாச்சலப் பிரதேசத்தின் ஜங்னன் பகுதியைச் சேர்ந்த 5 மலை முகடுகள், 2 ஆறுகள், 4 நிலப் பகுதிகள் என மொத்தம் 11 இடங்களின் பெயர்களை மாற்றி அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டது சீன உள்துறை அமைச்சகம். சீனாவின் இந்த செயல் முதல்முறை அல்ல. இதற்கு முன்பாகவே, 2017-ம் ஆண்டில் 6 இடங்களின் பெயர்களையும், 2021-ம் ஆண்டில் 15 இடங்களின் பெயர்களையும் இரண்டுமுறை சீனா மாற்றியிருக்கிறது.

அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி: வெளியுறவு துறை
அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி: வெளியுறவு துறை

இந்தநிலையில், மூன்றாவது முறையாக இந்தியாவின் ஆளுகைக்குட்பட்ட இடங்களின் பெயர்களை சீனா மாற்றியிருப்பதை கண்டித்த வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, ``சீனா இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது புதிதல்ல. அதேசமயம் சீனாவின் இந்த செயல்களை இந்தியா முற்றிலும் நிராகரிக்கிறது. அருணாச்சல பிரதேசம் எப்போதும் இந்தியாவுடன் ஒருங்கிணைந்த ஒரு பகுதி. புதிய பெயர்களை சூட்டும் முயற்சிகளின் மூலம் சீனாவால் எந்தவொரு மாற்றத்தையும் கொண்டு வரமுடியாது!" என பதிலடி கொடுத்தார்.

அரிந்தம் பக்சி
அரிந்தம் பக்சி

அந்தநிலையில், கடந்த ஏப்ரல் 10, 11 ஆகிய தேதிகளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லையோர கிராமமான கிபித்தூவுக்கு நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைப்பதற்காகச் சென்றார். அமித் ஷாவின் பயண அறிவிப்பு வெளியான உடனே, சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின், ``ஜாங்னன் (Zangnan) சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி. இந்திய உள்துறை அமைச்சர் (அமித் ஷா) இங்கு வருவது, சீனாவின் பிராந்திய இறையாண்மையை மீறுவதாகும். இந்த செயல் எல்லைப் பகுதியின் அமைதிக்கு உகந்தது அல்ல!" எனக்கூறி அமித் ஷாவின் வருகைக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.

சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர்  வாங்-வென்பின்
சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் வாங்-வென்பின்

அதேசமயம், சீனாவின் எதிர்ப்புக்கு பதிலடிகொடுக்கும் விதமாகப் பேசிய அரிந்தம் பாக்சி, ``இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு செல்வது போலவே, அருணாசலப் பிரதேசத்துக்கும் இந்திய தலைவர்கள் வழக்கம்போல் செல்வார்கள். அருணாசலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவும், பிரிக்க இயலாத பகுதியாகவும் இருந்தது, இருக்கிறது, எப்போதும் இருக்கும். இதுபோன்ற பயணங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது அர்த்தமற்றது. உண்மைத்தன்மை எந்த விதத்திலும் மாற்றிவிடாது!" என மீண்டும் அழுத்தமாகக் கூறினார்.

இந்தநிலையில், அருணாச்சலப் பிரதேசத்துக்குச் சென்ற மத்திய அமைச்சர் அமித் ஷா, ``2014-ம் ஆண்டுக்கு முன் வடகிழக்கு பகுதி முழுவதும் குழப்பமான பகுதியாக இருந்தது. அதன்பிறகு, கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் கிழக்கு நோக்கிய கொள்கை (Look East Policy) காரணமாக, வடகிழக்கு இப்போது நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் பகுதியாக கருதப்படுகிறது. இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை வீரர்களும் இந்திய ராணுவமும் நமது எல்லையில் இரவும் பகலும் பணியாற்றி வருவதால் நம் நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் நிம்மதியாக இன்று உறங்க முடிகிறது. தற்போது இந்தியா மீது தீய பார்வையை செலுத்த யாருக்கும் சக்தி இல்லை என்று பெருமையாக சொல்லலாம். மேலும், இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டை யாரும் கேள்வி கேட்க முடியாது. நமது நிலத்தில் ஓர் அங்குலத்தைக் கூட யாரும் எடுத்துவிட முடியாது!" என ஆவேசமாக எதிர்வினையாற்றியிருக்கிறார்.

அமித் ஷா, சீனா
அமித் ஷா, சீனா

சீனாவைப் பொறுத்தவரையில், அருணாச்சல பிரதேசத்தின் முழுப் பகுதியையும் சொந்தம் கொண்டாடுகிறது. அந்தப் பகுதியை `தெற்கு திபெத்' (South Tibet) எனப் பெயரிட்டு அழைத்து வருகிறது. இதேபோல லடாக் பகுதிகளையும் சொந்தமாக்கிக்கொள்ள முயற்சிசெய்துவருகிறது. இதற்கு முதன்மையானக் காரணம், இன்றுவரையில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான எல்லைக்கோடுகள் முறையாக, முழுமையாக, ஒருமனதாகப் பிரிக்கப்படவில்லை என்பதே! இருப்பினும் சீனாவில் எல்லை விரிவாக்க ஆசை அதன் அண்டைநாடுகள் ஒன்றையும் விட்டுவைக்கவில்லை என்பதே நிதர்சனம்.