Published:Updated:

மாமல்லபுரம் வரும் மோடி - ஜி ஜின்பிங்? - 3 நாள்கள் சந்திப்பு நிகழ்ச்சி

சத்யா கோபாலன்

இந்திய பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் மாமல்லபுரத்தில் சந்திக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Modi - xi Jinping
Modi - xi Jinping

சீனாவில் உள்ள வுகான் (Wuhan) என்ற நகரில் கடந்த வருடம் ஏப்ரல் 27, 28-ம் தேதிகளில் சீன அதிபர் ஜி ஜின்பிங் (xi Jinping) மற்றும் இந்திய பிரதமர் மோடி ஆகிய இருவருக்கும் இடையே முதலாவது சந்திப்பு நடந்தது. அவர்களின் சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு, இரு நாட்டின் வளர்ச்சி போன்றவை பற்றி விவாதித்தனர்.

Mamallapuram
Mamallapuram

பிரதமர் மோடி சீனா சென்றிருந்தபோது இந்தியா வருமாறு அந்நாட்டு அதிபருக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்ற ஜி ஜின்பிங் அடுத்த மாதம் இந்தியா வரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மோடி மற்றும் சீன அதிபரின் சந்திப்பு தமிழகத்தின் மாமல்லபுரத்தில் நடக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அக்டோபர் மாதம் 11 முதல் 13 வரை இவர்களின் சந்திப்பு நடைபெறும் எனக் கூறப்படுகிறது. முதலாவதாக பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் இவர்களின் சந்திப்பு நடைபெறுவதாக இருந்ததாகவும், ஒரு சில காரணங்களால் அங்கு நடக்க முடியாமல் போகவே அதை மாமல்லபுரத்துக்கு மத்திய அரசு மாற்றியதாகவும் கூறப்படுகிறது.

Modi - xi Jinping
Modi - xi Jinping
ANI

சீன அதிபரின் வருகையையொட்டி அந்நாட்டு அதிகாரிகள் முன்னதாகவே மாமல்லபுரத்துக்கு வந்து அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்வார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ``இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்புக்காக இந்தியா முழுவதும் பல நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. ஆனால், மத்திய அரசு தற்போது மாமல்லபுரத்தைத் தேர்வு செய்துள்ளது. இந்த இடமும் மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது” என அமைச்சர் ஒருவர் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்துக்குப் பேட்டியளித்துள்ளார்.

`சீனாவுக்கு `குட்பை' சொல்லும் ட்ரம்ப்... இந்தியாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்?

சந்திப்பின்போது மாமல்லபுர சிற்பங்கள், கடற்கரை கோயில், பல்லவர்களின் குடைவரைக் கோயில் போன்ற இடங்களை இரு தலைவர்களும் நேரில் பார்வையிடுவார்கள் எனத் தெரிகிறது. தலைவர்களின் சந்திப்பு மாமல்லபுரத்தில்தான் நடக்கும் என உறுதியான பிறகு, மத்திய உள்துறை அதிகாரிகளும் சென்னை வந்து அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்வர். இது பற்றி தமிழக அரசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள்.

Mamallapuram
Mamallapuram

கடந்த 2018-ம் ஆண்டு மாமல்லபுரத்தில் நடந்த பாதுகாப்புக் கண்காட்சியால்தான் தற்போது இரு தலைவர்களும் அங்கு சந்திக்கவுள்ளனர் எனக் கூறப்படுகிறது. காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவளித்துள்ள இந்தச் சூழலில் இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பு உலக அளவில் அதிகம் கவனம் பெற்றுள்ளது.