Published:Updated:

மேக்கேதாட்டு விவகாரம்:`சுதந்திர தின கிராம சபைக் கூட்டங்களில் அதிரடி தீர்மானம்!’-முத்தரசன் அறிவிப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழுக் கூட்டம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழுக் கூட்டம்

இந்தத் தீர்மானம் இந்திய அளவில் அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்க்கக்கூடியதாக அமைந்துள்ளது. மேக்கேதாட்டு பிரச்னைக்காக, கிராம சபைல் கூட்டங்களில் இப்படி ஒரு தீர்மானம் நிறைவேற்ற முடிவெடுத்திருப்பது இதுவே முதன்முறை.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள ஒரு முக்கிய முடிவு அரசியல் வட்டாரங்களில் இந்திய அளவில் கவனம் ஈர்க்கக்கூடியதாக அமைந்துள்ளது. காவிரி மற்றும் தென்பெண்ணை ஆற்றுநீர் உரிமைப் பிரச்னைக்காக இப்படி ஓர் அதிரடியான தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது இதுவே முதன்முறை.

மேக்கேதாட்டு
மேக்கேதாட்டு

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் இரு தினங்கள் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், தேசியக்குழு உறுப்பினர்கள் சி.மகேந்திரன், பழனிசாமி, திருத்துறைப்பூண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டார்கள். மாநில துணைச் செயலாளர் வீரபாண்டியன் எழுதிய ’ஒன்றியம் என்ற சொல்’ நூலை ஏஐடியுசி மாநில பொதுச்செயலாளர் மூர்த்தி வெளியிட, தமிழக விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பெரியசாமி பெற்றுக்கொண்டார்.

மாநில பொதுக்கூட்டம்
மாநில பொதுக்கூட்டம்

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய மாநிலச் செயலாளர் முத்தரசன் ``மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்துக்கட்சிக் குழுவினர் டெல்லி சென்று மத்திய அமைச்சரைச் சந்தித்தபோது, அணைகட்ட அனுமதிக்க மாட்டோம் என அவர் தெரிவித்தார். இந்தநிலையில், அணை கட்டியே தீருவோம் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார். இதுபோல் அவர் தொடர்ந்து பேசிவருவது, இரு மாநிலங்களுக்கு இடையே நிலவிவரும் ஒற்றுமையைச் சீர்குலைக்கக்கூடிய செயல். மேலும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே, யார்கோலில் அணை கட்டப்பட்டுள்ளது. அதைக் கண்டித்து ஜூலை 26-ம் தேதி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு அளித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்’’ எனத் தெரிவித்தவர், மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள ஓர் அதிரடியான தீர்மானம் குறித்துப் பேசினார். ``தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெறவுள்ள சுதந்திர தின கிராம சபைக் கூட்டங்களில், மேக்கேதாட்டு அணை கட்டக் கூடாது. தென்பெண்ணை ஆற்றில் கட்டப்பட்டுள்ள யார்கோல் அணையை உடைக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற முடிவெடுத்திருக்கிறோம்’’ ’எனத் தெரிவித்தார். இந்தத் தீர்மானம், இந்திய அளவில் அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்க்கக்கூடியதாக அமைந்துள்ளது. கடந்த காலங்களில் பல முக்கியப் பிரச்னைகளை முன்னிறுத்தி கிராம சபைக் கூட்டங்களில் முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தாலும்கூட, காவிரிப் பிரச்னைக்காக, கிராம சபைக் கூட்டங்களில் இப்படி ஒரு தீர்மானம் நிறைவேற்ற முடிவெடுத்திருப்பது இதுவே முதன்முறை.

அடுத்த கட்டுரைக்கு