Published:Updated:

`ரஷ்யாவுக்கு இந்தியா தருவது பில்லியன் டாலர் கடனில்லை... லைன் ஆஃப் கிரெடிட்!

தமிழ்ப்பிரபா

ரஷ்யாவுக்கு ஒரு பில்லியன் டாலர் கடனளிப்பதாக மோடி அறிவித்தார். இந்தியா இப்போதிருக்கும் சூழலில் வேறு ஒரு நாட்டுக்கு ஒரு பில்லியன் டாலரை கடனாக அளிக்கலாமா என்கிற விமர்சனங்களும் எழுந்துள்ளன.

Modi
Modi

ரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி விளாடிவோஸ்டாக் என்ற இடத்தில், கடந்த 5-ம் தேதி பொருளாதார அமைப்பொன்று நடத்திய கூட்டத்தில் பேசியபோது, இருநாடுகளின் பொருளாதார வளர்ச்சியை வலுவாக்கும் விதமாக ரஷ்யாவுக்கு ஒரு பில்லியன் டாலர் கடன் கொடுப்பதாக அறிவித்தார்.

Modi in Russia
Modi in Russia

இந்தியா இப்போதிருக்கும் சூழலில் வேறு ஒரு நாட்டுக்கு ஒரு பில்லியன் டாலரை கடனாக அளிக்கலாமா என்கிற விமர்சனங்களும் எழுந்துள்ளன. இன்னொருபுறம் இது கடன் அல்ல. லைன் ஆஃப் க்ரெடிட் என்றும் விளக்கம் கொடுக்கப்பட்டது.

ஆகவே, இதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள பொருளாதார நிபுணர் வ.நாகப்பனிடம் பேசினோம். அவர் கூறியதாவது:

நாகப்பன்
நாகப்பன்
பொருளாதார நிபுணர்

``இந்தியா ஒரு பில்லியன் டாலர் தொகையைக் கடனாக ரஷ்யாவுக்குக் கொடுக்கவில்லை. ‘லைன் ஆஃப் கிரெடிட்’ என்ற வகையில்தான் அந்த நிதி தரப்படவுள்ளது. இங்கே நாம் ‘லைன் ஆஃப் கிரெடிட்’ என்றால் என்னவென்று அறிந்துகொண்டு மேற்படி இதுகுறித்து உரையாடுவது சரியாக இருக்குமென நினைக்கிறேன். நாம் ஒருவருக்கு கடன் தருகிறோம். ஆனால், அதைப் பணமாகக் கையில் கொடுக்காமல் அவர்களுக்கு வேண்டிய பொருள்களை அல்லது சேவையை (சர்வீஸ்) நம்மிடம் (நம் நாட்டில் உள்ள எந்த நிறுவனங்களிடமும்) கடனாக பெற்றுக் கொள்ளலாம். அதற்கான தொகையை, செய்துகொண்ட உடன்படிக்கையின்படி பின்னர் செலுத்தலாம் என்பதே ஆகும். இதன்மூலம் நம்முடைய நாட்டின் கையிருப்பும் நம்மை விட்டுப் போகாது. அதே சமயம் நமக்கு வணிகம் நடக்கும். அத்துடன் பணப்பரிவர்த்தனைக்கான உத்திரவாதமும் கிடைக்கும். இதுதான் `லைன் ஆஃப் கிரெடிட்’ என்பதாகும். இந்த மூன்று நலன்களின் அடிப்படையில்தான் ஒருவர் இன்னொருவருக்குக் கடன் கொடுப்பார். இரு நாடுகளிடையே இது அவ்வப்போது நடக்கும் நடைமுறைதான். அப்படியொரு நடைமுறையில்தான் மோடி ரஷ்யாவுக்கு ஒரு கோடி பில்லியன் டாலர் கடன் அளிப்பதாகக் கூறியிருக்கிறார்" என்றார்.