Published:Updated:

கொரோனா: `உலகின் மிகப்பெரிய தடுப்பூசி போடும் பணி; வதந்திகளுக்கு செவி சாய்க்காதீர்!’ - பிரதமர் மோடி

பிரதமர் மோடி
பிரதமர் மோடி ( ANI )

உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசித் திட்டத்தை அடுத்த ஆண்டு செயல்படுத்த இந்தியா தயாராகிக்கொண்டிருப்பதாக, பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.

குஜராத் மாநிலத்திலுள்ள ராஜ்கோட்டில் 1,195 கோடி ரூபாய் செலவில் புதிதாக எய்ம்ஸ் மருத்துவமனை அமையவிருக்கிறது. இன்று பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் இந்த மருத்துவமனை வளாகத்துக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், ``இந்தியாவில் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துகொண்டேவருகிறது.

கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கின்றன. உலகின் மிகப்பெரிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தை அடுத்த ஆண்டு தொடங்க நாம் தயாராகிவருகிறோம். நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் தடுப்பூசி சென்றடைய, பலகட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

ஜனநாயகம் குறித்துப் பாடம்; புதுச்சேரி ரெஃபரன்ஸ்!’ - காங்கிரஸை விமர்சித்த மோடி

2020-ம் ஆண்டு, நமக்குப் பல்வேறு விஷயங்களைக் கற்றுக்கொடுத்திருக்கிறது. இது மிகவும் சவால்கள் நிறைந்த ஆண்டு. உலகின் ஆரோக்கிய மையமாக இந்தியா மாறிவருகிறது. வரும் ஆண்டில் சுகாதாரத்துறையில் இந்தியாவின் பங்கை பலப்படுத்த வேண்டும். தடுப்பூசி போட்ட பிறகும், மக்கள் அனைவரும் முகக்கவசம், தனிமனித இடைவெளி போன்ற அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.

அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி
அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி
ANI

தனிப்பட்ட ஆதாயத்துக்காகவும், பொறுப்பற்ற தன்மையாலும் சிலர் வதந்திகளைப் பரப்பிவருகின்றனர். கொரோனவுக்கு எதிராக நாட்டு மக்கள் போராடுவது கண்ணுக்குத் தெரியாத எதிரியோடு போராடுவது போன்றது. தனிப்பட்ட ஆதாயத்துக்காகச் சிலர் பரப்பும் வதந்திகளை நம்பாதீர்கள். இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும்போது வரும் வதந்திகளை மக்கள் நம்பக் கூடாது. சமூக வலைதளங்களில் வெளியாகும் தகவலை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்கு அனுப்ப வேண்டாம்" என்று பிரதமர் பேசினார்.

அடுத்த கட்டுரைக்கு