ஒட்டுமொத்த உலக நாடுகளின் கவனமும் இன்று உக்ரைன் விவகாரத்தில் தான் இருக்கிறது. ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவால் நான்காவது நாளாக உக்ரைனில் நடந்து வரும் போரால் பரவலாக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என ரஷ்யா கூறிய நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, `நாங்களும் பேச்சுவார்த்தைக்கு தயார். ஆனால், பெலாரஸில் வேண்டாம்' என வேறு நாடுகளைக் குறிப்பிட்டு கூறியிருக்கிறார்.

முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா-வில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இந்தியா, நாங்கள் அமைதியையே விரும்புகிறோம் என நடுநிலையாக வாக்களித்தது. இந்த நிலையில், உத்தரப்பிரதேசம் பைரியாவில் இன்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ``உக்ரைனில் என்ன நடந்தாலும், அமைதி நிலவ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இந்தியா எந்த நாட்டையும் தாக்கியதில்லை. உலக அமைதிக்கு இந்த கொள்கையை அனைவரும் பின்பற்ற வேண்டும்" என்று பேசினார்.
