Published:Updated:

`தமிழக மக்களிடமிருந்து இந்தியா கற்க வேண்டும்!’ - கோவையில் ராகுல் காந்தி

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கோவை மற்றும் திருப்பூரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

மூன்று நாள்கள் தேர்தல் பரப்புரைக்காக, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வந்திருக்கிறார். இதற்காக, சனிக்கிழமை காலை கோவை விமான நிலையம் வந்தார் ராகுல். அங்கு அவருக்கு காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். சித்ரா சந்திப்பில், ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. அங்கு சில நிமிடங்கள் பேசிவிட்டு, ராகுல் குறு, சிறு நடுத்தரத் தொழில் அமைப்பினருடன் சுகுணா ஆடிட்டோரியத்தில் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி
`மோடியைப் பார்த்து நான் பயப்படவில்லை; என்னைத் தொட முடியாது!’ - ராகுல் காந்தி

அப்போது, பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த தொழில் அமைப்பினர் அவரிடம், தங்களது பிரச்னைகளைத் தெரிவித்தனர். பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., கொரோனா பிரச்னை, மூலப்பொருள் விலை உயர்வு போன்ற பல்வேறு பிரச்னைகள் குறித்து தொழில் அமைப்பினர் பேசினர்.

முக்கியமாக, சென்னையிலிருந்து வந்த தொழில் அமைப்பைச் சேர்ந்த ஒருவர், ``நாங்கள் பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். வெடித்து அழுகிற சூழ்நிலைதான். ஆனால், அழுதால் எங்களைச் சுற்றியிருப்பவர்களின் நம்பிக்கை போய்விடும். அதனால் கட்டுப்படுத்திவைத்திருக்கிறோம். எங்களது ஒரே நம்பிக்கை நீங்கள்தான்” என்று கூறினார். அதற்கு பதிலளித்த ராகுல், ``இதுதான் மோடி அரசின் திட்டங்களுக்கு கிடைத்த ரிசல்ட்.

தொழில் அமைப்பினராடு ராகுல் காந்தி
தொழில் அமைப்பினராடு ராகுல் காந்தி

குறு, சிறு நிறுவனங்களை வலுப்படுத்த முடியாமல் நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்ல முடியாது என்று நான் நம்புகிறேன். நாங்கள் ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் உங்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்போம். உங்களது பிரச்னைகளை என்னிடம் சொல்லத் தயங்க வேண்டாம். இந்தப் பிரச்னைகளையெல்லாம் நான் நாடாளுமன்றத்தில் பேசுவேன்” என்றார்.

`மோடியைப் பார்த்து நான் பயப்படவில்லை; என்னைத் தொட முடியாது!’ - ராகுல் காந்தி

இதையடுத்து, மதிய உணவு சாப்பிட்டுவிட்டு ராகுல் காந்தி சின்னியம்பாளையம் சென்றார். அவரது வருகையை ஒட்டி, அங்கு கரகாட்டம், ஒயிலாட்டம், ஜமாப் கலைஞர்களின் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து, அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி,``தமிழகத்துக்கு வருவது எப்போதும் மகிழ்ச்சி. தற்போது, இந்தியாவில் ஒரே நாடு, ஒரே மொழி என ஒரேவிதமான செயல்பாடுகளைக் கொண்டு வர முயல்கின்றனர்.

ராகுல் காந்தி வரவேற்பு
ராகுல் காந்தி வரவேற்பு

பிரதமர் மோடி தமிழ்மொழி, கலாசாரம் போன்றவற்றை இரண்டாம்தரமாகக் கருதுகிறார். இந்தியாவில் பல்வேறுவிதமான கலாசாரம், வாழ்க்கை முறை இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். பல்வேறு மொழிகளுக்கும், சமமான உரிமை இருப்பதாக உறுதியாக நம்புகிறோம்.

மோடி, தனது நான்கு தொழிலதிபர் நண்பர்களுக்காக மட்டுமே செயல்படுகிறார். மீடியாவை மோடி வளைத்துவைத்திருக்கிறார். தமிழக மக்களின் உரிமைகளை ஒவ்வொன்றாக மோடி விற்பனை செய்கிறார். புதிய வேளாண் சட்டங்கள் மூலம், விவசாயிகளின் உரிமைகளைப் பறிக்கிறார். அதனால்தான், நாம் அவர்களை எதிர்க்கிறோம். நாம் விவசாயிகள் பக்கம் நிற்கிறோம்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

தமிழகம் எந்த ஒரு விஷயத்திலும், நாட்டுக்கே முன்னுதாரணமாகத் திகழ்கிறது. கடந்த காலங்களில் தமிழகத்தில் தொழில்துறை சிறந்து விளங்கியது. ஆனால், தற்போது தொழிற்துறையினர் ஜி.எஸ்.டி., பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் மிகுந்த பாதிப்படைந்திருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

மக்கள் புதிய வாழ்க்கை முறையையும், அரசையும் விரும்புகின்றனர். புதிய அரசை வழங்க காங்கிரஸ் முயன்றுவருகிறது. தமிழக மக்கள் பெருமைப்படும், விரும்பும் அரசாங்கத்தை வழங்கவே நான் வந்திருக்கிறேன். இது அரசியல்ரீதியான உறவு இல்லை. எனக்குத் தமிழ் மக்களுடன் குடும்பரீதியான உறவு இருக்கிறது. இது ரத்த சம்பந்தப்பட்ட உறவு. என் பாட்டி, தந்தை மற்றும் என் மீதும் அதிக அன்பைத் தமிழர்கள் வைத்திருக்கிறீர்கள்.

ராகுல்காந்தி
ராகுல்காந்தி

நான் உங்களிடம் எதிர்பார்ப்பதெல்லாம் உங்களின் அன்பை மட்டும்தான். வேறு எதை எதிர்பார்த்தும் நான் இங்கு வரவில்லை. கடைசிவரை உங்களது அன்புக்கு நான் உண்மையானவனாக இருப்பேன். உங்களது குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகத்தான் உங்களைச் சந்திக்க வந்திருக்கிறேன்.

தமிழகத்தில் இப்போதிருக்கும் ஆட்சியைக் கட்டுக்குள் கொண்டு வந்ததுபோல, தமிழ் மக்களையும் கட்டுக்குள் கொண்டுவந்துவிட முடியும் என மோடி நினைக்கிறார். ஆனால், அப்படி நடக்கவே நடக்காது என்பதை நாம் உணர்த்த வேண்டும். தமிழகத்தின் எதிர்காலத்தை, ஆர்.எஸ்.எஸ் தலைமையகம் இருக்கும் நாக்பூரால் நிர்ணயிக்க முடியாது. தமிழக மக்களிடமிருந்து இந்தியா கற்க வேண்டும். உலகத்துக்கே தமிழகம் முன்மாதிரியாகத் திகழ்கிறது” என்றார்.

ராகுல்காந்தி
ராகுல்காந்தி

இதையடுத்து, கருமத்தம்பட்டி பகுதியில் படுகர் இன மக்களைச் சந்தித்த ராகுல் காந்தி, அவர்களுடன் நடனம் ஆடினார். பிறகு, ஒரு பேக்கரியில் கட்சிக்காரர்களடு அமர்ந்து அவர் தேநீர் சுவைத்தார். தொடர்ந்து, ராகுல் காந்தி திருப்பூர் மாவட்டத்தில் பரப்புரையில் ஈடுபட்டார்.

அடுத்த கட்டுரைக்கு