மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லி எல்லையில் விவசாயிகள் நடத்திவரும் `டெல்லி சலோ’ போராட்டம் 9-வது நாளை எட்டியிருக்கிறது. விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் அரசுத் தரப்பில் இரண்டுகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு தோல்வியில் முடிந்தநிலையில், மூன்றாம்கட்ட பேச்சுவார்த்தை நாளை நடைபெறுகிறது.

விவசாயிகள் போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில், அது குறித்து கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பேசியதற்கு இந்தியா தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆன்லைன் நிகழ்வு ஒன்றில் பேசிய ஜஸ்டின் ட்ரூடோ, ``விவசாயிகளின் உரிமைகளை நிலைநாட்ட கனடா என்றுமே துணைநிற்கும்’’ என்று பேசியிருந்தார். மேலும், போராட்டச் சூழல் கவலையளிப்பதாக இருக்கிறது எனவும் ட்ரூடோ கருத்து தெரிவித்திருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதற்கு, `இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என மத்திய அரசு கண்டனம் தெரிவித்திருக்கிறது. ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்து, `இருநாட்டு உறவில் பாதிப்பை ஏற்படுத்தும்’ என்றும் வெளியுறவுத் துறை சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து விளக்கம் கேட்டு கனட தூதருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதாகவும் இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பாக வெளியுறவுத்துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``கனட தூதருக்கு வெளியுறவுத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டு, அவரிடம் நேரில் இந்த விவகாரம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. `கனட பிரதமர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பேசிவரும் கருத்துகள் மூலம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று கனட தூதரிடம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், அவர்கள் இதுபோல் தொடர்ந்து பேசிவந்தால், அது இருநாட்டு உறவுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறோம்’’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.